ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: தேர்தல் ஆணைய முறைகேடு, சாஸ்திரா வழக்கு, மேகமலை மக்கள் வெளியேற்றம் குறித்தான மே 17 இயக்கம் ஊடக சந்திப்பு

அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்தும், சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், மேகமலை-வருசநாடு பகுதியில் புலிகள் காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றுவது குறித்தும், ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் விரிவான ஊடக சந்திப்பை வழங்கியிருந்தார். கடந்த செப்டம்பர் 25, 2026  அன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் பேசியவை:

ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மே 17 இயக்கத்தின் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்திய அளவிலும் சரி, தமிழ்நாடு அளவிலும் நிறைய நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் கவனத்தில்  எடுக்கக்கூடிய விடயங்களை மட்டும் நாங்கள் இப்போது ஊடக சந்திப்பிலே உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

டெல்லியிலே இருக்கக்கூடிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள், சக தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடைய கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்கின்ற குற்றச்சாட்டை, அவருக்கு இணையாக இருக்கக்கூடிய இரண்டு அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் ஒரு கூட்டு முடிவு எடுக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவது என்பது ஒரு சர்வாதிகார போக்கு. இதில் மற்றவர்களின் கருத்தை கேட்பது மட்டும் இல்லாமல், அவர்கள் கருத்துக்கு எதிராகவே ஞானேஷ் குமார் நடந்து கொண்டிருக்கிறார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக SIR என்று சொல்லப்படுகின்ற ‘சிறப்பு வாக்காளர் திருத்தம்’ குறித்தான நடவடிக்கையை, தேர்தல் ஆணையத்தில் இருக்கக்கூடிய பிற அதிகாரிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். பல லட்சம் வாக்காளர்கள், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கோடிக்கணக்கிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வந்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது நீதிமன்றத்தைப் போல, உச்சநீதிமன்றம் எப்படி தன்னாட்சியாக இருக்கிறதோ, பாராளுமன்றம் எப்படி தன்னாட்சியாக இருக்கிறதோ, அதே போல ஒரு தன்னாட்சி பெற்ற, இறையாண்மை கொண்ட நிறுவனமாக தேர்தல் ஆணையம் இருந்து வந்த காரணத்தினால்தான் தேர்தலின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையம் எந்த கட்சி சார்பும் இல்லாமல், எந்த அதிகார வர்க்க சார்பும் இல்லாமல், தன்னிச்சையாக ஒரு நடுநிலையான தேர்தலை நடத்தினால் மட்டும்தான் இந்தியாவிலே ஜனநாயகம் என்பது நிலைத்து நிற்கும்.

ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், தேர்தல் ஆணையமே ஒரு சர்வாதிகார போக்கோடு பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியிருக்கிறது. தேர்தல் ஆணையம் அப்பட்டமாக ஆளும் கட்சிக்கு சார்பாக இருக்கிறது என்றாலே தேர்தல் என்பதே மோசடி என்பதாக ஆகிவிடுகிறது. ஆக இந்தியாவிலே கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நடந்த தேர்தல், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் SIR-க்கு பிறகு நடந்த தேர்தல் அனைத்துமே மோசடியான தேர்தலாக இருக்கிறது.

SIR என்பது யாருடைய நலனுக்காக கொண்டு வரப்பட்டது என்கின்ற கேள்வி வருகிறது. இந்த SIR என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவும், பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றிக்கு சார்பாகவும் நடத்தப்பட்டிருக்கிறது. பல தொகுதிகளிலே இஸ்லாமிய வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்களுடைய பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இது பல இடங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றியிருக்கிறது. அந்த வகையிலே மேற்கு வங்கம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. மேற்கு வங்கத்தினுடைய முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இதற்காக உச்சநீதிமன்றத்தில், SIR நடந்து கொண்டிருக்கும்போதே, தனது மாநிலத்திற்காக நேரடியாக அங்கே ஆஜராகி வழக்காடினார்.

இன்றைக்கு என்ன நடந்திருக்கிறது? மேற்கு வங்கத்திலே மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டு, அவரது கட்சி ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு அங்கே கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இப்படியான ஒரு ரவுடித்தனமான ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில் கட்டவிழ்த்திருக்கிறது. இதேபோன்று மகாராஷ்டிராவிலும் இந்த தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிவசேனா வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியினுடைய தலைவர் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.

இவர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இந்த தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவினுடைய தேர்தலையே அவர் தன்னுடைய சார்பு கட்சிக்கு, பாரதிய ஜனதா கட்சிக்கு சார்பாகவே திரித்திருக்கிறார், மடைமாற்றம் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்த கட்டத்தில்தான் தமிழ்நாட்டிலே முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கேரளத்திலே முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், மேற்கு வங்கத்தினுடைய முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த மூன்று பேருமே தேர்தலில்- அவரவர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரவர் தொகுதிகளிலே மிகப்பெரிய அளவிற்கான வாக்காளர்கள் நீக்கம் நடைபெற்றிருக்கிறது.

நாங்கள் கடந்த திமுக ஆட்சியின் பொழுது (SIR நடந்து கொண்டிருக்கும்போது) எஸ்.ஐ.ஆர்-ஐ கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கின்றோம். அன்றைக்கே நாங்கள் சொல்லியிருக்கின்றோம் – முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுடைய கொளத்தூர் தொகுதியிலே கிட்டத்தட்ட 70 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்கள் நேற்றைக்கு தங்கள் கருத்தை அறிவித்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலே வாக்காளர் நீக்கம் என்பதை பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு செய்திருக்கிறது. இதே நிலை அனைத்து கட்சிகளுக்கும் அவரவர் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

மு.க. ஸ்டாலின் அவர்களோ, பினராயி விஜயன் அவர்களோ, மம்தா பானர்ஜி அவர்களோ, மூன்று பேரும் நரேந்திர மோடியை எதிர்க்கக்கூடிய மிக மிக முக்கியமான முதலமைச்சர்கள். இவர்கள்தான் பாரதிய ஜனதா கட்சியினுடைய நகர்வுகளை, அவர்கள் செய்யக்கூடிய ஜனநாயக விரோதத்தை எல்லாம் கேள்வி கேட்டவர்கள். இவர்கள் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் தோற்கடிக்கப்படுவதற்கு ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி துணை போயிருக்கிறார் என்றால் எவ்வளவு கேவலமான, கீழ்த்தரமான அரசியல் இந்தியாவில் நடக்கிறது! இப்படி ஒரு தேர்தலையே அவர்கள் மாற்ற முடியும், வாக்காளர்களை நீக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது என்றால், இந்த நாட்டில் ஜனநாயகத்தின் மேல் யாருக்கு நம்பிக்கை இருக்கும்?

இப்படிப்பட்ட ஒன்றுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றமும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பத்தான் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறது, தீர்ப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவினுடைய ஜனநாயகம் எதில் ஊன்றி நிற்கிறது என்றால்- பாராளுமன்றத்தில் ஊன்றி நிற்கிறது, உச்சநீதிமன்றத்தில் ஊன்றி நிற்கிறது, தேர்தல் ஆணையத்தில் ஊன்றி இருக்கிறது. இந்த மூன்றும் இந்திய ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான தூண்கள். வட இந்திய பத்திரிகைகள் அனைத்துமே பாரதிய ஜனதா கட்சி சார்பான நிலைப்பாடுகளிலே பொய் செய்திகளை பரப்புவது, அவதூறுகளை பரப்புவது என்பதில் முழுநேர வேலை செய்கிறார்கள். இதிலிருந்து இந்திய ஜனநாயகம் என்பது தோல்வி அடைந்த ஜனநாயகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் எச்சரிக்க விரும்புகின்றோம்.

தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், மராத்தியர்கள், கன்னடர்கள், வங்காளிகள், பஞ்சாபிகள், கஷ்மீரிகள் என்று எல்லாரும் எதை நம்புறோம்? இந்தியா ஒரு ஜனநாயகமாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் எல்லாருமே வரி கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இவர்கள் நடத்தக்கூடிய தேர்தலை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த தலைமைத் தேர்தல் அதிகாரியாக தமிழன் எவனும் வந்ததில்லை. தமிழர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்கக்கூடிய அமைச்சர்களோ, அதற்குரிய ஜனாதிபதிகளோ, பிரதம மந்திரிகளோ, தலைமைத் தேர்தல் அதிகாரியோ யாரும் வரவில்லை. இருந்தாலும் நாங்கள் ஏன் நம்புகிறோம் என்றால், நீங்கள் நடுநிலையாக இருப்பீர்கள், ஜனநாயகவாதியாக இருப்பீர்கள் என்று நம்பித்தான் இந்த ஜனநாயகத்தில் அனைத்து மக்களும் பங்களித்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லாரும் வாக்கு செலுத்துகிறோம், வரி செலுத்துகிறோம் எதற்கு? ஜனநாயகம் நடுநிலையாக இருக்கும் என்பதற்காகத்தான். ஆனால் இப்போது உச்சநீதிமன்றமும் நடுநிலையாக இல்லை, தலைமைத் தேர்தல் அதிகாரியும் நடுநிலையாக இல்லை, பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை. அப்படியென்றால் இந்த ஜனநாயகம் எங்களுக்கு என்ன செய்கிறது என்ற கேள்வி வந்துவிட்டது.

நாங்கள் ஏன் உங்களுக்கு வரி கொடுக்க வேண்டும்? எங்களுக்கான வரியும், எங்களுக்கான நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. எங்கள் பள்ளிக்கூட நிதியைக் கூட பாரதிய ஜனதா கட்சி ஒதுக்குவதில்லை. எங்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்தி மொழியை எங்கள் மேல் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு விருப்பமில்லாத நீட் தேர்வை எங்கள் மேல் திணிக்கிறார்கள். இத்தனைக்கும் நாங்கள் (தமிழர்கள்) லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணத்தை வரியாக இந்திய அரசுக்கு கொட்டிக் கொடுக்கிறோம்.

ஆனால் ஒழுங்காக தேர்தல் நடத்த முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் எங்களுடைய தலைவர்கள் எல்லாம் தோற்கடிக்கப்படுவார்கள், அதை டெல்லியில் இருக்கிறவன் முடிவு செய்வான் என்றால், இது என்ன ஜனநாயகம்? டெல்லியில் இருக்கக்கூடிய, தமிழனுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒருவன், கீழடி அறிக்கையை மாற்றுகிறான். கீழடி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறான். தமிழ்நாட்டு அறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் கொடுத்த தமிழ்நாட்டினுடைய தொல்லியல் ஆதாரங்களைப் பற்றிய அறிக்கையை, டெல்லியில் இருக்கக்கூடிய தமிழ் மொழி தெரியாத, தமிழனுக்கு தொடர்பில்லாத ஒரு நபர் தடுக்க முடிகிறது. இந்திய அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது, மோடி அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது.

அப்படியென்றால்  இந்த நாட்டில் என்ன நடக்கிறது? இந்தியாவில் பிரதம மந்திரியை கேள்வி கேட்டால், அந்த கேள்வி கேட்கக்கூடிய முதலமைச்சரை தோற்கடித்துவிடுவீர்களா? அதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி துணை போகிறார். அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளி வைக்கிறது, எடுக்க மாட்டேன் என்கிறது. எங்கள் வரிப்பணம் மட்டும் வேண்டும், ஆனால் எங்களை அவமானப்படுத்துவது மட்டுமே டெல்லிக்காரன் வேலையாக இருந்தால், எங்கள் மக்கள் எல்லாம் யார்? டெல்லிக்கு அடிமைகளா?

இந்த தலைமைத் தேர்தல் அதிகாரியை பதவிநீக்கம் செய்து கைது செய்யப்படவில்லை என்றால், இந்த ஜனநாயகத்தின் மேல் அவநம்பிக்கை வரும். ஒரு காலத்தில் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலை நிராகரிக்க வேண்டும். நேற்று CJP அந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் கீழ்த்தரமான தேர்தலை எதற்காக நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? இந்த கட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக தேர்தலை நிராகரியுங்கள். தேர்தல் ஒழுங்காக நடக்கவில்லை.

நாங்கள்  (மே 17 இயக்கம்) இந்த SIR வந்தபோது, தமிழ்நாட்டுக்கு SIR-ஐ கொண்டு கொண்டு வந்தபோது எதிர்த்தோம். திமுக போதுமான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. SIR-ஐ நடக்க விட்டிருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் எதற்கு SIR-ஐ நடக்க விட்டீர்கள்? அன்றைக்கு நாங்கள் எதிர்த்தோம், முற்றுகையிட்டோம், இதை கேள்வி கேட்டோம். அன்றைக்கு எந்த இடத்திலிருந்தும் எங்களுக்கு ஆதரவு வரவில்லை.

இன்றைக்கு என்ன நடந்தது? தமிழ்நாட்டில் எந்த கட்சி வேண்டுமானாலும் தேர்தலில் வெற்றி பெறட்டும், எங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை. எந்த கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நாங்கள் பேசவில்லை. நாளைக்கு இதே நிலை தவெக-வுக்கு வரலாம், அதிமுக-வுக்கு வரலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது கட்சி பிரச்சனை அல்ல, இந்த நாட்டினுடைய ஜனநாயக பிரச்சனை. நீங்களும் நாளை எதை நம்பி ஓட்டுப் போடுவீர்கள்? இவர்கள் எல்லாம் ஒழுங்காக இருப்பார்கள், ஒழுங்காக தேர்தல் நடத்துவார்கள் என்று சொல்லி ஓட்டுப் போடுகிறோம். இவர்கள் நம் பெயரை எடுத்துவிடுவார்கள், தேர்தலை முறைகேடாக செய்வார்கள் என்றால், இந்த தேர்தலை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். எல்லா கட்சிகளும் சேர்ந்து பேச வேண்டும். எல்லாருமே தேர்தல் ஆணையத்துக்கு பயந்துகொண்டும், பிஜேபிக்கு பயந்துகொண்டும் இருந்தால் SIR-ஐ எதிர்த்து எந்த கட்சிகள் பேசினீர்கள்? எந்த கட்சி பேசியது? அப்போது இருந்த ஆளுங்கட்சியே பேசவில்லை, பெரிய அளவுக்கு போராட்டத்தை நடத்தவில்லை. முன்னாள் முதல்வர், அவர் அவரது தொகுதியிலே அத்தனை நலத்திட்டங்களை செய்தும் கூட தோற்கடிக்கப்படுகிறார். காரணம், 70,000 – 1,00,000 பேர் வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையை எவ்வளவு காலம் அனுமதிப்பது? உச்சநீதிமன்றம் இது குறித்த ஒரு வழக்கைப் பற்றி எந்த முடிவும் எடுக்காமல் விட்டுவிட்டது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது – என்று இருந்த அந்த முறையை மாற்றினார்கள். இப்போது நரேந்திர மோடி நியமனம் செய்த, பாரதிய ஜனதா கட்சி நியமனம் செய்த தேர்தல் ஆணையர்தான் இருக்கிறார். இவர் ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர் அல்ல. இந்த தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கிற முறையை மாற்றியது பாரதிய ஜனதா கட்சி அரசு. பாஜகவுக்கு தேவைப்படுகிற தேர்தல் ஆணையரை கொண்டு வந்தார்கள். அதனுடைய விளைவுதான் SIR. இந்த SIR-ல்தான் பீகாரில் இருந்து எல்லா இடத்திலும் முறைகேடுகள் நடந்தன. இந்தியாவில் நடந்த தேர்தல் என்பது முறைகேடான தேர்தல். இதற்கு உச்சநீதிமன்றம் வக்காலத்து வாங்கியிருக்கிறது, உச்சநீதிமன்றம் துணை போனது.

இரண்டு நாளைக்கு முன்பு சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் நில ஆக்கிரமிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. சாஸ்திரா பல்கலைக்கழகம் 55 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு அரசின் நிலத்தை ஆக்கிரமித்து பல்கலைக்கழகம் கட்டியிருக்கிறான். அந்த ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்பு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கும் வழக்கு சென்றுவிட்டது. ஒரு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி “ஏன் அந்த இடம் வேண்டும்?” என்று தமிழ்நாடு அரசைப் பார்த்து கேட்கிறார்.

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கேட்கின்ற கேள்வியா அது? அவர் தமிழ்நாடு அரசு வழக்கறிஞரை பார்த்து என்ன கேட்கிறார் என்றால், “உங்களுக்கு அந்த நிலம் தேவையா? ஏன் இந்த நிலம்தான் வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறீர்கள்? அவர்கள் ஒரு கல்வி சேவையை செய்கிறார்கள். அந்த நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கட்டப்பஞ்சாயத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செய்கிறார். ஒரு தனியார் பல்கலைக்கழகம் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த தனியார் பல்கலைக்கழகம் (சாஸ்திரா பல்கலைக்கழகம்) சேவையா செய்கிறான்? காசு கொடுத்துதான் அங்கு படிக்க முடியும். லாபத்துக்கு இயங்கக்கூடிய ஒரு நிறுவனம் சாஸ்திரா நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்குவது உச்சநீதிமன்ற நீதிபதி என்றால், உச்சநீதிமன்ற நீதிபதியினுடைய நடத்தையை நாம் என்னவென்று சொல்வது?

நாளைக்கு இதே மாதிரி ஒரு இடத்தை, அரசு நிலத்தை ‘நான் பள்ளி கட்டுகிறேன்’ என்று சொல்லி நாங்கள் ஆக்கிரமிக்கலாமா? அப்போது இதே வார்த்தையை இதே உச்சநீதிமன்ற நீதிபதி பேசுவாரா? நாங்களெல்லாம் 50 ஏக்கர், 100 ஏக்கர் ஆக்கிரமித்து பல்கலைக்கழகம் கட்டுகிறோம், பள்ளிக்கூடம் கட்டுகிறோம் என்றால் நீதிபதி ஒத்துக்கொள்வாரா? சாஸ்திரா பல்கலைக்கழகம் என்றால் ஏன் தனியாக இந்த மாதிரியான சிறப்பு கவனம் வருகிறது? உயர் ஜாதிக்காரனாக இருந்தால் அவனுக்கு நீதிமன்றமே வேறு மாதிரி இருக்குமா?

தமிழ்நாட்டினுடைய வழக்கறிஞரிடம் அந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வாதம் நடத்துகிறார். என்னவெல்லாம் நடத்துகிறார் என்றால், “நீங்கள் கல்விக் கொள்கைகளை எல்லாம் நிறைவேற்றுகிறீர்களா? தமிழ்நாடு அரசு இன்றைக்கு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்று அன்றைக்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்த உடனே நடைமுறைப்படுத்தி விட்டாயா?” என்று கேட்கிறார். அதற்கு தமிழ்நாடு வழக்கறிஞர் சொல்கிறார், “அதை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் இந்த இடத்தை கேட்கின்றோம். இந்த இடம் ஆக்கிரமித்து 20 ஆண்டு காலம் ஆகிறது” என்று சொல்கிறார். “ஏன் வேறு இடத்தை நீ வாங்கிக்கொள்ளக் கூடாதா? இந்த இடமேதான் வேண்டுமா?” என்று பேசுவது அந்த சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞர் அல்ல, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பேசுகிறார்.

ஆனால் இதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எந்தவித கள ஆய்வு அறிக்கையும் பெற்றுக்கொள்ளாமல், ஆய்வு செய்யாமல், மேகமலை, வருசநாடு, மயிலாடும்பாறை – அங்கே இருக்கக்கூடிய கிட்டத்தட்ட 98-லிருந்து 102 கிராம மக்களை வெளியேறச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார். இந்த வருசநாடு, கண்டமனூர் பகுதி, மேகமலை, கடமலைகுண்டு, மயிலாடும்பாறை, நரியூத்து இதுபோன்ற ஒன்பது ஊராட்சிகளை, காலம் காலமாக மக்கள் வசிக்கக்கூடிய பகுதியை வெளியேறச் சொல்கிறார். ஆக்கிரமிப்புக்கு எந்த ஆதாரத்தையும் உச்சநீதிமன்றம் பெற்றுக்கொள்ளவில்லை, கேள்வி கேட்கவில்லை. வருசநாடு ஜமீன், கண்டமனூர் ஜமீன் போன்றவை 100, 150 வருடங்களுக்கு முன்பே இருந்ததாக வெள்ளையர்கள்  ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அங்கே கல்வெட்டுகள் இருக்கின்றன. முதுமக்கள் தாழி கிடைத்திருக்கிறது. 2500, 2700 வருடங்களுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான முதுமக்கள் தாழி கிடைத்திருக்கிறது. எது காடு, எது ஊர் என்று எந்த சர்வேயும் கிடையாது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் மக்களை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லி வெளியேற்றக்கூடிய உத்தரவை கொடுத்துவிட்டு, “இதை மாநில அரசு செய்யவில்லை என்றால், நான் ராணுவத்தை வரவழைப்பேன்” என்ற ஒரு உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதி கொடுக்கிறார்.

ஆனால் அதே நீதிபதி சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் 50 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் நீதிமன்றமா? இவரெல்லாம் நீதிபதியா? இதை யார் கேட்பது? நீதிமன்றத்தை கேள்வி கேட்கக் கூடாதா? நீதிபதியை கேள்வி கேட்கக் கூடாதா? ஏற்கனவே இந்த நீதிபதி மேல் ஊழல் குற்றச்சாட்டு கொலீஜியத்தில் இருக்கிறது. அந்த வழக்கை எல்லாம் விசாரித்து அப்பவே வெளியே அனுப்பியிருந்தால் இந்த மாதிரி தீர்ப்பு வந்திருக்குமா? ஒரு லட்சம் தமிழர்களை வெளியேற்றுவதற்கு டெல்லியிலிருந்து உத்தரவு போடுகிறான். மக்களை அவர்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றத்தான் ராணுவமா? சைனாக்காரனிடம் போய் சண்டை போட்டு அங்கு இருக்கிற நிலத்தை வாங்க இயலாத உன்னுடைய ராணுவத்தை கொண்டு, என் மக்களை, வரி கட்டக்கூடிய மக்களை, காலம் காலமாக வாழக்கூடிய தமிழர்களை வருசநாடு, மேகமலையிலிருந்து வெளியே போகச் சொல்வதற்கு இவர்கள் யார்?

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விட்டது என்றால், தமிழ்நாடு தவெக அரசு பதில் சொல்ல வேண்டாமா? கேரளாவில் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது, “மக்கள் வாழக்கூடிய பகுதிகளை நாங்கள் இந்த பட்டியலிலிருந்து வெளியேற்றி, அவற்றை நாங்கள் பாதுகாக்கிறோம், அவர்களை அப்புறப்படுத்துவதில்லை” என்று கேரள அரசு பதில் சொல்லியிருக்கிறது. கர்நாடக அரசு கஸ்தூரிரங்கன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதைப் பற்றி பேசவே இல்லை, தமிழ்நாடு சட்டசபையில் பேசவே இல்லை. இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஒரு லட்சம் பேரை வெளியே போகச் சொல்கிறார்கள். இதில் 118/119 பேர் அரசு ஊழியர்கள். அவர்களை நிலத்தை ஒப்படைத்துவிட்டு வெளியே போகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அவர்களுடைய சொந்த நிலத்தை, வீடுகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறவில்லை என்றால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் லட்சணமா?

எது பிரச்சனை? இதுதான் இன்றைக்கு பிரச்சனை. ஒரு லட்சம் பேரை வெளியேற்றுவதற்கான ஒரு நிலை இருக்கிறது. தமிழ்நாடு அரசு உறுதியாக பதில் சொல்லவில்லை. இதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும், அந்த மக்களை பாதுகாக்க முன் வர வேண்டும்.

நாங்கள் இதில் கட்சி அரசியல் பேச விரும்பவில்லை. எல்லா கட்சியும் ஒன்றுபட்டு நின்றால்தான் இந்த உச்சநீதிமன்றத்தின் அநியாயமான தீர்ப்பை எதிர்த்து நமது மக்களை, மேகமலை மக்களை, வருசநாடு மக்களை பாதுகாக்க முடியும். இல்லையென்றால் பாதுகாக்க முடியாது. நாங்கள் அந்த மேகமலை போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறோம். நான் அந்த இடத்துக்கு நேரடியாக சென்றேன், அந்த கிராமத்து மக்களை சந்தித்தேன். அவர்கள் ஏழைகள். அவர்கள் அந்த காட்டை எந்த பாதிப்பும் செய்யவில்லை. அந்த ஊரைப் போல சுத்தமான ஊர்களை நாம் பார்க்க முடியாது. அந்த மக்கள் அங்கு அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஒரு லட்சம் பேரை வெளியேற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? இது குறித்து ஒரு கேள்வி கேட்கிறேன். புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக இந்த மக்களை வெளியேற்றுகிறார்கள். 102 கிராமத்தை புலிகள் காப்பகமாக உருவாக்கப் போகிறார்களாம். இது குறித்து ஒரே ஒரு தகவலை நான் கேட்க விரும்புகிறேன். உச்சநீதிமன்றத்தினுடைய யோக்கியதையை கேட்கிறேன். இதே போன்ற புலிகள் காப்பகம் ஒன்றை சத்தியமங்கலம் காட்டில் உருவாக்கினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கைக்கு மாறான முறையில் 77 புலிகள் இறந்துப் போயிருக்கின்றன. அதாவது இயற்கைக்கு மாறான வகையிலே வேட்டையாடப்பட்டு, விசம் வைத்து கொல்லப்பட்ட புலிகள் 77. இந்த 77-ல் 44 புலிகள் இந்த புலிகள் காப்பகத்துக்கு உள்ளாகவே கொலை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்கள் புலிகளை காப்பாற்றும் லட்சணமே இதுதான். 77 புலிகள் இறந்துப் போனது, 44 புலிகள் காப்பகத்துக்கு உள்ளாக வேட்டையாடுபவர்களால், அந்த தோலை எடுத்து விற்கக்கூடிய கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறது. அதை தடுக்க வக்கு இல்லை. இதில் அரசு ஒரு லட்சம் பேரை வெளியேற்றி புலிகளை காப்பாற்றப் போகிறதா?

ஒரு லட்சம் பேரை வெளியேற்றி புலிகளை காப்பாற்றப் போகிறாயா, யார் காதில் பூச்சுற்றுகிறாய்? ஏனென்றால் புலிகளை காப்பாற்ற இதுவரைக்கும் ஒழுங்காக வேலைக்கு ஆள் போடுவதில்லை, நிரந்தர பணிக்கு ஆள் போடுவதில்லை, அரசு வேலைக்கு ஆள் எடுப்பதில்லை. அது மட்டுமல்ல, புலிகள் வளர்வதற்குரிய அதனுடைய உணவு அங்கு கிடைப்பதில்லை. ஏனென்றால் அங்கு எல்லாம் அந்நிய பயிர்கள். உதாரணமாக அங்கு ’லெமன் கிராஸ்’ இருக்கும். எல்லா இடத்திலும் புல்லாக முளைத்திருக்கும். அந்த புல்லை மான் சாப்பிடாது, மாடு சாப்பிடாது. மானும் மாடும் அந்த இடத்தை விட்டு வெளியே போய்விட்டால் புலிக்கு எப்படி சாப்பாடு கிடைக்கும்? இதை இவர்கள் வெளியிட்ட அறிக்கையிலேயே இருக்கிறது.

இதையெல்லாம் தீர்க்க மாட்டார்களாம். மாஞ்சோலையில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டார்கள். அடுத்து மேகமலை மக்களை வெளியேற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயம் கொண்டு வரப் போகிறார்கள். மக்களை வெளியேற்றுவதை ஒரு கொள்கையாக வைத்திருக்கக்கூடிய நீதிமன்றமும், அரசு அதிகாரிகளும் எதற்கு இருக்கிறீர்கள்? நீங்களெல்லாம் மக்களிடம் வரிப்பணம் வாங்கி தின்கிறீர்கள் அல்லவா? மக்களிடம் வரிப்பணம் வாங்கி, சம்பளம் வாங்கி கொழுக்கிறீர்கள் அல்லவா? மக்களை அங்கிருந்து வெளியேற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? விமான நிலையம் கட்டுகிறேன் என்று வெளியேற்றுவது, சாலை விரிவாக்கம் செய்கிறேன் என்று வெளியேற்றுவது, ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு என்று சொல்லி வெளியேற்றுவது, தொழிற்சாலை கட்டுகிறேன் என்று வெளியேற்றுவது, சிப்காட் என்று சொல்லி வெளியேற்றுவது, வனத்தை பாதுகாக்கிறேன் என்று வெளியேற்றுவது, புலிகள் காப்பகம் என்று வெளியேற்றுவது – எல்லா மக்களையும் வெளியேற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அதிகாரிகளை நான் கேட்கிறேன்.

இந்த அதிகாரிகள் சொல்லக்கூடிய அத்தனையையும் கேட்டுக்கொண்டு ஆட்சியாளர்கள் நடந்துகொண்டே இருந்தீர்கள் என்றால், நீங்கள் எதற்கு ஆட்சியாளராக இருக்கிறீர்கள்? மக்கள் சார்பாக கேட்பதற்குத்தான் உங்களை எல்லாம் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள். கேளுங்கள், அதிகாரியின் சட்டையை பிடித்து கேளுங்கள். அவ்வளவு ஊழல் செய்து வைத்திருக்கிறான் அதிகாரி. அரசியல்வாதி ஊழலை மட்டும்தான் பேசுகிறோம் இல்லையா? அதிகாரி ஊழலைப் பற்றி பேச வேண்டும். இல்லையென்றால் இந்த வீரமணி எப்படி தப்பித்திருப்பார்? ஜெம் கிரானைட் வீரமணி எப்படி தப்பிப்பார்?

இந்த போக்சோ கேஸை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வீரமணி என்கிற நபர் எவ்வளவு இழிவான நபர் என்பதை அம்பலப்படுத்தி, இந்த ஆளுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை தமிழ்நாட்டில் இதுவரைக்கும் நடந்த அத்தனை குற்றங்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இதில் ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 2016-லிருந்து 2021 காலகட்டத்தில் போக்சோ (குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைக்கான) 8600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2021-லிருந்து 2025 வரைக்கும், அதிமுக காலத்தில் 8600, அதற்கு அடுத்து ஐந்து வருடத்தில் (திமுக ஆட்சி காலத்தில்) 18000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏனெனில் போக்சோ கேசை விசாரிப்பதற்கு என்று தனியான நீதிமன்றம் போதுமான அளவில் கிடையாது.

2025-ல்தான் 17 நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஒரு வழக்கில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால், 18,000 குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்குகள் பற்றி அக்கறைப்படுவதற்கு ஆட்சியாளரோ, காவல்துறையோ, நீதிமன்றமோ கவலைகொள்ளவில்லை என்றால் இவர்கள் எதற்கு? குழந்தையை காப்பாற்றுவதற்கு இவர்கள் யாரும் வரவில்லையா? மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கு நடக்கிறது. ஒரு வருடத்துக்கு 600 வழக்கு வெளியே தீர்த்து வைப்பதில் போகிறது. 2000 வழக்குகளை விசாரிக்கிறார்கள் என்றால், அதில் 1500 குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏனென்றால் இரண்டு வருடமாக ஒரு வழக்கு நடந்தால் ஒரு குழந்தையினால் எப்படி சாட்சி சொல்ல முடியும்? 18,000 வழக்குகளில் 55% வழக்குகள் ஒரு வருடத்துக்கு மேல் நிலுவையில் இருக்கின்றன. இதுதான் அவலம் இங்கே.

நீதிமன்றங்கள், நீதிபதிகள் எல்லாம் கடவுள்கள் மாதிரி பேசுவார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு இறங்கி வந்து இந்த நீதிபதி பேசுவார். அவருக்கு அது முக்கியமாக இருக்கிறது. போக்சோ வழக்கு என்ன ஆனது என்று அந்த நீதிமன்றங்கள் கேள்வி கேட்க வேண்டாமா? இந்த ஜெம் கிரானைட் வீரமணி போன்ற அயோக்கியர்களை மக்கள்தான் தண்டிக்க வேண்டும். மக்கள் வர வேண்டும், வீதிக்கு வர வேண்டும். எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? வெறும் கட்சி பிரச்சனையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்புகளுமே (System) கெட்டுப் போய் கிடக்கிறது.

38  மாவட்டங்களில் போக்ஸோ நீதிமன்றம் இருக்க வேண்டும். ஆனால்  இல்லை.15 ஆண்டுகளாக என்ன ஆனது? யார் கேட்டார்கள்? எந்த நீதிபதி கேட்டார்? எந்த அமைச்சர் கேட்டார்? எந்த கட்சி கேட்டது? எந்த முதலமைச்சர் கேட்டார்? இந்த 15 ஆண்டுகளில் நான்கு முதலமைச்சர்கள் வந்துவிட்டார்கள், ஆனால் யாரும் கேட்கவில்லை. இதை மறுபடியும் பரப்பரப்பான செய்தியாக, ஒரு தனி நபர் இதற்கு காரணமாக இருப்பதாக மட்டும் பேசாதீர்கள். ஒட்டுமொத்த அரசு அமைப்பும் அழுகி நாறி கிடக்கிறது.

போக்சோவுக்கான ஒரு நீதிபதியை நியமனம் செய்ய வேண்டாமா? ஒரு நீதிபதிக்கு 1000/2000 வழக்குகள் வந்தால் எப்படி விசாரிப்பார்? 100 போக்சோ வழக்குகள் மேல் ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தால் தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அதாவது 2021 வரைக்கும் ஆண்டுக்கு 2500-லிருந்து 2700 வழக்குகள் பதிவாகிக்கொண்டிருந்தன. 2021-க்கு பிறகு ஆண்டுக்கு 4500 வழக்குகள், இரண்டு மடங்காக மாறியது வழக்குகள். அப்போது 44000 வழக்குகள் வந்தன. குற்றம் அவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நம் குழந்தைகள், உங்கள் குழந்தைகள், என் குழந்தைகள், எல்லோருடைய குழந்தைகளும். அந்த குழந்தைகளுக்கு தனக்கு என்ன நடந்தது என்று வாய் திறந்து பேச முடியாது. ஆனால் ஒரு குழந்தைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்தால் அது வாழ்நாள் முழுக்க அது பாதிப்புக்கு உள்ளாகும். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். வாழ்நாள் முழுக்க அது உளவியலாக பாதிக்கப்பட்டு, அது மனநோயோடுதான் இருக்கும்.

ஒரு பச்சை குழந்தை, அந்த குழந்தையை பாதுகாப்பதற்கு இந்த சமுதாயத்தில் நீதிமன்றத்தினால் முடியாது, ஆட்சியாளரால் முடியாது, அதிகாரிகளால் முடியாது. நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க மாட்டார்கள், அதிகாரிகள் வரமாட்டார்கள், அதை காவல்துறை சொல்லாது, நீதிபதி நியமனம் செய்ய மாட்டார்கள் என்றால் எதற்கு இந்த அமைப்பை வைத்திருக்கிறீர்கள்? இதெல்லாம் யோக்கியமான அமைப்பா?

தேர்தல் அதிகாரியிலிருந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலிருந்து, பாராளுமன்றத்திலிருந்து ஆரம்பித்து இங்கே இருக்கிற லோக்கல் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இது மாதிரி கெட்டு அழுகிப் போய் கிடக்கிறது. என்ன மாற்றம் வந்தது இதில்? பொதுமக்கள் இதையெல்லாம் கேள்வி கேட்க வரவில்லை என்றால் இது தொடர்ச்சியாக நடக்கும். உங்கள் குழந்தை பாதிக்கும், என் குழந்தை பாதிக்கும், அவர் குழந்தை பாதிக்கும், எல்லோருடைய குழந்தையும் பாதிக்கும். தயவு செய்து எல்லாரும் வாருங்கள், இதை கேள்வி கேட்க வாருங்கள்.

இந்த அதிகாரிகள் இங்கே தெருவோரம் கடை போட்டால் வந்து கேள்வி கேட்கிறார்கள், இரவு 10 மணிக்கு மேல் டீக்கடை வைத்திருந்தால் கேள்வி கேட்கிறார்கள், ஹோட்டல் வைத்திருந்தால் கேள்வி கேட்கிறார்கள். தெருவில் நின்றால் கேள்வி கேட்கிறார்கள், ஆனால் 18,000 வழக்குகளை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இதில் பாதி வழக்குகளுக்கு மேல் குற்ற அறிக்கை (சார்ஜ் ஷீட்) ஆகவில்லை. ஆறு மாதத்திலிருந்து ஒரு ஆண்டு வரைக்கும் சார்ஜ் ஷீட் செய்யவில்லை என்றால் அந்த குழந்தை எப்படி சாட்சி சொல்லும்? உங்கள் குழந்தைக்கு நடந்தால் ஒத்துக்கொள்வீர்களா? இதை யார் கேட்பது? இதை பற்றி பேசாமல்  திருப்பரங்குன்றம் தீபத்தை மட்டும்தான் கடந்த ஆண்டில் பெரிய பிரச்சனையாக மாற்றினார்கள். அது மட்டும்தான் நீதிபதிக்கு பெரிய பிரச்சனை. அவர் நேராக போவார், பார்ப்பார், எல்லாம் செய்வார். இந்த போக்சோ பிரச்சினையை யார் பேசுவது? நீங்களெல்லாம் பேசுங்கள். சம்பளம் கொடுக்கிறார்கள் அல்லவா, மக்கள் “வரிப்பணத்தில் சம்பளம் தருகிறோம், வேலை பாருங்கள்” என்று கூறுகிறார்கள்.

ஆகவே ஊடக நண்பர்கள், நீங்கள் மட்டும்தான் எங்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை. நீங்கள் மட்டும்தான் இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். விஜய் கையை தூக்கினார், காலை தூக்கினார், மூக்கை சிந்தினார் போன்ற செய்திகளை நீங்கள் போடுவதை விட்டுவிட்டு, இது போன்ற (மேகமலை, எஸ்.ஐ.ஆர்) செய்திகளை வெளியிடுவது தான் ஒரு ஊடகவியலாளராக பேச வேண்டிய விடயம். நீங்கள் அவ்வப்போது இவற்றை கவனத்துக்கு கொண்டு வருகிறீர்கள், ஆனால் விவாதமாக மாற்றுங்கள். எங்களுடைய கடைசி நம்பிக்கை நீங்கள்தான். நீங்கள் கேள்வி கேட்டால்தான் உண்டு, இல்லை என்றால் யாரும் கேட்க மாட்டார்கள்.

எனவே தயவு செய்து நீங்கள் கேள்வி கேளுங்கள். ஒரு லட்சம் பேரை வெளியேற்றுவதற்கு உத்தரவிடக்கூடிய நீதிமன்றம், சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் நிலத்துக்கு ஏன் பஞ்சாயத்து செய்கிறது என்று கேளுங்கள். அனகாபுத்தூரில் ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற்றுவோம் என்று சொல்லி தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்தார்கள். அது ஆற்றங்கரையிலிருந்து தள்ளி இருக்கிறது. ஆற்றங்கரைக்குள் காம்பவுண்ட் சுவர் கட்டின ’காசா கிராண்ட்’ பற்றி எந்த நீதிமன்றமும் கேட்கவில்லை. அன்றைக்கு அனகாபுத்தூர் மக்களை வெளியேற்றுவதற்கு உத்தரவு கொடுத்தபோது, ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து நீதிபதி உத்தரவு கொடுக்கிறார். அதே பத்திரிகையில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் (ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கக்கூடிய அந்த நிறுவனம்) விளம்பரம் கொடுத்திருக்கிறது. அந்த பத்திரிகை கொடுத்த செய்தியை உறுதி  பண்ணாமல் நீதிமன்றம் குறிப்பிடுகிறது. எங்களுக்கு இதுதான் கேள்வியாக இருக்கிறது.

நாங்கள் பயப்பட மாட்டோம், எல்லாவற்றையும் கேள்வி கேட்போம். மே 17 இயக்கம் எல்லாவற்றையும் கேள்வி கேட்க வந்திருக்கிறோம். அது நீதிமன்றமாக இருந்தாலும் சரி, நீதிபதியாக இருந்தாலும் சரி.. இதற்காக (மக்களுக்காக) சிறைக்கு போக நாங்கள் தயார். எங்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. சிறையெல்லாம் நாங்கள் பார்த்துவிட்டோம், அடக்குமுறையை பார்த்துவிட்டோம். இதனால் எங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதையும் கடந்து நாங்கள் வந்துவிட்டோம். உங்களை கேள்வி கேட்போம், நிச்சயமாக எங்களுக்கு உண்மை வேண்டும், மக்களுக்கான நியாயம் கிடைக்கும் வரைக்கும் நாங்கள் விட மாட்டோம். ஊடகமான நீங்கள்தான் கடந்த காலத்தில் எங்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த செய்தியை மறுபடியும் கொண்டு போங்கள். தலைமைத் தேர்தல் அதிகாரியிலிருந்து இங்கு உள்ளூரில் நடக்கக்கூடிய பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வை கொடுப்பதற்கான கவனத்தை செலுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டு எங்களுடைய ஊடக சந்திப்பை நிறைவு செய்கின்றோம். வேறு கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

பத்திரிகையாளர் கேள்வி: நீங்கள் நீதிமன்றத்தை நேரடியாக விமர்சிக்கிறீர்கள், இந்த மாதிரி நீதிபதிகள் செய்கிறார்கள் என்று…

தோழர் திருமுருகன் காந்தி: நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது என்பதுதான் சட்டத்தில் இருக்கக்கூடிய நெருக்கடி. சட்டம் அப்படித்தான் இருக்கிறது. நீதிபதிகளைப் பற்றிய குற்றச்சாட்டு கொலீஜியத்தில் இருக்க வேண்டும். கொலீஜியம்தான் முடிவு பண்ண வேண்டும். கொலீஜியம் முடிவு பண்ணினால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

நீங்கள் தான் (ஊடகம் தான்) எங்களுக்கான விவாதத்திற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்படி ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் கேள்வி கேட்கிறோம். நாங்கள் பேசுவதை வெளியிட்டால் தான் செய்தி வெளியே வரும். அதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள், நாங்கள் கேள்வி கேட்கிறோம். அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

பத்திரிகையாளர் கேள்வி: SIR பணிகளுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று மாநில தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்பது குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: SIR-க்கு பிறகு நடந்த தேர்தல் அனைத்தையுமே ரத்து செய்ய வேண்டும். மூன்று மாநிலம் மட்டுமல்ல, அனைத்தையும், பீகார், அசாம், காஷ்மீர் என SIR நடந்ததற்கு பிறகான அத்தனை தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டிய தேவை இருக்கிறதாகத்தான் இப்போது எல்லாருமே பேசியிருக்கிறார்கள், எல்லா தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். நேற்று சிஜேபி அதைத்தான் பேசியிருக்கிறார்கள். 48 மணி நேரம் கெடு கொடுத்திருக்கிறார்கள் சிஜேபி. ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று சிஜேபி கூறி இருக்கிறது. நாங்களும் (மே பதினேழு இயக்கம்) போராட்டம் நடத்துவோம், வெகு மக்கள் எல்லாரும் வர வேண்டும். நாம் ஓட்டு போடுகிறோமா இல்லையா? நம்முடைய தேர்தல் முடிவை டெல்லியில் ஒருவர் உட்கார்ந்து முடிவு செய்வார் என்றால், நாம்  கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. அதனால் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை எல்லாருமே சேர்ந்து முன் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

பத்திரிகையாளர் கேள்வி: தேர்தல் அதிகாரி நியமன சட்டத்தை மாற்றிவிட்டார்கள் இல்லையா… அது குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: அந்த தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமனம் செய்வதற்குரிய ஒரு குழு உருவாக்கம் இருக்கிறது அல்லவா, அதை முழுக்க மாற்றிவிட்டார்கள் இல்லையா? அதில் எதிர்க்கட்சித் தலைவர் இப்போது கிடையாது. ஜனாதிபதி எனும் பதவி பிஜேபியின் ரப்பர் ஸ்டாம்ப் (rubber stamp). வெளிப்படையாக சொல்கிறேன், ஜனாதிபதிக்கு என்று தனியான எந்த முடிவும் கிடையாது. துணை ஜனாதிபதி பதவி என அனைத்துமே பிஜேபியின் ரப்பர் ஸ்டாம்ப். இவர்கள் எல்லாம் சேர்ந்து முடிவு செய்தால் பிஜேபிக்கு ஆதரவான ஆளைத்தான் முடிவு செய்கிறார்கள். ஏற்கனவே ஞானேஷ் குமார் மேல் குற்றச்சாட்டு இருந்தது. அவரை முன்னகர்த்தி அந்தப் பதவியில் உட்கார வைத்தார்கள். எனவே தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றால் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இருக்குமா? எனக்கு பிடித்த தலைவரை நான் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் எப்படி நம்பிக்கை இருக்கும்? இதுதான் இப்போது இருக்கக்கூடிய கேள்வி. அதனால் இது கட்சிக்கு அப்பாற்பட்டது.

இன்றைக்கு ஒரு கட்சி SIR-ஆல் எங்களுக்கு பயன் வந்தது என்று நினைத்தால், நாளைக்கு இதே பிரச்சனை அவர்களுக்கும் வரும். உதாரணமாக கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி போய் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியினுடைய முதலமைச்சர் இது குறித்து எதுவும் பேசவில்லை. கேரளாவில் நாளைக்கு அவருக்கும் இதே நிலைமைதான் நடக்கும். கர்நாடக முதலமைச்சர் பேசவில்லை, அவருக்கும் இதுதான் நடக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் பேசவில்லை என்றால், நாளைக்கு தவெக-வுக்கு இதுதான் நடக்கும். அதனால் எல்லாரும் பேச வேண்டும், கட்சி கடந்துதான் பேச வேண்டும். இதில் கட்சி அரசியலை தயவு செய்து விட்டுவிடுவோம். தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுயாதீன அமைப்பு. அது அவ்வாறு வேலை செய்யவில்லை என்றால் கேள்வி கேட்க வேண்டும், இல்லையென்றால் எல்லா கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும்.

செப். 26 அன்று மாலை தந்தை பெரியாரினுடைய பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றை நாங்கள் எம்ஜிஆர் நகரில் வைத்திருக்கிறோம். அதில் மேலதிகமான விவரங்களையும் நாங்கள் பேசுவதற்கு இருக்கின்றோம். அதில் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு செய்தி சேகரித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அந்த கூட்டம் நடத்த ஒரு அர்த்தம் இருப்பதாகவும் இருக்கும். நாங்கள் ஊடக சந்திப்பில் என்ன பேச முடியுமோ அதை பேசியிருக்கிறோம். இதில் பேசாத பல விடயங்களை நாளைக்கு மேடையில் பேசுவதாக இருக்கிறோம். வாய்ப்பு இருந்தால் நீங்கள் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் மே 17 சார்பாக உங்களை வரவேற்கின்றோம்.

பத்திரிகையாளர் கேள்வி: இடைத்தேர்தல் குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: இடைத்தேர்தலில் என்ன முடிவு வந்தாலும் ஒன்றும் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு மாற்றம் வந்துவிடப் போவதில்லை. அதனால் இடைத்தேர்தல் சம்பந்தமாக தனிப்பட்ட கோரிக்கை எங்களுக்கு இல்லை. கடந்த முறை கூட்டணி வைத்தார்கள், கொள்கை என்று அறிவித்தார்கள், இன்றைக்கு அதில் நாங்கள் என்ன சொல்ல முடியும்?

வந்திருந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

முழு காணொளி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »