தமிழர் அடையாளங்களின் மீது தொடரும் சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதல்

தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் இலங்கைப் பேரினவாத அரசு முதல் சிங்கள இனவாதிகள் வரை யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு சமீபத்திய இரு நிகழ்வுகளே சாட்சியாக இருக்கின்றன.

ஒன்று, உலகத் தமிழர்களின் பெருமைமிகு பேருருவமான தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலையை, அவரது 39-வது நினைவு நாளில் அனுசரிக்க விடாமல் அகற்றியதன் மூலம், இலங்கையின் இடதுசாரி முகமூடி கிழிந்து அதன் பேரினவாத முகம் அம்பலமாகியுள்ளது.

மற்றொன்று, ஈழத் தமிழ் பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன் மீது சிங்களவாதிகள் தொடுக்கும் இணையவழி வெறுப்புப் பிரச்சாரம். அது அவர்களின் கோரமான இனவாத முகத்தை உலகிற்கே வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய – இலங்கை அரசுகள் என்றுமே அமைதி வழியில் தீர்வு காண விரும்பாது, போரையே விரும்பும் என்பதை தனது 12 நாள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டத்தின் மூலம் உலகிற்கே உணர்த்திவிட்டுச் சென்றவர் தியாக தீபம் திலீபன். தண்ணீரைக் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநிலை இருந்து அவர் உயிர் நீத்தார்.

திலீபனின் நினைவை தலைமுறைகளுக்கு கடத்தும் வகையில், 39 ஆண்டுகளாக அவரது நினைவேந்தல் நாட்களான செப்டம்பர் 15 முதல் 26 வரை, அவரது நினைவைச் சுமந்த ஊர்தி நல்லூர் வீதியில் இருந்து தாயகமெங்கும் வலம் வருவது வழக்கமாக தொடர்கிறது. இம்முறையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) ஏற்பாட்டில் செப்டம்பர் 15 அன்று அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து தியாக தீபம் திலீபனின் நினைவாக அலங்கரிக்கப்பட்ட நினைவு ஊர்தி புறப்பட்டது.

இந்த ஊர்தி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகச் சென்றது. செப்டம்பர் 26 அன்று திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலின் நிறைவு நாளன்று, இவ்வூர் ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நினைவாலயத்தை வந்தடைந்தது. ஊர்தி வலம் நல்லூரை வந்தடைந்த பின்னர் செப்டம்பர் 27 அதிகாலையில் நல்லூர் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலை இலங்கைக் காவலர்களால் அகற்றப்பட்டிருக்கிறது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரின் சிலையை பொது வெளியில் வைப்பதை அனுமதிக்க முடியாது என இடதுசாரி அரசு என்று சொல்லிக் கொள்ளும் அனுராவின் JVP-NPP அரசு  இனவெறியின் உச்சகட்டமாக திலீபனின் நினைவுச் சின்னத்தை அகற்றியுள்ளது.

தமிழர்களின் அடையாளமான திலீபனின் நினைவுச் சின்னத்தை இலங்கை இனவாத அரசு அகற்றியது போலவே, தன்னை தமிழ் பேசும் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்னும் கனடா தமிழ் நடிகைக்கும்  சிங்கள இனவாதிகளால் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. 

 “நான் மைத்ரேயி ராமகிருஷ்ணன், என் அடையாளம் தமிழ் – நான் எப்போதும் தமிழராக இருப்பதை பெருமையாக வெளிப்படுத்துவேன்” என தனது ஈழத் தமிழர் அடையாளத்தை கூறியதற்காக நடிகை மைத்ரேயி மீது இணையவழி இனவெறித் தாக்குதல் தொடர்கிறது.

கனடாவைச் சேர்ந்த இந்த இளம் நடிகையின் பெற்றோர், இலங்கையில் நடந்த போரின் காரணமாக கனடாவிற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் அகதிகள். 2020-ல் Netflix-ல் வெளியான `Never Have I Ever` தொடர் மூலம் பிரபலமான இவர், தற்போது `Best of the Best` படத்தில் ‘மாயா’ என்ற தமிழ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2019-ல் இருந்தே ‘என் நாடு கனடா, என் பண்பாடு தமிழ், என் அடையாளம் ஸ்ரீலங்கன் அல்ல’ என்று தெளிவாக சொல்லி வரும் இவர், TIME இதழுக்கும், பட இயக்குனரான ஹசன் மின்ஹாஜின் பேட்டியிலும் ‘நான் ஒரு தமிழீழப் பெண்’ என்று ஆணித்தரமாக பதிவு செய்திருந்தார்.

இந்த ஒற்றை வாக்கியமே இன்று அவருக்கு எதிரான ஒருங்கிணைந்த இணையத் தாக்குதலாக மாறியுள்ளது. ‘நான் இலங்கையர் அல்ல’ என்று தன்னை இனப்படுகொலை செய்த தேசத்தின் பெயரை சுமக்க மறுத்ததே அவர்களை உசுப்பேற்றியுள்ளது.

ஒரு தமிழ்ப் பெண் தன்னை ‘தமிழ்’ என்று சொல்வதைக் கூட சகிக்க முடியாத அளவுக்கு சிங்களப் பேரினவாதம் புரையோடிப் போயுள்ளதையே இது காட்டுகிறது. சிங்கள இணையவாசிகள் மட்டுமல்ல, “இந்தியர் அல்லாத ஒருவர் ஏன் பரதநாட்டியம் மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும்?” என்று சில வட இந்திய இணையவாசிகளும் கேள்வி எழுப்ப, புலம்பெயர் தமிழர்கள் “பரதநாட்டியமும் கூத்தும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம், அதற்கு இந்திய குடியுரிமை தேவையில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

2025-ல் நியூ ஜெர்சியில் நடந்த இலங்கைத் தமிழ் சங்க விழாவில், “தமிழராக இருக்க தமிழ் சரளமாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை, மரபு என்ற பெயரில் வரும் அழுத்தங்களையும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தையும் இளைஞர்கள் தூக்கி எறிய வேண்டும், முள்ளிவாய்க்கால் முதல் காசா வரையிலான ஒடுக்கப்படும் மக்களுக்காக துணை நிற்க வேண்டும்” என்று பேசியிருந்தார் மைத்ரேயி.

அவர் கூறியது தனிப்பட்ட கருத்து அல்ல, அது ஒரு தலைமுறையின் குரல். இன்று IMDb Rating, AI Prompt, memes போன்ற இணையக் கருவிகள் சிங்களப் பேரினவாதிகளின் புதிய ஆயுதங்களாக மாறியுள்ள நிலையில், தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழர்களும் ஈழத் தலைவர்களும் மைத்ரேயிக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்.

நல்லூரில் திலீபன் சிலையை தூக்கி எறிவதும், திரைபிரபலமான ஒரு தமிழ்ப் பெண் தன்னை தமிழ் என்று சொல்வதைக் கூட சகிக்க முடியாமல், IMDb-யில் (திரையுலகினர் பற்றிய தரவுத் தளம்) தாக்குதல் நடத்துவதும் வேறு வேறு அல்ல. இரண்டும் தமிழினி அடையாள அழிப்பின் இரு வடிவங்கள்.

இலங்கையின் இடதுசாரி என்று அழைத்துக் கொள்ளும் அனுரா அரசு, தமிழர் பகுதிகளில் பௌத்த பேரினவாத மதகுருமார்களுக்கு கலவரம் செய்ய அனுமதி வழங்குவது, தமிழர் கோவில்களில் பௌத்த விகாரைகளை அமைப்பது, தமிழர் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது வரை என முந்தைய அரசாங்கத்தின் நீட்சியாகவே தொடர்கிறது. இதே இனவாதத்தின் தொடர்ச்சியே திலீபனின் சிலை அகற்றம்.

இடதுசாரி அரசியலை இனவாத அரசியலோடு கலந்த திரிபுவாத கட்சி ஜெ.வி.பி. சிங்கள அரசிற்கும், புலிகளுக்கும் இடையே உருவான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டுமென போராடியது இன்றைய அதிபராக இருந்தவர் அனுரா. அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்திய அமெரிக்க அரசிற்கு கூலி வேலை பார்த்தது அனுராவின் ஜெவிபி கட்சி. இக்கட்சி அமெரிக்க தூதரோடு ரகசியமாக நடத்திய உரையாடல்கள் விக்கிலீக்ஸ் கேபிளில் வெளியானது.

புலிகள்- இலங்கை அரசுக்கிடையே 2002 -ல்  நடந்த அமைதி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து அதனை ரத்து செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்ததோடு  மட்டுமல்லாமல், சிங்களப் படைகளைக் கொண்டு தமிழர் மீது போர் தொடுக்க வலியுறுத்தியது இதே அனுராவின் கட்சி. சிங்கள ராணுவத்திடையே சென்று போர்-வெறி உரைகளை நிகழ்த்தினர் ஜெவிபி கட்சியினர். ராஜபக்சேவுடன் கூட்டணி ஆட்சியை நடத்திய ஜெவிபி தமிழர் பகுதிகளில் இனபப்டுகொலை போரை நடத்த வைத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இனப்படுகொலை செய்த சிங்கள ராணுவத்தினரை விசாரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி கூறியதும் இதே கட்சி தான்.

பௌத்த பேரினவாத மதக் கொள்கையை வைத்திருக்கும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்களின் அடையாளமான போராளிகளின் நினைவுச் சின்னங்களை அழிக்காமல் ஓயாது என்பதற்கு திலீபனின் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டதே சாட்சி. அதே போல, பேரினவாத மக்களின் மனநிலையிலும் எந்த மாற்றமும் ஏற்படாது, தமிழ் இனத்தின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது என்பதற்கு மைத்ரேயி மீதான தாக்குதலே சாட்சி.

பாலஸ்தீனத்தின் மீதான  குடியேற்ற காலனிய அரசியலும், சிங்கள பேரினவாதத்தின் ஈழத்தமிழர்கள் மீதான நில-அரசியல்-பொருளியல் ஆக்கிரமிப்பும் வேறுவேறானதல்ல. இசுரேல்-பாலஸ்தீன ஒற்றுமை, ஒரே நாடு என எவ்வாறு பேச இயலாதோ, எவ்வாறு இந்தியா-இங்கிலாந்து இணைந்து ஒரே நாடாக இருக்க வேண்டுமென சொல்ல இயலாதோ, எவ்வாறு பாகிஸ்தான்-பங்களாதேசம் ஒன்றாக ஒரேநாடாக இயங்க இயலாதோ அதே போன்றே ஆங்கிலேய காலனியால் செயற்கையாக இணைக்கப்பட்ட தமிழர் சிங்களர் தேசங்கள் ஒன்றாய் இருக்க இயலாது என்பது வரலாற்று உண்மை.

“இன அடையாளத்தை அழித்து, இனப்படுகொலை செய்யும் ஒரு அரசிடம் இருந்து பிரிந்து செல்லும் உரிமையை, ஐநாவின் சுயநிர்ணயக் கோட்பாடு சொல்கிறது”. அதன்படி தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசுடன் இணக்கமாக தமிழர்களால் வாழவே முடியாது. தமிழர் பகுதிகளை உள்ளடக்கிய தமிழீழமே, தமிழர்களின் அடையாளங்களை தக்கவைக்கும் ஒரே வழியாகும்.

‘சுதந்திர சோசலிச தமிழீழமே இனமே ஒரே தீர்வு’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »