
தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் புகுத்தப்படும் தனியார் மயம், மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் சூழல் குறித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமி அவர்கள் செப்டம்பர் 18, 2026 அன்று தமிழ்வினை சேனலுக்கு கொடுத்த பேட்டியின் தொகுப்பு:
வணக்கம், தமிழ் வினைக்காக நான் கொண்டல். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்தவுடன் மெல்ல மெல்ல அனைத்துத் துறைகளிலும் தனியாரின் பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட்டில் தூய்மைப் பணியாளர்கள் துறையில் பல பகுதிகள் தனியாருக்குக் கொடுக்கப்படும் என்றும், பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் தனியாருக்கு ஒதுக்கப்படும் என்றும், இன்னும் பல துறைகள் அரசு மற்றும் தனியார் கூட்டு மேலாண்மையின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் பல அறிவிப்புகளைத் தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்டிருந்தது.
இது ஒரு சில துறைகளில் அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன் தரக்கூடிய அனைத்துத் துறைகளிலும் மெல்ல மெல்ல தனியார் துறையை, தனியாரை ஊக்குவிக்கும் வேலையை இந்த அரசு செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக மின்சாரத் துறையில், மின்சார விநியோக உரிமையை- மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய மின்சாரத்தில் தனியாருக்குக் கொடுக்கக்கூடிய வேலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி மின்சாரத் துறையில் உள்ள வேலைகளில் தனியாரை உள்ளே நுழைத்து, அதை பராமரிப்பு செய்வதற்கான வேலைகளைத் தமிழக வெற்றிக் கழக அரசு தனியாரிடம் கொடுக்க இருக்கிறது.
இந்த அரசு அமைந்தவுடன் மிகப் பெருமையாகப் “பள்ளிக் கல்வித்துறையில் அங்கீகாரம் கேட்ட எல்லோருக்கும் நாங்கள் மிக எளிதாக, எந்த லஞ்ச லாவண்யமும் இல்லாமல் கொடுத்துவிட்டோம்” என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தவெக சொல்லத் தவறியது யாருக்கான அனுமதியை உடனடியாகக் கொடுத்தார்கள் என்பதுதான். அதை ஜோஹோ(zoho) நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு வெளிப்படையாகச் சொன்னார், “தவெக அரசு அமைந்தவுடன் தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை உடனடியாக வழங்குகிறார்கள்” என்று பேசியிருந்தார்.
பள்ளிக் கல்வி சார்ந்து இருக்கக்கூடிய துறைகளில் தனியார் மயம், மின்சாரத் துறையில் தனியார் மயம், தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் தனியார் மயம், இப்படி எங்கு பார்த்தாலும் தனியார் மயத்தை நோக்கித் தமிழக வெற்றிக் கழக அரசு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் என்ன நடக்கும் என்றால், மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘திட்டக்குழு’ என்பது மிக முக்கியமானது. கடந்த காலங்களில் அது திமுகவோ, அதிமுகவோ யார் வந்தாலும் இந்தத் திட்டக்குழு என்கிற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்குவார்கள். இந்தத் திட்டக்குழுவும் சில ஆலோசனைகள் வழங்கும். இதன் அடிப்படையில் மக்களுக்கு எது சரியோ அதைச் செயல்படுத்தக்கூடிய ஒரு முறை இருந்தது. ஆனால் இப்போது தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்தவுடன், இந்தத் திட்டக்குழுவைக் கலைக்கக்கூடிய வேலையில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வருகின்றன.

2014-ல் ஒன்றியத்தில் பாஜகவின் மோடி அரசு பதவிக்கு வந்தவுடன் முதலில் செய்த வேலை என்பது திட்டக்குழுவைக் கலைத்ததுதான். திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு ’நிதி ஆயோக்’ என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். இந்த நிதி ஆயோக் என்பது முழுக்க முழுக்க ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற அதிகாரிகளால் நடத்தக்கூடிய ஒரு அமைப்பு. இது மக்களுக்குப் பயன்படக்கூடிய திட்டங்களை விடத் தனியாருக்கு, தனியார் முதலாளிகளுக்குப் பயன்படக்கூடிய திட்டங்களைத்தான் இன்றளவும் வகுத்து வருகிறது.
இன்று இந்தியாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய அனைத்து விதமான சீரழிவுக்கும் இந்த நிதி ஆயோக் என்கிற அமைப்பும் ஒரு காரணம். அந்த அமைப்பைப் போலத்தான் இப்போது தமிழக வெற்றிக் கழக அரசும் அதே பிஜேபியினுடைய கொள்கையை எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் திட்டக்குழுவை மாற்றிவிட்டு, புதிதாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு குழுவை உருவாக்குகிறோம் என்று ஒரு திட்டத்தை முன்மொழிய இருக்கிறது. இதன் மூலம் அதிகாரிகள் கை ஓங்குவதற்கும், மக்களுக்கான சமூகநீதித் திட்டங்களை பின்தள்ளுவதற்குமான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. இது சிறிது சிறிதாகத் தனியார் நிறுவனங்களை நோக்கி, தனியார் முதலாளிகளை நோக்கித் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளையும் தள்ளும் முயற்சிதான். அதிலே மிக முக்கியமானதுதான் தற்போது தமிழ்நாடு அரசு இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடரில் அறிவித்திருக்கக்கூடிய இரண்டு மிக மோசமான சட்டங்கள்.
ஒன்று உயர்கல்வித் துறையில் புதிதாகத் தொடங்கக்கூடிய கல்வி நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சட்டத் திருத்தம். இன்னொன்று வேளாண் துறை சார்ந்து நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான சட்டத் திருத்தம்.
இந்த இரண்டு சட்டத் திருத்தமும் மிக மோசமான சட்டத் திருத்தம்.
முதலாவதாக, உயர்கல்வி கொடுக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கு 100 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டும்தான் தனியாருக்குக் கொடுக்க வேண்டும் என்கிற சட்டத்தை மாற்றி, வெறும் 12 ஏக்கர் மட்டும் வைத்திருந்தாலே ஒரு நிறுவனம், ஒரு முதலாளி, ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கிவிடலாம் என்கிற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் என்ன ஆகப் போகிறது என்றால், அரசுக் கல்லூரிகள் நிலைமை மிக மோசமாகப் பாதிப்படைந்து, தனியார் கல்லூரிகள் புற்றீசல் போல அங்கங்கே திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதைப் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் புகுத்த எம்ஜிஆர் காலம் தொட்டு முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாடு போராடி இப்படிப்பட்ட திட்டங்களை ரத்து செய்தது.

அரசோடு, அரசின் அனுசரணையோடு இதைக் கொண்டுவர அதிகார வர்க்கம், முதலாளி வர்க்கம் துணை வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த உயர்கல்விச் சட்டத் திருத்தத்தைத் தமிழக வெற்றிக் கழக அரசு எதன் அடிப்படையில் கொண்டு வருகிறது என்றால், சமீபத்தில் ஒன்றிய பாஜக அரசு உயர்கல்வித் துறையில் அனைத்தையும் தனியார் மயப்படுத்துவதற்குக் கொண்டுவந்த விபிஎஸ்ஏ சட்டத் திருத்தத்திற்கு ஏதுவாகத்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறது என்கிற சந்தேகம் கல்வியாளர்கள் மத்தியிலும் தமிழ்நாட்டு முற்போக்காளர்கள் மத்தியிலும் உருவாகி இருக்கிறது. ஆகவே இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ்நாட்டின் உயர்கல்வியைத் தனியார் மயப்படுத்தும் வேலையைத் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு செய்ய நினைக்கிறதா என்பதை நாம் கேட்க விரும்புகிறோம்.
அதோடு வேளாண் நிலங்களை ஏதேனும் காரணங்களுக்காக அரசு எடுக்க நினைத்தால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இன்று அந்த நிலையை மாற்றி இதற்காகத் தனியாக ஒரு குழு போட்டு, அந்தக் குழுவே எந்தெந்த நிலங்களை எடுக்கப் போகிறதோ, அந்த நிலங்கள் வேளாண் நிலங்களா இல்லையா? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அந்தக் குழுவுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசு கொடுக்க இருக்கிறது. அந்தச் சட்டத் திருத்தத்தை இரண்டாவது சட்டத் திருத்தமாக முன்மொழிந்திருக்கிறார்கள்.
வேளாண் நிலங்கள் என்பதை எந்தக் காலத்திலும் நாங்கள் வேறு பணிகளுக்காகக் கொடுக்கமாட்டோம் என்று சொல்லித்தான், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைத் தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்தது.
ஆனால் இன்று மிக மோசமாக வேளாண் நிலங்களை அபகரித்துக் கொள்ளும், விவசாயிகளிடமிருந்து வேளாண் நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளும் ஒரு சட்டத் திருத்தத்தை இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்திருக்கிறது என்றால் இவை அனைத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவே மே 17 இயக்கம் நினைக்கிறது.

அனைத்துத் துறைகளும் தனியார் மயம் என்பது திரு. ஜோசப் விஜய் அரசின் கொள்கையா? சமீபத்தில்தான் இந்த அரசின் நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது அதற்கு ஆலோசகராக இருந்த மாண்டேக் சிங் அலுவாலியா என்பவரைத் தமிழக வெற்றிக் கழக அரசு நியமித்தது. இந்த அலுவாலியா என்பவர் இந்தியா முழுக்கப் பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததிலும், தனியார் நிறுவனங்களையும், ’உலகமயமாக்கல்’ என்கிற வகையில் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான மிக முக்கியக் காரணமாக இருந்தவர். அவரின் ஆலோசனையில்தான் இந்த வேலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு செய்கிறதா என்கிற கேள்வியை நாம் கேட்க விரும்புகிறோம்.
தமிழ்நாடு என்பது ஒரு தனித்துவமான மாநிலம். இங்கு சமூக நலத் திட்டங்களும், அதற்கு எந்தவிதத் தொந்தரவும் செய்யாத திட்டங்களும் உருவாக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு, இந்தியாவிலே இன்று ஒரு தனித்துவமான மாநிலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்தத் தனித்துவத்தை அழித்தொழிக்கத்தான் ஒன்றியத்தில் அமைந்திருக்கிற எந்த அரசாக இருந்தாலும், தொடர்ச்சியாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2014-க்குப் பிறகு, மோடி அரசு தமிழர்கள் தனித்துவத்தை அழிப்பதற்காக அனைத்து வேலையும் செய்து கொண்டிருக்கிற வேளையில், மோடி அரசின் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழக அரசு கையில் எடுத்திருக்கிறதா? என்பதை நாம் கேட்க விரும்புகின்றோம்.
ஒருவேளை இதை நீங்கள் (தவெக) மறுப்பீர்கள் என்றால் அனைத்துத் துறைகளிலும் புகுத்தப்படும் இந்தத் தனியார் மயத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள். தமிழ்நாட்டிற்கான தனியான சமூக நீதியின் அடிப்படையிலான திட்டங்களை வகுப்பதற்கான கொள்கை வடிவமைப்பாளர்களை உருவாக்குங்கள். இல்லையேல் தமிழ்நாடு மிக மோசமான நிலைமைக்கு உங்கள் ஆட்சிக் காலத்தில் செல்லும், அதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை தவெகவுக்கு எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். உங்கள் அரசால் கொண்டுவரப்படுகிற மக்களுக்கு எதிரான அனைத்துத் தனியார் திட்டங்களையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை இந்தக் காணொளி வாயிலாகக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
முழு காணொளி :