சவுதி அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களதேச குடிமக்களுக்கு நேர்ந்த கொடுமை கண்டனத்திற்குரியது என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் அக்டோபர் 21, 2026 அன்று பதிவு செய்தது.
சவுதி அரசு எத்தகைய அரசாக இருக்கிறது என்பதில் இருந்தே அதன் மதரீதியாக பிறரை தண்டிக்கும் உரிமை குறித்து பார்க்க முடியும். பங்களாதேச மக்கள் போன்ற மூன்றாம் உலக நாட்டு குடிமக்கள் மீது சவுதி காட்டும் கடுமை, எப்போதும் அமெரிக்க போன்ற மேற்குலக நாட்டு குடிமக்கள் மீது காட்டுவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பலர் சவுதி அரசால் மரணதண்டனை பெறுகிறார்கள். இவர்கள் மூன்றாம் உலகநாடுகளை சார்ந்த சாமானியர்கள், உழைப்பவர்கள், ஏழைகள். மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சவுதி அரசு மேற்கொள்ளும் மனிதகுல விரோத செயல்களை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த இயலாது. புனிதத்தலத்திற்கு இழுக்கு நேர்ந்ததென சவுதி சொல்லுமெனில், அதை அனைத்துலகின் முன்னர் வெளிப்படையாக நிரூபித்திருக்க வேண்டும், இதுகுறித்த விளக்கத்தையும், வெளிப்படைத்தன்மையையும் விசாரணைகளில் நடத்தியிருக்க வேண்டும். சாமானிய மக்களை மன்னிப்பதிலேயே மானுடநேயம் தழைக்க முடியுமே ஒழிய, ஏழை சாமானியர்களை தண்டித்து நெறிகளை காக்க இயலாது.
மேற்குலகத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ப்ரான்ஸ் போன்ற நாட்டை சார்ந்தவர்கள் நபி அவர்களையோ, இசுலாத்தையோ இழிவு படுத்துவது தெரியவந்தால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் வழிமுறையைத்தான் சவுதி கையாள்கிறது. அல்லது இந்நபர்கள் கொலைக்குற்றம் செய்தால், ‘Qisas or blood money மூலமாக தீர்த்துக்கொள்ள வழிவகை செய்கிறார்கள். தூதரக உதவிகள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, தீர்வு காணப்படுகிறது. ஆனால் பங்களாதேசத்து அப்பாவிகளுக்கு இந்த தூதரக வசதிகள் கிடைக்க சவுதி அனுமதிக்கவில்லை.
இசுலாமியர்களின் மிகப்புனிதமான இடமான ‘காபா’வில் போர்த்தப்பட்ட துணியின் ஒரு பகுதியை மிகமோசமான பாலியல் கிரிமினலான ஜியோனிச எப்ஸ்டீயினுக்கு அமீரகத்தின் அஜீஸா அல் அகமதி அனுப்பியதும் அம்பலமாகிய செய்தி. இதுகுறித்து இதுவரை சவுதி அரசு வாய்திறக்கவில்லை.
சவுதியின் அரசர் முகம்மது பின் சல்மான் இந்த எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்பதும் வெளியான செய்தி. குழந்தைகளை வைத்து பாலியல் வன்முறை செய்த நபருடன் தனது நாட்டு அரசருக்கு என்ன தொடர்பு என சவுதி அரசாங்கத்தால் விசாரணை நடத்த இயலுமா? அப்போதெல்லாம் மதநெறி என்னவானது? அரசனுக்கு ஒரு நீதி, சாமானியனுக்கு ஒரு நீதியா?
இச்சமயங்களில் எல்லாம் மெளனம் காக்கும் சவுதியின் ‘கரார்’ மத நெறிகள், சாமானிய மக்கள் மீது ஏவப்படுவதன் காரணமென்ன? இவற்றையே நாம் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது…
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரசால் கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு எவ்வித சலுகையும் சவுதி காட்டுவதில்லை. ஏனெனில் இவர்கள் ஆசிய-ஆப்ரிக்க-லத்தீன் அமெரிக்க நாட்டை சார்ந்த அப்பாவி ஏழைகள். அதேசமயம் பெரு-கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் மேற்குலக நபர்கள் செய்யும் இழிவு பதிவுகள் கண்டறிதப்பட்டால், அந்நாட்டு தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த நபர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த இரட்டைத் தன்மைக்கான காரணம் என்ன?
சவுதி அரசு மேற்குலகை பகைத்துக்கொண்டால், தமது பொருளாதாரம், இராணுவ உறவுகள் பாதிப்புற்குள்ளாகும் என நன்கு அறியும். இந்த சமயத்தில் சவுதி அரசு இசுலாம் மதநெறிகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதன் மதச்சார்பு என்பது சந்தர்ப்பவாதம் சார்ந்தது. அதில் எவ்வித யோக்கியதையும் இல்லை. யேமன் நாட்டு ஏழை தொழிலாளியோ, வங்கதேசத்து பெண்ணோ, பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜையோ, இலங்கையின் குடிமகனோ சிறு தவறு இழைத்தாலும், சவுதி அரசு தனது ‘கரார்’ முகத்தைக்காட்டும். அமெரிக்கர் எனில் பம்மும். பங்களாதேசத்தின் தொழிலாளர்கள் கிட்டதட்ட 35 லட்சம் பேர் சவுதியில் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தால் சவுதியை பகைத்துக்கொள்ள இயலாது. அதேபோல சவுதியால் அமெரிக்கா-மேற்குலகை பகைக்க இயலாது. தனது சட்டங்களை தனது தேவைக்கேற்ப வளைத்துகொள்ளும் சவுதி அரசு.
ஏன் ஏழை நாட்டு பிரஜைகள் மீது கடுமையை காட்டுகிறது சவுதி அரசு? ஆண்டுதோறும் பல மூன்றாம் உலக நாடுகளை சார்ந்தவர்கள் சவுதி அரசால் கடுமையான தண்டனை உள்ளாகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம், சவுதியில் நிறைந்திருக்கும் ஏழை கூலி தொழிலாளர்கள் மீது சவுதி அரசு உருவாக்கும் அச்ச உணர்வும், கட்டுப்படுத்தலும் காரணம். மிக மோசமான பணிசூழல், குறைந்த சம்பளம், மோசமான வேலை காரணமாக தொழிலாளர்களிடையே உருவாகும் எழுச்சி, கோவம், எதிர்வினை ஆகியவற்றை தடுக்க இதுபோன்ற கடுமையான சட்டவிதிகளின் மூலமாக தண்டனை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது சவுதி.
இந்நாட்டின் Kafala (sponsorship) system எனும் தொழிலாளியை வேலைக்கு ஒப்பந்தம் செய்யும் வழக்கம் தொழிலாளர் நலன் சார்ந்ததல்ல. தொழிலாளிக்கான உரிமை, பணி ஓய்வு, நாடு திரும்புதல், ஊதிய உயர்வு, சித்திரவதை என எவற்றையும் கேட்டு பெற வாய்ப்பற்ற நிலையிலேயே இந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். இவ்வாறு சிக்குண்ட தொழிலாளர்களிடையே ஏற்படும் மனநெருக்கடி, கிளர்ச்சி காரணமாக நடக்கும் மோதல்கள், தாக்குதல்கள், கொலைகளுக்கு மரணதண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டு இந்த தொழிலாளர்களை அடக்கி வைத்து சுரண்டுகிறது சவுதி. இதை நேரடியாக பயன்படுத்த இயலாத சூழல் இருப்பின் மதநெறி சட்டங்களை காட்டி அச்சுறுத்தலை மேற்கொள்கிறது. இதனாலேயே மேற்குலக குடிமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மூன்றாம் உலக தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை
சவுதி அரசு உண்மையிலேயே, மத உணர்வுக்கு முன்னிலைப்படுத்துகிறதெனில், அதன் மத உணர்வு இசுரேலுக்கு எதிராக திரும்பி இருக்க வேண்டும். மெக்கா, மதீனாவை போல இல்லையெனிலும், ஜெரூசலத்தின் அல்-அக்சா மசூதி இசுலாமிய உலகில் முக்கியத்துவம் பெற்றது. இந்த மசூதியில் அராஜகம் செய்வதும், அதன் புனிதத்தன்மை கெடுப்பதுமாக இசுரேலிய ஜியோனிஸ்டுகள் நடந்த போதெல்லாம் சவுதியின் எதிர்வினை என்ன? கொத்துகொத்தாய் இசுலாமியர்களை பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இசுரேல் கொல்லும் போது இசுரேலுக்கு ஆதரவாக நின்றது சவுதி அரசு. இசுரேல் அரசுடன் நேரடியாக பொருளாதார உறவு, ஆயுத கொள்முதல் செய்யும் போதெல்லாம் மதநெறிக்கு இழுக்கு ஏற்படவில்லையா? குழந்தைகளை கொல்லும் இசுரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் உறவு வைப்பதை இசுலாமிய மதநெறி ஏற்றுக்கொள்ளுமா? இவையெல்லாம் சவுதி அரசை நோகடிக்காதெனில், இரு சாமானிய மனிதர்களின் நடவடிக்கைதான் புனிதத்தன்மையை கெடுத்துவிடுகிறதா? மதத்தின் பின்னால் சவுதி ஒளிந்துகொண்டு செய்யும் ஈவிரக்கமற்ற செயல்களை எக்காரணம் கொண்டும் கண்டிக்காமல் கடந்து செல்ல இயலாது.
மதரீதியான தண்டனைகள் புனிதம் காப்பவை என்றால் மாட்டுக்கறி வைத்திருந்தார்களென அப்பாவி இசுலாமியர்களை, தலித்துகளை கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை என்னவென சொல்வது? அயோத்தி புனிதமான நகரம், கங்கை புனிதமான நதி, இமயமலை புனிதமான மலை என சங்கிகள் செய்யும் கலவரத்தை ஏற்க இயலுமா? மனிதனாக ஏற்றுக்கொள்ளும் நெறியே தழைத்து நிற்கும். மனிதனின் தவறிழைக்கும் இயல்பை மரணம் மூலமாக தடுத்துவிட இயலாது.
மரணம் புனிதத்தை காத்துவிடவும் செய்யாது. மரணதண்டனை கொடுக்கும் நபர்களின் யோக்கியதையை எதை வைத்து அளவிடுவது? அவர்கள் கடவுளர்களா? குழந்தைகளை கொல்லும் இசுரேலோடு தொடர்பு வைக்கும் சவுதி அரசருக்கு எதிராக தண்டனை கொடுக்கும் மனவலிமை, மதவலிமை அவர்களுக்குண்டா?
சகமனிதரை கொல்ல எந்த மனித கூட்டத்திற்கும் அதிகாரமில்லை என்பதுதான் மரணதண்டனைக்கு எதிரான போராட்டத்தின் முழக்கம். ஒரு மனிதனுக்கு மரணதண்டனை விதிக்கும் அதிகாரம் எந்த ஒரு மனித நிறுவனத்திற்கும் இல்லை. கொடும் தண்டனைகள் மூலமாக தவறுகள், குற்றங்கள் தடுக்கப்படுவதும் இல்லை. சவுதியில் நூற்றுக்கணக்கான சாமானியர்கள் ஆண்டுதொறும் கொல்லப்பட்டும் குற்றம் தொடர்கதை எனில் தண்டனையின் யோக்கியதை என்ன எனும் கேள்வியை உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் எழுப்பியுள்ளன. ஏகாதிபத்திய அடிமை அரசுகளுக்கு சாமானிய-எழை மக்களை தண்டிக்கும் உரிமையை நாம் எக்காரணம் கொண்டும் கொடுத்துவிட இயலாது. மானுடநேயம் மட்டுமே மனிதத்தையும், உலகத்தையும் காக்கும். மரண தண்டனையை ஒழிப்போம்.