மக்களுக்கு அநீதி இழைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் – திருமுருகன் காந்தி நேர்காணல்

அண்மையில் சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வாதம் குறித்தும், மேகமலை-வருசநாடு பகுதியில் புலிகள் காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றுவது குறித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சர்மிளா டாக்கீஸ் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியிருந்தார். கடந்த செப்டம்பர் 24, 2026  அன்று நடந்த நேர்காணலில் அவர் பேசிய தொகுப்பு:

சர்மினா டாக்கீஸ் நேயர்களுக்கு வணக்கம். நம்மோடு இணைந்திருப்பவர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், வணக்கம்.

தோழர் திருமுருகன் காந்தி: வணக்கம்!

நெறியாளர் கேள்வி: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் குறித்து நீங்கள்(திரு) ஒரு பதிவு ஒன்று போட்டிருந்தீர்கள். குறிப்பாக ஏழை எளிய மக்களுடைய நிலங்களை அகற்றுவது குறித்து, அனகாபுத்தூர் ஆற்றோரத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக ஒரே நாளில் விசாரித்து ஒரே நாளில் வந்து ஐந்நூறு வீடுகளை இடித்துத் தள்ளுகிறது இந்த அதிகார வர்க்கம். ஆனால் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு ஆக்கிரமிப்பு நிலத்தைப் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருக்கிறது. அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றுவதற்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது சாஸ்திரா அதற்கான சந்தை மதிப்புப் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம், அல்லது ஐந்து கிலோமீட்டரில் இன்னொரு நிலம் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலம் இருக்கிறது, அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றமே பரிந்துரைக்கிற அளவிற்கு இருப்பதையும் பார்க்கிறோம். நீங்கள் எப்படி அதைப் புரிந்து கொள்கிறீர்கள்?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: இது மிகவும் அநியாயமான ஒரு விவாதம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியால் நடத்தப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில்தான் நடந்த வழக்கு இது. ஏற்கனவே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை, கிராமத்து நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்பது நிரூபணமாகி, அந்த இடத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கின்ற உத்தரவாகி, அது உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்குச் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கொண்டு போய், அது ஆக்கிரமிப்பாளர் என்று உச்சநீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டதுதான். அதில் மேல்முறையீடுதான் அவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். இப்போது இவர் ஆக்கிரமிப்பாளர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த விடயம்.

இது என்னவென்றால் உச்சநீதிமன்ற நீதிபதி இதை எப்படிக் கையாளுகிறார் என்பதுதான் நமக்குக் கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.

இதே காலகட்டத்தில் அவர் வந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் உருவாக்குவதற்காக மேகமலை, வருசநாடு, கடமலைகுண்டு, நரியூத்து உள்ளிட்ட கிட்டத்தட்ட 98/102 கிராமங்களை முற்றிலுமாக வெளியேற்றுவதற்கான உத்தரவிடுகிறார். அதில் இது எல்லாவற்றையும் வெளியே நீக்கிவிட்டு, உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் உருவாக்குங்கள் என்று ஒரு உத்தரவு கொடுத்துவிட்டு, அதோடு நிற்காமல் அதில் எந்தவிதமான பாதிக்கப்படுகின்ற மக்கள் தரப்பின் எந்தவிதமான விவாதத்தையும் கேட்காமல் உத்தரவிடுவதோடு, இந்த மக்களை வெளியேற்றுவதற்குத் துணை ராணுவப் படையை உபயோகப்படுத்துங்கள் என்று உத்தரவிடுகிறார்.

கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மக்களுக்கும் அதிகமாக அங்கே தமிழர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடமலைகுண்டு, வருசநாடு போன்றவை சிறு நகரங்கள், கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை. ஒன்பது ஊராட்சிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இந்த இடங்களில் நாம் காலம் காலமாக மக்கள் வசித்திருக்கிறார்கள், அதற்கான நிரூபணம் இருக்கிறது. கண்டமனூர் ஜமீனும், வருசநாடு ஜமீனும் வெள்ளையர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய ஒன்று, வெள்ளையருடைய ஆவணங்களிலும் இந்த மக்கள் இங்கு வசிப்பதற்கான பதிவுகளும் இருந்திருக்கின்றன. முதுமக்கள் தாழி அங்கு கிடைத்திருக்கிறது, கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்துமே ஒரு வரலாற்று ரீதியான ஆதாரம் இருக்கிறது, தொல்லியல் ரீதியான ஆதாரம் இருக்கிறது.

இவர்கள் வந்து ஒரு பெருமளவு காட்டுப் பகுதியை ஆக்கிரமித்ததெல்லாம் இல்லை, சிறு சிறு நகர ஊர்களாக அங்கங்கே அமைந்திருக்கிறார்கள். அங்கே இவர்கள் இருப்பது ஒரு ஆயிரத்து ஐந்நூறு மீட்டர் உயரத்தில் இருக்கக்கூடிய இடத்தில்தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு மேல் மூவாயிரத்து ஐந்நூறு மீட்டர் வரைக்கும் இருக்கிறது அந்த மலைத் தொடர். மேல்மட்டத்தில் தேயிலைத் தோட்டங்களிலிருந்து, உல்லாச விடுதிகளிலிருந்து எல்லாமே இருக்கிறது. ஆனால் இந்த மக்களை வெளியேற்றுவதற்கான மிரட்டல் கொடுத்துவிட்டு, நூற்று பத்தொன்பது அரசு ஊழியர்களை மிரட்டி வெளியேற்றி இருக்கிறார்கள், அவர்கள் நிலத்தை ஒப்படைக்கச் சொல்லிவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான உத்தரவு இதே நீதிபதியிடமிருந்து வருகிறது.

இத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்களை, கிராமங்களை, ஒரு இலட்சம் பேரை வெளியேற்றுவதற்கு ராணுவ வெளியேற்ற உத்தரவிடக்கூடிய உச்சநீதிமன்ற நீதிபதி, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தினுடைய அந்த ஐம்பத்து ஐந்து ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் குறித்துப் பேசும் பொழுது என்ன சொல்கிறார் என்றால், அவர் வந்து அரசுத் தரப்பைக் கேள்வி கேட்கிறார். இது ஒரு பொதுச் சேவைக்காக நடத்தக்கூடிய நிறுவனத்தை எதற்குக் காலி செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறீர்கள்? ஏன் அதில் குறியாகவே இருக்கிறீர்கள்? இதில் ஏன் உங்களுக்கு அவ்வளவு ஈடுபாடு வருகிறது என்று ஒரு கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதி கேட்கிறார்.

ஏனென்றால் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தனியார் நிறுவனம். அது இலவசமாகக் கல்வி கொடுக்கவில்லை. அது நன்கொடை மற்றும் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் எல்லாக் கல்விச் சாலைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்பது இலாபத்திற்காக நடக்கக்கூடியவை. எந்தத் தனியார் நிறுவனம் இங்கு இலாபம் இல்லாமல் நடக்கிறது? அது எந்தப் பள்ளியில் நடக்கிறது? இப்போது தனியார் நிறுவனம் சேவை செய்வதற்காக வந்திருக்கிறார்களா? இது அறக்கட்டளையா? அறக்கட்டளையாகவே இருந்தாலுமே இலாபம் சம்பாதிக்கக்கூடிய இடமாகத்தான் இருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட ஒரு அரசின் நிலத்தை ஆக்கிரமிக்கிறது என்பதற்கு ஒரு வழி, அதை நியாயப்படுத்துவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு என்ன வேலை? அவர் அதையும் சொல்லிவிட்டு, சாஸ்திரா எல்லாம் வேறு இடத்தைத் தருகிறேன் என்று சொல்கிறது, அரசு ஏன் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள், ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்? அதைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் என்று சொல்கிறார்கள். பிறகு அரசிடம் இந்தத் திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சொன்ன பிறகு ஏன் அமைக்கவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு அரசுத் தரப்பு என்ன சொல்கிறார்கள் எனில், இதற்காக முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். இந்த(சாஸ்திரா) இடத்தை எடுக்க முடியவில்லை. அதற்கு நீதிபதி இங்கேயேதான் நீங்கள் அமைக்க வேண்டுமா, வேறு எங்கேயும் அமைக்கக் கூடாதா? இதற்கு மாற்று வழியைக் கண்டுபிடிக்க மாட்டீர்களா? என கேட்கிறார்கள்.

அப்போது அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் எனில், திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்று சொல்லி நீதிமன்றத் தீர்ப்பை வைத்துத்தான் நடைமுறைப்படுத்தப் போகிறோம், அதற்குத்தான் அதைக் கேட்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்போது தீர்ப்பு எவ்வளவு நாளாக இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை, வேறு வழியை கண்டுபிடிக்க மாட்டீர்களா? இங்கேதான் வருவீர்களா? இதையெல்லாம் நீதிபதி பேசுகிறார். இதையெல்லாம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சார்பில் வந்த வழக்கறிஞர் பேசவில்லை, உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதி பேசுகிறார். அதுமட்டும்ன்றி சாஸ்திரா ஒரு கல்விச் சேவை செய்கிறார்கள், அவர்களோட நிலத்தை ஏன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று இப்படி வந்து ஒரு நீதிபதி வந்து கட்டப் பஞ்சாயத்து பேசக்கூடிய வேலையை வந்து இவ்வளவு வெளிப்படையாக, அப்பட்டமாக, அசிங்கமாக, அருவருப்பாகப் பேசுகிறார்கள்.

சாஸ்திரா காரன் தெரிந்துதான் ஆக்கிரமித்தான். அவன் யோக்கியவானா? இப்போது இந்த யோக்கியவான் கல்விச் சேவை செய்கிறானா? இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பாளியா? அரசு சொல்கிறதே, இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். அதுதான் தவறான முன்னுதாரணம். இந்த வழக்கை இவ்வளவு காலமாக இழுத்தடித்து நடத்திக் கொண்டிருக்கிறாய் அல்லவா, இவ்வளவு காலமாக நடத்தியிருக்கிறாய். ஆக்கிரமிப்பு நிலத்தை தனியார் நிறுவனம் கொடுத்துக் கொள்ளலாம் என்கிற இடத்தை அரசு ஒத்துக் கொண்டீர்கள் என்றால், யார் வேண்டுமானாளும் நாளைக்கு அரசு நிலத்தை ஆக்கிரமிக்கலாம் அல்லவா! ஆக்கிரமித்து நிலத்தைக் கட்டிவிட்டேன், நான் கல்வி நிலையத்திற்காக அரசு கொடு என்று சொல்கிறேன். நாளைக்கு எல்லாக் கல்வி நிலையமும் ஆக்கிரமித்துக் கட்டுகிறேன் என்று சொல்லிக் கட்டிக் கொள்ளலாம் அல்லவா?

சாஸ்திரா வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கொடுக்கக்கூடிய தீர்ப்பு, முன்னுதாரணமாக வராதா? ஒரு நீதிபதிக்கு இதுதான் வேலையா? அது ஆக்கிரமிப்பா, ஆக்கிரமிப்பு இல்லையா என்று பார்த்துவிட்டுப் போக வேண்டுமா இல்லையா? இதற்குப் பஞ்சாயத்து வேலை பார்ப்பதும் அல்லது கொடுப்பதும் தான் வேலையா? அப்படி என்ன தேவை இந்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வருகிறது? இதுதான் கேள்வி.

உச்சநீதிமன்ற நீதிபதிக்குத் தனி அக்கறை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேல் ஏன் வருகிறது? அதுதான் கேட்க வேண்டும். எல்லாம் இந்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் சாதி பார்ப்பனர்களால் நடத்தப்படக்கூடிய நிறுவனம். அதில் இருக்கக்கூடிய பெயர்கள் எதுவுமே கூடத் தமிழ்ப் பெயரே இருக்காது, எல்லாம் சனாதனப் பெயர்தான் வைத்திருப்பார்கள், பாதி கட்டிடப் பெயரிலிருந்து எல்லாமே வைத்திருக்கிறார்கள். அப்படி எதுவுமே அவர்களுக்குச் சார்பாக இருக்கின்ற மாதிரி ஒன்று.

அதே மாதிரி உச்சநீதிமன்றத்திலும் இருக்கக்கூடிய நீதிபதிகள் எத்தனை பேர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? பிற்படுத்தப்பட்ட சமூகத்தை, பட்டியல் சமூகத்தை, பழங்குடிச் சமூகத்தை, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மிக மிகக் குறைவு. 51% உயர்சாதிப் பார்ப்பனர்கள். இப்படிப்பட்ட ஒரு சார்பு நிலை நீதிமன்றங்களில் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இதே உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பில் அனகாபுத்தூரில் இருக்கக்கூடிய வீடுகள் இடிக்கக் கூடாது என்று மே 17 இயக்கம் போராட்டம் நடத்துகிறோம், தொடர்ச்சியாக மூன்று ஆண்டு காலப் போராட்டம். அதில் ஆற்றங்கரையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றுதான் வழக்கு. ஆனால் ஆற்றங்கரையை அவர்கள் அளந்து வைத்திருக்கக்கூடிய கல்லுக்கு மேற்புறமாகத்தான் அவர்கள் வீடு கட்டியிருக்கிறார்கள், உட்புறமாக ஆற்றுக்குள் கட்டவில்லை. வழக்கறிஞர் சுபாஷை வைத்துத்தான் கேட்டோம். அப்போது அவர் என்ன ஒரு கேள்வி எழுப்பினார் என்றால், எது ஆறு, எது வீடு, எது மற்ற நிலம் என்று சொல்லி வரையறை செய்த அளவீடு இருக்கிறதா? என்று கேட்டார். அரசிடம் அளவீடு இல்லை, அளவீடு இல்லை, அளவீடு இல்லாமலேயே இந்த வழக்கில் உத்தரவிடுகிறார்கள்.

அங்கு காயிதே மில்லத் நகருக்கு உத்தரவிடுகிறார்கள், அது ஆற்றங்கரையும் கிடையாது. அந்த இடத்தை வந்து அவர்கள் நீக்க வேண்டும் என்று சொல்வதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை, அவர்கள் ஆற்றங்கரையிலிருந்து நூறு மீட்டர் தள்ளி இருக்கிறார்கள். அங்கே அதே எதிர்கரையில் ஆற்றங்கரையிலேயே காசா கிராண்ட் கட்டியிருக்கிறான், ஆற்றங்கரைக்குள் கட்டியிருக்கிறான், சுற்றுச் சுவரைப் பார்த்தாலே தெரிகிறது, அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் நீதிபதி என்ன உத்தரவிடுகிறார்? இந்தக் காயிதே மில்லத் நகரை நீங்கள் நீக்க வேண்டும், இடிக்க வேண்டும், இல்லையென்றால் நான் ராணுவத்தை வரவைப்பதற்கான உத்தரவிடுவேன் என்று உத்தரவிடுகிறார். இந்த லட்சணத்தில்தான் இந்த நீதிமன்றம் ஏழை எளிய மக்களுக்கு எதிராகவே தீர்ப்பு கொடுத்திருக்கிறது. இது ஒரு இடத்தில் இல்லை, தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பை இடிக்கிறேன் என்ற இடத்தில் உச்சநீதி, உயர்நீதிமன்றம் வந்து ஏழை எளிய மக்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அவரை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லி வரையறை செய்து சொல்கிறார்கள்.

அனகாபுத்தூர் வழக்கில் கொடுத்தபோது கூட என்ன குறிப்பை வைத்தார்கள் என்றால், இவர்கள் எல்லாம் ஒரு கட்சிக்காரர்கள் வந்து இந்த இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வாடகைக்கு விட்டு ஒரு மாபியா மாதிரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் வந்ததை மேற்கோள் காட்டி நீதிபதி கொடுத்திருக்கிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியாக்காரன் பொறுப்பாளி இதற்கு. அந்த டைம்ஸ் ஆஃப் இந்தியாவை எடுத்துத் திறந்து பார்த்தால் காசா கிராண்டுக்கு விளம்பரம் வந்து மூன்று பக்கம், நான்கு பக்கம் கொடுத்து வைத்திருக்கிறான். அது எவ்வளவு கொடுமையாக இருந்தது என்றால், இந்த வீடு கரையிலிருந்து நூறு மீட்டர் தள்ளி இவர்கள் வீடு இருக்கிறது, இது ஆக்கிரமிப்பு என்கிறான். அதற்கு அடுத்து இவர்களுக்கு ஒட்டியிருக்கக்கூடிய நிலம் காசா கிராண்டுக்காரன், அது கரைக்குள் சுற்றுச் சுவர் கட்டியிருக்கிறான். இரண்டுக்கும் வந்து மிஞ்சிப் போனால் இரண்டு முதல் நான்கு அடிதான் வித்தியாசம் இருக்கிறது. அது காசா கிராண்ட், இது வீடு, ஆனால் வீடுகள் மட்டுமே ஆக்கிரமிப்பு என்று நீதிமன்றம் இடிப்பதற்கு உத்தரவிடுகிறது. ஆறு இங்கே இருக்கிறது. காசா கிராண்டுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான். அந்தப் பக்கம் ஒரு காசா கிராண்ட் இருக்கிறது, இந்தப் பக்கம் ஒரு கல்லூரி இருக்கிறது, கல்லூரியோட சுற்றுச் சுவர் ஆற்றுக்குள் இருக்கிறது. ஒன்றுமே பதில் சொல்லவில்லை. ஆனால் நீதிபதியோ ”நான் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை படித்தேன், அதில் இப்படி ஒன்று வந்திருக்கிறது” என்று கொடுத்திருக்கிறார். சரி, அது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எல்லாத் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் விளம்பரம் தருகிறானே, அவன் அப்படித்தான் அறிக்கை போடுவான்.

இந்த நீதிமன்றம் ஏழை எளிய மக்களுக்கு அப்பட்டமாக எதிரியாக இருக்கிறது, பச்சையாக இருக்கிறார்கள், அதைப் பற்றி அவர்கள் வெட்கமே படவில்லை. ஏழை சாமானிய மக்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு வழிகாட்டுகின்ற பொறுப்பு நீதிமன்றத்திற்கு இருக்கிறது. சும்மா காகிதத்தை வாங்கிவிட்டு அதிகாரி கொடுத்த அறிக்கையை எடுத்துப் போட்டு முத்திரை குத்துவதற்கு எதற்கு நீதிபதி?

நெறியாளர் கேள்வி: இப்போது இதே மாதிரி அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன, மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்கள். இப்போது மேகமலையில் நீங்கள் சொல்கிற ஒரு இலட்சம் மக்களுடைய நிலைமை என்ன என்கிற ஒரு கேள்வி இருக்கிறது. இப்போது இந்த மேகமலை, வருசநாடு, கடமலைகுண்டு பகுதிகள், இதை எடுத்துக் கொண்டோமென்றால் மயிலாடும்பாறை, கடமலைகுண்டு, நரியூத்து என்று இருக்கக்கூடிய அந்தப் பகுதிகளில் அந்த மக்களுடைய எதிர்காலம்?

திருமுருகன் காந்தி பதில்: நான் நேராக அந்த இடத்திற்குப் போய் இரண்டு நாள் இருந்திருந்து பார்த்தேன். இந்த இடத்தை ஊர் என்கிறார்கள், இந்த இடத்தை காடு என்கிறார்கள். அதிலிருந்து பத்து அடி தள்ளினால் அதற்கு ஊர், அதிலிருந்து இருபது அடி தள்ளினால் அது காடு, எது ஊர், எது காடு என்று தெரியாத அளவுக்குத்தான் இருக்கிறது. சிலதில் இந்த மொத்தக் கிராமத்தையுமே காலி செய்கிறோம் என்கிறது வந்து எத்தனை கிராமங்கள், தொண்ணூற்று எட்டு கிராமங்கள், இன்னும் கணக்குப்படி நூற்று இரண்டு கிராமங்கள் என்று சொல்கிறார்கள், நூற்று இரண்டு கிராமங்களை அப்புறப்படுத்திப் புலிகள் சரணாலயம் உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

அங்கே கேட்டோமென்றால் நான்கு தலைமுறையாக இருக்கிறவரே சொல்கிறார்; அதில் வந்து எண்பது வயதுக்காரர் சொல்கிறார், எண்பது வருடத்தில் நாங்கள் புலியைப் பார்க்கவில்லை என்கிறார். இன்றைக்குப் புலி இல்லை என்றால் ஆக்கிரமித்துவிட்டார்கள், அதனால் புலி இல்லை என்று சொல்லலாம். எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படிப் புலி இல்லாமல் இருந்தது? சரி, புலிகளை நாங்கள் உருவாக்குவதற்காக ஒன்றைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னால் இவர்கள் எல்லா மக்களையும் வெளியேற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

இப்போது மலையில் இருக்கிற மக்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவு எடுக்கிறீர்கள் என்றால், கேரளாவில் முக்கால்வாசி கேரளா இருக்கக் கூடாது அல்லவா? கேரளாவில் முக்கால்வாசி வனப்பகுதிதானே? அப்போது நாம் காடுகளைப் பாதுகாப்பதில் நமக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. சில காடுகளுக்குள்ளாகத் தோட்டங்கள், தனி நபர்களுக்கான தோட்டங்கள், தனியார் சொத்துக்கள், தேயிலைத் தோட்டங்கள் இதையெல்லாம் உருவாவதற்கு அரசு வழிவகுத்துக் கொடுத்தது. நீதிபதிகள் சொல்வது மக்களைப் பற்றிக் குறித்துப் பேசுகிறீர்கள், மேலும் அந்தத் தீர்ப்பில் இளவஞ்சிப் பண்ணைகளும் அங்கே இருக்கின்றன, அந்தத் தோட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும், உல்லாச விடுதி இருக்கிறது, அதை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற மாதிரி அதில் தீர்ப்பில் சொல்கிறார்கள்.

என்னவென்றால் ஆற்றங்கரையை விட்டு இளவஞ்சி மரங்கள் இருக்கின்றன. நீங்கள் கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து ஐந்நூறு அடி மேலே போனீர்கள் என்றால்தான் அந்தப் பண்ணை நிலையில், தற்போதைய நிலையில் நீங்கள் தேயிலைத் தோட்டங்களையெல்லாம் வைக்க முடியும். இவர்கள் ஆற்றை ஒட்டியிருக்கக்கூடிய பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் இளவஞ்சித் தோப்புகளை வைத்திருக்கிறார்கள். இந்த இளவஞ்சித் தோப்புகளில் எது ஆக்கிரமிப்பு, எது ஆக்கிரமிப்பு இல்லை என்று ஒரு வரையறை செய்யுங்கள், எது காட்டைப் பாதிக்கிறது என்று.

அவர்கள் மலை ஏறும் இடத்தில் எல்லாம் மலை எல்லாவற்றையும் அழித்துவிட்டு, நீங்கள் நேராகவே பார்த்தால் தெரியும், இரண்டு மலைகள் இறங்கக்கூடிய சரிவான பகுதி, நடுவில் வைகையாறு ஓடுகிறது. இந்த ஆற்றை ஒட்டியிருக்கக்கூடிய இந்தப் பகுதிகளுக்குள்தான் வைத்திருக்கிறார்கள், சமவெளிப் பகுதிகள், ஆற்றை ஒட்டியிருக்கக்கூடிய சமவெளிப் பகுதிகளில், அந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் வைத்திருக்கிறார்கள். குறுகிய பள்ளத்தாக்குப் பகுதிதான். அதற்குப் பிறகு மலை ஏறுகிறது, அடுக்கடுக்காக இருக்கிறது. இந்த மலைப் பகுதியில் எதுவுமே அவர்கள் போடவில்லை, அந்தப் பகுதியில் அது அவர்கள் இளவஞ்சிக் காடுகள் எல்லாம் அவர்கள் உருவாக்கவில்லை. இந்தப் பகுதியில் இதில் எது காடு என்றால் அதை நீங்கள் எடுத்து உங்களுக்கானதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீதிமன்றமும் ஊரையே எடுக்க வேண்டும், மொத்தமாகவே எடுக்க வேண்டும் என்று சொல்லும்போது சந்தேகம் வருகிறது, எதற்காக இந்த வேலையைச் செய்கிறார்கள்? இப்போது கேரளாவில் இதே மாதிரி ஆணை கொடுத்தபோது கேரளா என்ன சொல்லியிருக்கிறது என்றால், மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகளை விடுவித்துவிட்டு நாங்கள் எது வந்து காட்டுக்கான பகுதி என்று நாங்கள் குறித்துக் கொடுக்கிறோம், அளவீடு செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். கர்நாடகா ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கிறோம்.

கஸ்தூரிரங்கன் அறிக்கை மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி ஒரு ஆய்வறிக்கை கொடுத்தார்கள், அதை வைத்துத்தான் நடவடிக்கைகள், உத்தரவுகள் வருகின்றன. அந்த அறிக்கை முழுமையான அறிக்கையா இல்லையா? என்பதில் கேள்வி இருக்கிறது. இதைத் தவிர இந்தப் புலிகள் சரணாலயம் உருவாவதற்கான ஒரு மத்திய நிபுணர் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கு ஆய்வு செய்து மக்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து ஒரு அறிக்கை கொடு என்று மக்கள் தரப்புக் கருத்து கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால் எந்தக் கிராமத்திலுமே இந்தக் குழு வந்ததாகவோ, மக்களிடம் கருத்து கேட்டதாகவோ ஒரு பதிவு கிடையாது. பாதிக்கப்படுகின்ற மக்கள் தரப்புக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல், அவர்கள் தரப்புக் கருத்தையும் கேட்காமல், அதற்கான அளவீடும் எடுக்காமல் கஸ்தூரிரங்கன் அறிக்கையை வைத்து நாங்கள் மொத்தமாகக் கொடுக்கிறோம் என்று சொல்லிப் புலிகள் சரணாலயத்தைக் கொடுக்கிறார்கள். இது கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பித்து மாஞ்சோலை வந்தது. மாஞ்சோலை மொத்தமாகத் தோட்டத்தை எடுப்பதற்கான காரணி இருக்கிறது அல்லவா, வெளியேற்றியதற்குக் காரணம் இதுதான் அடிப்படைக் காரணம்.

இது குறித்துத் தமிழ்நாடு அரசுக்கு எந்தக் கொள்கை நிலைப்பாடும் கிடையாது. கடந்த ஆட்சியும் சரி, அதற்கு முந்தைய ஆட்சியும் சரி, இப்போதும் சரி, இதில் வந்து இந்தக் கட்சி, அந்தக் கட்சி எல்லாம் இல்லை. ஆளுங்கட்சியாக இருக்கிறவர்களுக்கு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ கையெழுத்துப் போடுவதற்குத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய, மக்களுக்கு என்ன பிரச்சினை என்று அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரும் கேட்பதில்லை, அமைச்சரும் கேட்பதில்லை, ஆட்சியாளர்களும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. எதிர்க்கட்சியும் கேள்வி கேட்கவில்லை. இதில் எந்தக் கட்சியையும் நான் நியாயப்படுத்த முடியாது. என்ன சட்டமன்றத்தில் விவாதமாக்குகிறார்களா? மேகமலை விவாதம் வந்தது, அதற்குப் பிறகு எங்கே பெரிய விவாதமாக மாறியது?

அன்றைக்கு இன்றைக்கு மாஞ்சோலை இன்றைக்கு விவாதமாக மாறியிருக்கிறது. எட்டாயிரம் ஏக்கர் போயிருக்கிறது. மக்கள் மறுவாழ்வுக்கு எதுவும் பேசவில்லை, அந்த நிறுவனக்காரன் மொத்தமாகக் கொள்ளையடித்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டான். அவன் நிறுவனம் மொத்தமாகக் கொள்ளையடித்துக் கிளம்பிப் போவதற்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள்.

அப்போது இங்கே புலிகள் சரணாலயத்தை உருவாக்குகிறோம் என்று சொல்லிவிட்டு இத்தனை மக்களை வெளியேற்றுவதற்கான எந்த அடிப்படையும் இல்லை. இதில் என்னவென்றால் புலிகள் சரணாலயத்தின் நிலைமை என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம். நமக்கு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் இருக்கிறது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் இருக்கிறது. இப்போது புதிதாக ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை உருவாக்குவதற்கு இதைப் பேசுகிறார்கள்.

அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் இயற்கையான முறையில் இல்லாமல் புலிகள் இறந்து போன கணக்கு என்று ஒரு கணக்கு இருக்கிறது. புலிகள் வந்து இயற்கையான முறையில் இறந்து போகாத புலிகள் எத்தனை என்ற கணக்கில் எழுபத்து ஏழு புலிகள் இறந்து போயிருக்கிறது. இதில் பெரும்பாலான புலிகள் எப்படி இறந்திருக்கிறார்கள் என்றால் இந்த வேட்டையாடக்கூடியவர்கள், கடத்தல்காரர்கள், அப்புறம் அந்த விசம் வைப்பது, மின்சாரம் வைப்பது, இப்படி இறந்து போன புலிகளின் கணக்கு இருக்கிறது. இந்த எழுபத்து ஏழு புலிகளில் நாற்பத்து நான்கு புலிகள், புலிகள் காப்பகத்திற்குள் இறந்து போயிருக்கின்றன. இது பதிவு, அப்போது புலிகள் காப்பகத்தின் லட்சணம் என்ன? புலிகள் எண்ணிக்கை ஏன் குறைந்தது என்பதற்கு ஒரு அறிக்கை இவர்களே போட்டிருக்கிறார்கள். மக்கள் குடியேறியதை மட்டுமே அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

புலிகள் உணவாக உண்ணக்கூடிய மான் இருக்கிறது, மாடு இருக்கிறது, இது மாதிரியான தாவர உண்ணிகள் இருக்கின்றன அல்லவா, அந்தத் தாவர உண்ணிகளுக்குரிய தாவரங்கள் உணவாகக் கிடைப்பதில்லை. காரணம் என்னவென்றால் அங்கே வந்து ஆக்கிரமிப்புச் செடிகள் நிறைய வளர்ந்துவிட்டன. அந்தச் செடிகள் என்பது இந்த மானுக்கோ, மாட்டுக்கோ சாப்பிடுகிற செடி கிடையாது. உதாரணமாக எல்லா இடத்திலும் புல்லாக இருக்கும், பார்த்திருப்பீர்கள், அந்தப் புல், எலுமிச்சைப் புல், எலுமிச்சைப் புல்லைப் பார்த்திருப்பீர்கள், எல்லா இடத்திலும் அந்தப் புல்லாக இருக்கும். அந்த எலுமிச்சைப் புல்லுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் தொடர்பு கிடையாது, அது ஒரு களைச் செடி. எல்லா மலையிலும் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதை மான் சாப்பிடாது, மாடு சாப்பிடாது, அது வளர்ந்தால் மற்றச் செடி வளர முடியாது. நாம் என்ன நினைத்துவிட்டோம் என்றால் இயற்கையாகவே இந்த மரம் எல்லாம், அந்த மலை எல்லாம் பச்சை பசேலென்று இருக்கிறதே, புல்லாக வளர்ந்திருக்கிறது என்று நினைத்திருக்கிறோம். அந்த புல்வெளி மலைகள் என்று சொல்கிறோமே, அந்தப் புல்வெளி மலைகள் என்னவாக இருந்தன என்றால், பெரும்பாலான புல்வெளி மலைகள் வந்து எலுமிச்சைப் புல், இதிலே போய் மான் மேயாது.

நீங்கள் கேரளாவிற்குள் போகிறீர்கள் என்றாலே அந்தக் குமுளி, தேக்கடி தாண்டி உள்ளே போகிற இடத்திலெல்லாம் நீங்கள் அந்த மலையில் இந்த எலுமிச்சைப் புல்லைப் பார்ப்பீர்கள். எங்காவது மானைப் பார்த்திருக்கிறீர்களா? எங்கே காட்டெருமையைப் பார்த்தீர்கள்? நீங்கள் முதுமலையில் பார்ப்பது மாதிரியோ, மற்ற இடத்தில் பார்ப்பது மாதிரி காட்டெருமையை இங்கே பெரிதாக பார்க்க முடியாது. இப்போது இதுதான் அதனுடைய காரணம். இந்தக் காரணங்களைப் பற்றியெல்லாம், அப்புறம் பாதுகாப்பு, வேட்டைக்காரர்கள் உள்ளே வருகிறார்கள், புலி வேட்டை, தோலை உரித்து எடுத்து விற்பதற்காகப் பெரிய கோடிக் கணக்கில் போகிறது என்பதற்காக உள்ளே வருகிறார்கள் என்றால் அவனைத் தடுப்பதற்கோ, கண்காணிப்பதற்குரிய எந்தக் கட்டமைப்பும் இவர்கள் செய்யவில்லை.

புலிகள் சரணாலயத்தில் போடப்பட்டிருக்கக்கூடிய பணியாளர் இருக்கிறானே, காட்டுப் பகுதியில் வசிக்கக்கூடியவர்களைத்தான் வேலைக்குப் போடுகிறார்கள் அல்லவா? எவனும் நிரந்தர வேலை கிடையாது, யாருக்கும் நிரந்தர வேலை கிடையாது. அவர்கள் அத்தனை பேருமே தற்காலிக வேலை, ஒப்பந்தத் தொழிலாளர்கள். நீங்கள் வால்பாறையைப் பார்த்தாலும் சரி, கொடைக்கானலைப் பார்த்தாலும் சரி, ஊட்டியைப் பார்த்தாலும் இந்த இடத்திலெல்லாம் வனப்பகுதியில் அந்த வன உடையைப் போட்டுக் கொண்டு இருப்பார்கள், கையில் அவர்கள் எல்லோருமே ஒப்பந்த ஊழியர்கள், குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டு வெறுமனே இருந்துவிட்டுப் போகலாமே ஒழிய, நீங்கள் ஒரு அரசு ஊழியராக நீங்கள் இருக்க முடியாது. அப்போது இது என்ன செய்கிறார்கள் என்றால் இது வந்து ஆட்கள் பற்றாக்குறையாக, இவர்கள் வந்து பெயரளவுக்கு இதில் மீட்பு செய்கிறோம், மீட்பு செய்கிறோம் என்று சொல்லி இந்த நிலத்தைப் பிடுங்குவதை ஒரு வேலையாக நீதிமன்றமும், அதிகாரிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவில் ஒரு பெரிய தொடர்பும் புரிந்துணர்வும் இருக்கிறது. நீர்நிலைப் பகுதியைப் பாதுகாக்கிறேன் என்று சொல்லி அவர்களை வெளியேற்றுவது, நெடுஞ்சாலை தேவைப்படுகிறது என்று சொல்வதற்காக அதை வெளியேற்றுவது, தொழிற்சாலைக்குத் தேவை என்ற பெயரில், விமான நிலைய வளர்ச்சித் திட்டங்கள், இப்போது காடு என்று எல்லா இடத்திலும் யார் பாதிக்கப்படுகிறார்கள்? நகரத்தில் ஏழை எளிய மக்கள், அவனுக்கு இருக்கிற இடம் ஒன்றே இடம், அங்குதான் உட்காருவான். ஏன் இங்கே இன்றைக்கு வந்தான்? அவன் நூறு வருடத்திற்கு முன்பு, ஐம்பது வருடத்திற்கு முன்பு ஆற்றங்கரையில் தண்ணீர் இருக்கும், எடுத்துக் கொள்வான், அந்த இடத்தில் யாரும் அதிகமாகக் குடியிருக்க மாட்டார்கள், இவன் குடியிருந்து குடிசை போட்டு இருந்து கொள்வார்கள்.

ஆற்றங்கரையோரத்தில்தானே நமக்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா, கீழடி வரைக்கும் நாகரிகம் இருந்தது? பாலைவனத்தில் போய் வைத்திருந்தானா? தண்ணீர் இடத்தில்தானே இருப்பான்? அப்போது ஆற்றங்கரையோரம் கட்டிய இதெல்லாம் வீடுகளெல்லாம் ஆக்கிரமிப்பா? முதலில் ஹரப்பா, மொகஞ்சதாரோவை இடிக்க வேண்டும். அதில் என்ன பெருமை இருக்கிறது? அதில் மனித வாழ்வியல் முறையினுடைய அடிப்படை அறிவு கூட இல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவர்களுக்குள் அதற்குப் பிறகு அறநிலையத்துறை வந்துவிட்டது. இந்த அறநிலையத்துறைக்காரர்கள், இவர்கள் நாங்கள் நிலம் எல்லாம் கோயில் நிலத்தைத்தான் எடுக்கப் போகிறோம் என்று சொல்லி இப்போது தமிழ்நாடு முழுக்கப் பல இலட்சம் ஏக்கரில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களை வீடற்றவர்களாக ஆக்கியிருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் தமிழ்நாட்டின் நிலைமை, ஏழை எளிய மக்களின் நிலைமை அவ்வளவு மோசமாக மாறப் போகிறது. இன்றைக்கு ஏதோ ஒரு இடத்தில் குடிசையைப் போட்டு உட்கார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனையெல்லாம் அடித்து விரட்டி வீடு இல்லாமல் ரோட்டில் இறக்கி விடப் போகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இவன் போடுகின்ற இடமோ கண்ணகி நகரோ, பெரும்பாக்கமோ, இந்த இடங்கள் எல்லாம் வாழவே முடியாத இடமாக இருக்கின்றன. அங்கு வேலை வாய்ப்பும் கிடையாது, கல்வி வாய்ப்பும் கிடையாது, மருத்துவ வசதிகள் கிடையாது, போக்குவரத்து வசதி கிடையாது, ஒன்றும் கிடையாது. அங்கு ஒரு காவல் நிலையத்தைப் போட்டு எல்லாவற்றின் மேலும் வழக்கைப் போட்டு எல்லாவற்றையும் குற்றவாளியாக்கு, அடி, மிதி, கொல்லு, எவ்வளவு பாசிசமாக அந்த அதிகாரிகளும் இந்த அரசாங்கமும் இருக்கின்றன. இந்தத் தொல்காப்பியப் பூங்கா நடத்துகிறார்கள் அல்லவா? அடையாறு கழிமுகப் பகுதியில் இருக்கிறதா? பயங்கரமாகக் கதவு கிட்டெல்லாம் போட்டுக் காசு வாங்குகிறானே, உள்ளே போவதற்கு? யாரோட நிலம், யார் காசு வாங்குவது? அந்த இடத்தில் எல்லாக் குடிசையையும் அகற்றிவிட்டு அரசு கதவு போட்டு மூடிவிட்டு, அது உள்ளே போவதற்கு உனக்குக் காசு வாங்குவாய், அதற்கு ஒரு கிளப்.

இப்போது புரிகிறதா, இதை நிர்வாகம் செய்வது யார்? சி.ஆர்.ஆர்.டி என்று ஒரு அறக்கட்டளை, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, அது யார் நிர்வாகம் செய்கிறார்கள்? அதிகாரிகள், உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அவர்கள் இப்போது தனியார் நிறுவனமாக மாற்றிவிட்டார்கள், அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனம் நடத்துகிறார்கள், இலாப நிறுவனம் நடத்துகிறார்கள், இப்போது இலாபம் காட்டுகிறது.

இப்போது என்னவென்றால் மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலத்தை அரசு எடுத்து அதை என்ன செய்கிறார்கள்? ஒரு இலாப நோக்கத்திலான ஒரு நிறுவனமாக மாற்றுகிறார்கள், அதற்குப் பிறகு என்ன செய்வார்கள்? தனியார் ஒப்பந்தத்திற்குக் கொடுத்து விடுவார்கள். இதுதான். அப்போது வந்து பெரிய அளவிற்கு இந்தச் சாலை வளர்ச்சி, தொழிற்சாலை வளர்ச்சி, சிப்காட் வளர்ச்சி, விமான நிலையம் கட்டுவது, அப்புறம் வந்து புலிகள் சரணாலயம் கட்டுவது, இப்படி என்று சொல்லி, அப்புறம் ஆற்றங்கரையை மீட்கிறது, குளத்தங்கரையை மீட்கிறது என்று சொல்லிவிட்டு எல்லாவற்றையும் எடுத்து இந்தப் பகுதியில் எல்லா மக்களையும் நடுத்தெருவில் விடுவது அதிகாரிகள் வேலையாக இருக்கிறது.

அதிகாரிகள் மாதிரிப் பாசிஸ்டுகள் எவனும் கிடையாது. இந்த அதிகாரிகள் மாதிரிக் கேவலமான ஆட்களை நான் பார்த்ததே கிடையாது. களத்தில் இறங்குகிறது, அனகாபுத்தூரில் எல்லாம் வந்து அந்த ஆணையரம்மா என்ன சொன்னார்? பிள்ளைகள் வந்து கேட்கிறார்கள், மேடம் எங்களுக்குத் தேர்வு இருக்கிறது, நாங்கள் தேர்வு முடித்த பிறகு கூட வீடு இடியுங்கள் என்று சொல்லிக் கேட்டதற்கு, இதெல்லாம் படித்து என்ன செய்யப் போகிறார்கள் என்று பேசினார். அந்த மக்கள் வந்து புலம்பினார்கள், என்னிடம் வந்து இப்படி எல்லாம் நடக்கிறது, இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்றார்கள். இது இங்கு மட்டும் இல்லை, எல்லா ஊர்களிலும் இடித்திருக்கிறார்கள்.

நீங்கள் பாலாற்றங்கரையிலிருந்து எல்லா ஆற்றங்கரையிலும் இதேபோலக் கதை நடக்கிறது, அது பெரிய அநியாயம். நாமெல்லாம் மேகமலையெல்லாம் விட முடியாது, இவர்கள் சொல்வதற்கெல்லாம் விட முடியாது. நீங்கள் சாஸ்த்ரா போன்ற முப்பத்து ஆறு ஏக்கர், ஐம்பத்து ஐந்து ஏக்கருக்கு வந்து இந்தப் பேரம் பேசுகிறார் நீதிபதி, இது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்தப் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார், அவருக்கு என்ன தேவை வந்தது?

இப்போது உச்சநீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதி இப்படிப் பேசுகிறார் என்றால் மற்ற நீதிபதிக்குத் தைரியம் வருமா வராதா? நீதிபதிகள் கடவுள் இல்லை, முதலில், இரண்டாவது சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள், அந்தச் சம்பளத்தைக் கொடுப்பது மக்கள். அவர்களெல்லாம் தாங்கள் வந்து ஒரு மிகப் பெரிய ஒரு அதிகாரத்தில் இருக்கிற மாதிரி அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் அத்தனை பொய் சொல்கிறார்கள்.

அனகாபுத்தூரில் இடித்ததற்கு எந்த ஆவணமுமே கிடையாது அதிகாரியிடம். ஆக்கிரமிப்பு என்று சொல்வதற்கு, ஆக்கிரமிப்பாளர் என்று சொல்வதனுடைய சூட்சுமம் என்ன தெரியுமா? அதில் பொதுவாகவே வளர்ச்சித் திட்டத்திற்கு எடுக்கிறீர்கள், எதற்கோ தேவைக்கு எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் இழப்பீடு தர வேண்டும், இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நகர்ப்புறமாக மூன்று மடங்கு, கிராமப்புறமாக இரண்டு மடங்கு தர வேண்டும். ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் எதுவுமே தர வேண்டாம்.

மேகமலை, வருசநாடு பகுதியில் இத்தனை நாளாக இருக்கிற மக்கள் இருக்கிறார்கள், பட்டா நிலத்திலிருந்து எல்லாவற்றையும் எடுக்கப் போகிறேன் என்கிறான் அல்லவா, இழப்பீடு எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு என்று சொல்லிவிட்டான் அல்லவா, இழப்பீடு கிடைக்காது, இழப்பீடு தர வேண்டியதில்லை, ஏமாற்றுவது. இங்கே அதிகாரிகள் சொந்தப் பணத்தைக் கொடுக்கிற மாதிரி, இவன் வீட்டுப் பணத்தைக் கொடுத்து இவர்கள் ஓட்டாண்டியாகப் போகிற மாதிரி இந்த அதிகாரிகள் இந்தப் பணத்தை எல்லாம் மிச்சப்படுத்தி, மிச்சப்படுத்தி அரசாங்கத்தைக் காப்பாற்றப் போகிற மாதிரியே ஒரு மிகப் பெரிய பாசிஸ்டுகளாக மாறி உட்கார்ந்திருக்கிறார்கள். அதிகாரிகள் கொடூரமான சிந்தனையோடு இருக்கிறார்கள்.

அதிகாரிகள் அறிக்கை போடுகிறாய், ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்படப் போகிறது என்று தெரிந்தால் அதற்கு ஏற்ற மாதிரி என்ன? மக்கள் எங்கே வசிக்கிறார்கள்? வரலாற்றுப் பதிவு என்ன இருக்கிறது? அவனுக்கான மற்ற வாய்ப்பு வசதி என்ன? ஒரு இலட்சம் பேரை வெளியேற்றினால் எங்கே போய் உட்கார்ந்து என்ன வேலை பார்ப்பான்? அவன் பாட்டுக்கு இருப்பதைப் பொறுக்கி, இருப்பதைச் சாப்பிட்டுக் கொண்டு காட்டுக்குள் இருக்கிற, காட்டுக்குள் பகுதிகளோடு சேர்ந்து வாழக்கூடிய இடத்தில் அந்த ஊர் அத்தனையும் நான் பார்த்தேன், ஒரு ஊரின் குப்பையே கிடையாது, அந்த ஊரை அவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள், அந்த மக்கள் அவ்வளவு ஒழுங்காக வைத்திருக்கிறார்கள். நீ இளவஞ்சிப் பண்ணைக் காடுதான் உனக்கு ஆக்கிரமிப்பு என்றால் அதுவும் காடுதான், அதனால்தான் புலி வரவில்லை என்ற ஒரு பொருளைக் கொடு, அப்படி எதுவும் கிடையாது அங்கே, அப்படி ஒரு வாழ்விடம் கிடையாது.

சரி, அப்படித்தான் உருவாக்கப் போகிறேன் என்றால் இது எல்லாவற்றையும் வெளியேற்றிவிட்டுத்தான் புலிகள் சரணாலயம் உருவாக்க வேண்டுமா? சத்தியமங்கலம் வன சரணாலயத்திற்குள் புலி எத்தனை செத்தது, களக்காடு முண்டந்துறை எவ்வளவு வளர்ந்தது, பதிவு என்ன இருக்கிறது? பெரிய பதிவெல்லாம் ஒன்றும் காட்டவில்லை, இவர்கள் ஒரு கூடுதல் பதிவெல்லாம் இவர்களிடம் கிடையாது. புலிகள் சரணாலயம் உருவாக்கிய பகுதிகளில் புலிகள் இன்றைக்குப் பன்மடங்காகப் போனதற்கான எதுவுமே கிடையாது. எழுபத்து ஏழு புலியில் நாற்பத்து நான்கு புலிகள் இவர்கள் கண்ணுக்குக் கீழே கொல்லப்பட்டது, இவர்கள் இருக்கக்கூடிய புலிகள் சரணாலயத்தில் எப்படி வேட்டைக்காரர்கள் உள்ளே சென்றார்கள் என்றால் இது எல்லாம் கேட்க வேண்டியது நாம் இல்லை, உச்சநீதிமன்றம், அவர்கள் கேட்கவில்லை என்றால் நாம் கேட்கிறோம்.

இந்த நாட்டில் வந்து வாழவே முடியாத அளவிற்கு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், நீதிமன்றமும் சேர்ந்து கொண்டு மக்களைப் போட்டுப் பிழிகிறார்கள். இது எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு செங்கலைக் கூட மேகமலையில் எடுக்க நாங்கள் விடமாட்டோம். நான் வெளிப்படையாகச் சொல்கிறோம், வருசநாடு, மேகமலைப் பகுதியிலிருந்து ஒரு செங்கலைக் கூட அகற்றுவதற்கு அரசுக்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒருபோதும் நடக்கவே முடியாது, நடத்த முடியாது, விட முடியாது. இவ்வளவு அநியாயமாக ஒரு ஐம்பது ஏக்கர் நிலத்திற்கு, ஒரு தனியார் கல்வி பல்கலைக்கழகத்திற்காக உட்கார்ந்து வக்காலத்து வாங்கக்கூடிய நீதிமன்றத்தின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் எந்தப் பதிவும் இல்லை, இங்கே சொல்லக்கூடிய மத்திய நிபுணர் குழு ஒரு அளவீட்டையும் செய்யவில்லை, அதற்கான எந்த அளவீட்டு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை, திறந்த ஆவணம் இல்லை, பாதிக்கப்படுகின்ற மக்களிடம் கருத்துக் கேட்கவில்லை, எதையும் செய்யவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கிறது என்பதற்காகக் கேட்க வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. அப்படி எல்லாம் கர்நாடகாவில் கேட்டுக் கொண்டு காவிரியில் தண்ணீர் விட்டதும் கிடையாது, உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்து வாயைப் பொத்தித்தானே உட்கார்ந்திருக்கிறார்கள்?ஏன் இவ்வளவு வேண்டும்?

நான் ஒன்றே ஒன்று இறுதியாகக் கேட்கிறேன்: அவ்வளவு காட்டின் மேல் அக்கறை இவர்கள் அதிகாரிகளுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது என்றால் யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் கட்டி வைத்திருக்கிறான், அந்த ஜக்கி வாசுதேவ் என்கிற சாமியார் கட்டி வைத்திருக்கிறான், சாமியாருக்கு அவ்வளவு நிலம் எதற்கு? அவ்வளவு டெசிபல் இசை எதற்கு? அங்கே எதற்கு அவ்வளவு கட்டுமானம்? என்று எந்த நீதிபதி கேட்பதற்கு யாருக்காவது முதுகெலும்பு இருந்ததா? யாருக்காவது இருந்ததா? ஒருவருக்கும் கிடையாது. அவ்வளவு காட்டின் மேல் அக்கறை இருந்தது என்றால் ஈஷா யோகா மையத்தின் மேல் வை. அங்கே நடனமாடக் கூப்பிட்டால் பிரதம மந்திரியிலிருந்து, குடியரசுத் தலைவரிலிருந்து, உள்துறை அமைச்சரிலிருந்து, பாதுகாப்புத் துறை அமைச்சரிலிருந்து, நீதிபதி எல்லாமே நடனமாடிக் கொண்டுதானே இருக்கிறாய், நடனமாடுகிறாய் அல்லவா? அதுதான் ஊர் உலகமே பார்க்கிறது அல்லவா? அங்கே கை வை, நீ யோக்கியனாக இருந்தால் அங்கே கை வை.

உச்சநீதிமன்றம் யோக்கியமானதாக இருக்கிறது என்றால் நீ ஈஷா யோகா மையத்தின் மேல் கை வை, அப்போது நீ யோக்கியன் என்று சொல்லலாம். அப்போது நீதிமன்றம் ஈஷா மையம் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடிய அந்த இடத்தைக் கை அங்கே கை வைக்கவில்லை, அது சட்டவிரோதக் கட்டுமானம் என்று சொல்லித் தமிழ்நாடு வனத்துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அதில் உச்ச நீதிம்னறம் அங்கே கை வைக்கவில்லை. ஆனால் காலம் காலமாக மக்கள் வசித்துக் கொண்டிருக்கக்கூடிய மேகமலை, வருசநாட்டில் கை வைப்பதை எப்படி அனுமதிப்போம்? ஒரு காலத்தில் தமிழனை வந்து கிள்ளுக்கீரையாகப் பார்ப்பதை நாங்கள் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. அப்போது இது மாதிரி மிகவும் அநியாயமான போக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த லட்சணத்தில் தேர்தல் ஆணையத்தின் ஆணையர் வந்து அவ்வளவு கேவலமாக எஸ்.ஐ.ஆர் பணியில் முறைகேடாக நடந்திருக்கிறார் என்று, இன்றைக்குத் துணை ஆணையராக இருக்கிறவர்களே வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள். அவரையும் காப்பாற்றியிருக்கிறார்கள் உச்சநீதிமன்றம். தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்திருக்கிறது, எங்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருப்பது இயல்பானதுதான், அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று மூன்று பேரில் இரண்டு பேர் கொடுத்திருக்கிறார்கள். அப்போது எது பெரும்பான்மை? சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யக் கூடாது என்று சொல்லி இரண்டு பேர் கொடுத்திருக்கிறார்கள், மூன்று பேரில் இரண்டு பேர் பெரும்பான்மையா இல்லையா? எப்படி முடிவு எடுப்பீர்கள்? அதற்கு மறுதேர்தல்தான் முடிவாக இருக்க முடியும். முதலில் இந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்கிற கேள்வி வந்துவிட்டது அல்லவா? இப்போது சிறப்புத் தீவிரத் திருத்தத்தினால்தானே பாதிக்கப்பட்டிருக்கிறது?

இப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடைய தொகுதி கொளத்தூர் தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டது, இப்போது அந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நீக்கப்பட்டது. இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தமே உடன்பாடு இல்லாமல் நடந்திருக்கிறது என்று தலைமை ஆணையர்களில் துணைத் தலைமை ஆணையர்களில் இரண்டு ஆணையர்கள் சொல்லிவிட்டார்கள், மூன்று பேரில் இரண்டு பேர் சொல்லிவிட்டார்கள் அல்லவா? அப்போது சிறப்புத் தீவிரத் திருத்தமே தவறாகத்தான் நடந்திருக்கிறது என்று அர்த்தம் ஆகிவிட்டதா? அப்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் தவறாக நடந்துவிட்டது என்றால் எல்லா இடத்திலும் தேர்தல் முடிவுகள் மாறித்தானே போகின்றன? நான் எந்தக் கட்சி, எந்தக் கட்சி என்று சொல்லவில்லை, தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவோ, அல்லது தி.மு.க-வுக்கு ஆதரவாகவோ, தி.மு.க-வுக்கு எதிராகவோ, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகவோ எல்லாம் இல்லை, தேர்தலே நேர்மையாக நடக்கவில்லை.

அப்படிப் பார்த்தால் எல்லா மாநிலங்களும், மகாராஷ்டிராவிலிருந்து அசாம் வரை, மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கம் வரை பெரிய அளவிற்குப் பாதிக்கப்பட்டது. இப்போது மோடியை எதிர்த்த தலைவர்கள் மம்தா பானர்ஜி, கேரளாவினுடைய பினராயி விஜயன், தமிழ்நாட்டினுடைய முதல்வர் ஸ்டாலின், மூன்று பேர் தோற்றுப் போவது நடந்திருக்கிறதா இல்லையா? ஆனால் இதே மோடி வந்து தோற்றுப் போனாரே, அவருடைய தொகுதியில் அயோத்தியில் செய்தியானது? அன்றைக்கு மின்சாரம் நிறுத்தினார்கள் அல்லவா, அறிக்கையில் வந்து அவர் பின்தங்கியிருக்கிறார், பின்தங்கியிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் உடனே தடை செய்தீர்களா? இப்போது இதையெல்லாம் சேர்த்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இப்போது இருப்பது சிறுபான்மை ஆட்சி, மோடி ஆட்சி சிறுபான்மை ஆட்சி, பெரும்பான்மை ஆட்சி கிடையாது. மோடியோட ஆட்சி பீகார், ஆந்திராவினுடைய ஆதரவின் கீழ் இயங்கக்கூடிய ஒரு சிறுபான்மை அரசாங்கம், பெரும்பான்மை அரசாங்கம் கிடையாது. அப்போது இந்த இடத்தில் இந்தத் தேர்தல் ஆணையர் இப்படி ஒரு வேலையைப் பார்த்திருக்கிறார். இதனால் என்ன ஆகிறது என்றால் உங்களுக்குப் பெரிய பாதிப்பு எங்கே தெரிய வரும்? மாநிலங்களவையில் வரும். மாநிலங்களவையில் இருக்கக்கூடிய எண்ணிக்கை மாறும், எதிர்க்கட்சிகளுடைய எண்ணிக்கை குறையும். எதிர்க்கட்சியை இன்றைக்குக் குறைத்து, இன்றைக்கு வந்து மாநிலங்களவையில் பெரும்பான்மை பா.ஜ.க-வுக்குக் கிடையாது என்றால் நிறைய சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது இந்தத் தேர்தலில் சட்டசபைத் தேர்தலைத் திரும்ப நடத்த வேண்டும் என்பதில் முதலமைச்சர் பதவிக்கான பிரச்சினையாக நான் பார்க்கவில்லை,

மாநிலங்களவை நிலைமை என்ன? அப்போது எல்லாச் சட்டத்தையும் மோடி அரசு நிறைவேற்றிக் கொண்டு போய்விடுவாய். யார் முதலமைச்சர் ஆவார்கள் என்பது இரண்டாவது பிரச்சினை, நான் அதற்குள் வரவில்லை, ஒரு தமிழக வெற்றிக் கழகம் கூடப் பெரும்பான்மையாக வந்துவிட்டுப் போகட்டும், எனக்கு அதெல்லாம் பிரச்சினை கிடையாது. ஆனால் உச்சநீதிமன்றம், மாநிலங்களவையில் எம்.பி-யின் அமைப்பு மாறுகிறது அல்லவா, எம்.எல்.ஏ மாறினால் எம்.எல்.ஏ அமைப்பு மாறினால் அங்கே மாறுகிறது அல்லவா, அப்போது நான் அதைக் கேள்வி கேட்பேன் அல்லவா? அசாம் தேர்தலும், மேற்கு வங்கத் தேர்தலும் மாற்றியது அல்லவா, மேலவையில் எண்ணிக்கையை? சட்டத்தை நிறைவேற்ற என்ன சட்டத்தை நிறைவேற்ற அந்த இடத்தைக் கொண்டு வந்தீர்கள் என்றால், அதனால்தான் சொல்வது இது கேள்விக்குரிய விடயம்.

பா.ஜ.க-வை ஆதரிக்கிற மாநிலங்களை வைத்துக் கொண்டு பொதுவான மசோதா கூட நிறைவேற்றலாம், எல்லாமே செய்யலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம். இப்போது தமிழர்களை இரண்டாம் குடிமக்கள் என்று அறிவித்துவிட்டுப் போய்விடலாம், எவனும் கேட்க முடியாது. தமிழ்நாட்டை இரண்டு மாநிலமாக, மூன்று மாநிலமாக உடைக்கலாம், கேட்க முடியாது. தமிழ்நாட்டினுடைய அணைகள் எல்லாவற்றையும் எடுத்து அவனே வைத்துக் கொண்டு எப்போது திறப்பது, எப்போது மூடுவது என்று அவன் முடிவு செய்யலாம், கேட்க முடியாது. எல்லாப் பல்கலைக்கழகத்தையும், கல்லூரியையும் அவனே எடுத்துக் கொண்டு போய்விடலாம், கேட்க முடியாது. இனிமேல் தமிழ்நாடு பல்கலைக்கழகத்திலோ, கல்லூரியிலோ தமிழ் பையன்களுக்கு இடம் கிடைக்குமா தெரியாது. வடநாட்டுக்காரர்களெல்லாம் வந்து படிப்பார்கள், இங்கே இருக்கிற கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி-க்கு வருவார்கள், மதுரை தியாகராஜரிலோ, திருச்சி செயின்ட் ஜோசப்பிலோ யார் வேண்டுமானாலும் வந்து படிப்பார்கள், வெளிமாநிலக்காரர்களெல்லாம் வந்து படிப்பார்கள், தமிழ்நாட்டுக்காரனுக்கு இடம் கிடைக்காது, மருத்துவக் கல்லூரியில்தான் நடக்கிறது, அது மாதிரி நிலைமை வந்து நிற்கும். இதனால்தான் இந்தத் தேர்தல் ஆணையத்தைக் குறித்த பிரச்சினை மிகவும் கவலைக்குரிய பிரச்சினை, எதிர்க்க வேண்டும். இந்த ஞானேஷ் குமார், அந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் ஆணையர், அவர் கைது செய்யப்பட வேண்டும்.

நெறியாளர் கேள்வி: ஆனால் கடந்த காலங்களில் அந்தத் தேர்தல் ஆணையம் அல்லது சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்ட அளவிற்கு இப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிற்கு ஒரு எதிர்ப்புக் குரலோ, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த விழிப்புணர்வோ, தேர்தல் ஆணையத்தைக் குறித்த நடவடிக்கைகள் குறித்த விவாதமோ, ஒரு அரசியல் விவாதமோ இல்லையே தமிழ்நாட்டில்?

திருமுருகன் காந்தி பதில்: இல்லை, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து நாங்கள்(மே 17) அப்போதே முற்றுகைப் போராட்டமெல்லாம் அறிவித்தோம், செய்தோம். அன்றைக்குத் தி.மு.க வந்து அதைப் பற்றிப் பெரிதாக, தி.மு.க கூட்டணி வந்து அதைப் பற்றிப் பெரிதாகப் பேசவில்லை. மேற்கு வங்கம் வந்து இதற்காகப் போராட்டம் செய்தார்கள், மம்தா பானர்ஜி வந்து உச்சநீதிமன்றத்தில் நேராகவே தோன்றினார்கள், தோன்றி மிகவும் மோசமாக நடக்கிறது என்று சொன்னார்கள். இப்போது என்ன ஆகியிருக்கிறது என்றால் மிக மோசமான கலவரங்கள் மேற்கு வங்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றன, மிக மோசமாகத் தேர்தல் ரத்தாகியிருக்கிறது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளால் வேட்பாளரையே நிறுத்த வைக்க முடியவில்லை, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சியை நிற்க வைக்கவும் முடியவில்லை, அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தார்கள்.

இப்போது அடுத்து வந்த காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளரையும் கைது செய்து காவலில் வைத்துவிட்டார்கள், வேட்பாளரை நிறுத்தி வைக்க முடியவில்லை, இப்படிப்பட்ட ஒரு நிலைமை மேற்கு வங்கத்தில் நடக்கிறது. இதுதான் பெரிய ஆபத்து, இது நாளைக்குத் தமிழ்நாட்டிற்கு நடக்கும், எல்லா இடத்திற்கும் நடக்கும்.

இன்றைக்கு மேற்கு வங்கத்தில் நடக்கக்கூடிய விடயம்தான் நமக்குக் கவலைக்குரிய விடயம், அதைப் பார்த்துத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. அதனால் இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு தீர்வை, தீர்ப்புகளைக் கொண்டு வந்து கொடுத்த உச்சநீதிமன்றம், இவ்வளவு மோசமாகத் தேர்தல் நடத்திய இந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரி, இப்படிப்பட்ட ஒரு நாட்டிற்குள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், அந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரி கைது செய்யப்பட வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமானது, இதுதான் எல்லோரும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது உத்தவ் தாக்கரே இதைப் பேசியிருக்கிறார், மம்தா பானர்ஜி அம்மா இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், கெஜ்ரிவால் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார், காங்கிரஸ் கட்சி இது குறித்தான ஒரு அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நாங்கள் இது குறித்து நாளை பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். இதற்கான போராட்டங்களை நாங்களும் மேற்கொள்வோம். எங்களுக்குத் தேர்தல் இல்லைதான், ஆனால் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றால் யார் நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்பது கூட நமக்குத் தெரியாமல் போய்விடும். நாம் ஒன்று நினைத்துக் கொண்டிருப்போம், அவன் செய்து கொண்டிருப்பான், அதனால் இது எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய இடத்திற்கு நாம் வந்து நிற்கிறோம். இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்காரக் கூடாது.

கடந்த ஐந்து வருட தி.மு.க காலத்தில் பல ஜனநாயக அமைப்புகள் அமைதியாகிவிட்டார்கள், தி.மு.க-விற்கு நெருக்கடி தந்துவிடக் கூடாது என்று ஒதுங்கியிருந்தனர். அதனால் போராட்ட உணர்வு மங்கிப் போய்விட்டது.

இன்றைக்குத் திடீர் என்று எழுந்தால் எப்படி எழுவான்? அதனால் போராட்ட உணர்வை மக்களிடத்திலே வெளியே தெளிவுபடுத்தித் தங்களுடைய நியாயத்திற்கு மக்கள் போராடுவதற்கு வர வேண்டும். இப்போது இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டு கொண்டிருக்கிறோம், மே பதினேழு இயக்கம் என்றைக்குமே இதில் வந்து பின்தங்கி நிற்காது, முன்னால்தான் நிற்கும், தொடர்ச்சியாகப் போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டுதான் இருப்போம், நாங்கள் எங்களுடைய போராட்டத்தில் எந்த இடத்திலும் மக்களுக்கு எதிரான தீர்ப்புகள் வராத வகையில் நாங்கள் தடுப்புப் பணிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

நெறியாளர்: நன்றி, நிறைய விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.

திருமுருகன் காந்தி:நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »