கொல்கத்தா திரைக் கல்லூரியில் தென்னிந்திய மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். வெறியாட்டம்

கொல்கத்தாவில் உள்ளது சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரி (SRFTI). இது இந்தியாவின் முதன்மையான திரைக்கலைக் கல்லூரிகளில் ஒன்று. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இருந்து திரைக்கனவோடு வந்த 300 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். ஆனால் இங்கு கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அங்கு இரண்டு முறை RSS-ன் கிளை அமைப்புகளான ‘அகில இந்திய கிராகக் பஞ்சாயத் (ABGP)’ மற்றும் ‘இந்து ஜாக்ரன் மஞ்ச் (HJM)’ அமைப்புகளால் தாக்குதல் நடந்துள்ளது. வெளியில் இருந்து திட்டமிட்டு வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கற்கள், கட்டைகள், பாலியல் மிரட்டல், ரத்தம் என அந்த வளாகம் ரத்தக் களமாகியுள்ளது. ஆனால் இந்த வன்முறையை விட கொடூரமானதாக, அதற்கு பிறகு நடந்தது இருக்கிறது.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கல்லூரி நிர்வாகமும், மாநில அரசும் தாக்குதல் நடத்திய RSS அமைப்புகளை காப்பாற்றுவதற்காக, பாதிக்கப்பட்ட தென்னிந்திய – குறிப்பாக தமிழ் – மாணவர்கள் மீதே பழியைப் போட்டுள்ளன. இது வெறும் வளாக மோதல் அல்ல, மொழி – இன வெறுப்பு தாக்குதலாக நடந்துள்ளது.

இக்கல்லூரியில் தமிழ்நாட்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட்டோர் படித்து வருகின்றனர். திரைக்கலை கற்க வந்த அவர்களுக்கு, உயிரச்சம் ஏற்படும் சூழலை ஆர்எஸ்எஸ் அங்கு உருவாக்கி இருக்கிறது.

SRFTI ஒரு ஒன்றிய அரசு நிறுவனம். அங்குள்ள மாணவர்களின் விடுதிக்கு அருகே உள்ள அரங்கில், RSS கிளை அமைப்பான ABGP ஒரு நிகழ்ச்சி நடத்த வந்தது. அதைப் பார்த்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதிர்த்த அடுத்த நொடி, அங்கு கூடியிருந்த 200-க்கும் மேற்பட்ட ABGP கும்பல் அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது.

மாணவர்களின் சட்டைகளை கிழித்து, தலையில் ரத்தம் கொட்ட கொட்ட அடித்துள்ளனர். இந்த தாக்குதல் செய்தி மாணவர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பரவ, விடுதியில் இருந்த மாணவர்கள் திரண்டு வந்து தான் அந்த கும்பலை துரத்தியடித்திருக்கிறார்கள். தப்பிக்க முடியாத சிலரை மட்டும் மாணவர்கள் அங்கேயே பிடித்து வைத்தனர்.

அதற்கு ஒரிரு மணி நேரத்திற்குள், 200-க்கும் மேற்பட்ட RSS கும்பல், வளாக வாயிலில் திரண்டு, செங்கற்களை மலைப் போல் மாணவர்கள் மீது வீசியிருக்கிறது. இதில் ஒரு மாணவனின் தலை உடைந்து ரத்தம் வழிந்திருக்கிறது. பலர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவிகளை பார்த்து பாலியல் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். காயம்பட்டவர்களை தூக்க வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கூட தாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை வெறியாட்டமும் நடக்கும்போது, மேற்கு வங்க காவல்துறை வேடிக்கை மட்டும் பார்த்திருக்கிறது. தாக்கியவர்கள் மீது இன்று வரை ஒரு FIR கூட பதியவில்லை.

இந்த சம்பவம் SRFTI உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் நடந்தது. ஆனால் அந்த தொகுதி எம்எல்ஏ, “இதற்கு காரணம் தென்னிந்திய மாணவர்கள் தான்” என்று ஊடகங்களில் சொல்லியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதே பழி போட்டுவிட்டார்.

அதன் பிறகு மாணவர்களால் வெளியே போகவே முடியவில்லை. துணைவேந்தரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. துணைவேந்தரும், எம்எல்ஏ-வும் தாக்கிய அமைப்பின் பெயரைக் கூட சொல்லாமல், கல்லூரிக்குள் வன்முறை நடந்தது என்று மட்டும் பேட்டி கொடுத்துள்ளனர். இது தங்கள் மீது குற்றம் சுமத்தி, அந்த அமைப்பை காப்பாற்றும் நோக்கத்தில் உள்ளதாக  மாணவர்கள் கூறுகின்றனர். 

மேலும், தென்னிந்திய மாணவர்களை தேசத்துரோகிகள், பாகிஸ்தானியர்கள் என்றும் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்துத்துவவாதிகள் பரப்பியுள்ளனர்.

இதனையடுத்து அக்டோபர் 4-ல் ஆர்எஸ்எஸ் மற்றொரு கிளை அமைப்பான ‘இந்து ஜாக்ரன் மஞ்ச் (HJM)’ அமைப்புடன் தொடர்புடைய சுமார் 300 பேர் வளாக வாயிலில் கூடி உள்ளே நுழைய முயன்றுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் காவி கொடியை ஏந்தி இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். சிலர் பெரிய தடிகளையும் எடுத்து வந்துள்ளனர்.

கல்லூரி வாயிலை வந்தடைந்த இந்த அமைப்பினர் மாணவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசியுள்ளனர். இரண்டு மாணவிகள் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளனர். மேலும், ஒருவன் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து தமிழ்நாட்டு மாணவர்களை குறிவைத்து தாக்க முயன்று அச்சுறுத்தல் விடுத்திருக்கிறான். இவை அனைத்தும் துணைவேந்தர் கண் முன்னே நடந்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அக்டோபர் 2, 3 தேதிகளில் மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கலாம் என்று SRFTI மாணவர்கள் காவல்துறைக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் முன்கூட்டியே எச்சரிக்கை கடிதம் கொடுத்திருந்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை இரு தரப்பும் கண்டுகொள்ளவில்லை. கல்லூரி சார்பிலும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை, காவல்துறை சார்பிலும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைவிட அதிர்ச்சியான விடயம், அந்த அமைப்பின் பெயர் கூட FIR-ல் இல்லை. தாக்குதல் நடத்திய அமைப்பின் பெயர் தெளிவாக சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டு, அவர்கள் தான் நிகழ்ச்சி நடத்துவதாக பகிரங்கமாக அறிவித்திருந்த போதும், காவல்துறை, சாட்சி இல்லை என்று கூறியிருக்கிறது.

விசாரணை நடந்து முடிந்த பின்பு தான் அந்த அமைப்பின் பெயரை FIR-ல் பதிவு செய்வோம் என்று காவல்துறை கூறியிருப்பது, பாதிக்கப்பட்ட மாணவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக, தாக்குதல் நடத்தியவர்களை பாதுகாக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

அக்டோபர் 6, 7-ல் மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதுகாப்புக் கோரினர். ஆனால் அங்கு வந்த கல்லூரி நிர்வாகிகளும், பணியாளர்களும் மாணவர்களிடம் ”கொல்கத்தாவில் இருந்தால் பெங்காலியில் தான் பேச வேண்டும், இது உங்கள் கல்லூரி அல்ல” என்று கூறி தென்னிந்திய மாணவர்களைத் தனிமைப்படுத்தி மிரட்டியுள்ளனர். விடுதியில் இருந்து வெளியேற்றுவதாகவும், பட்டப்படிப்பை முடிக்க முடியாதெனவும் அச்சுறுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக இருந்த ஊழியர்களும், பேராசிரியர்களும் அச்சுறுத்தப்பட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கல்லூரி நிர்வாகம் அக்டோபர் 8 முதல் இன்று வரை நிர்வாகம் மாணவர்களை மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டி வருகிறது. வகுப்புக்கு திரும்பாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது. ஆனால் உயிருக்கும், பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தர மறுக்கிறது. இந்த தொடர் சம்பவங்கள் மாணவர்களின் மனநலத்தையும், அன்றாட வாழ்க்கையையும், படிப்பையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மாணவர்கள் தொடர்ந்து கல்வி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவங்களில் துணைவேந்தர் ’சந்தோஷ் அஜ்மேரா’வின் செயல்பாடு RSS-க்கு சாதகமாக இருக்கிறது என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது மாணவர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களை தாக்கிய ‘இந்து ஜாக்ரன் மஞ்ச்’ அமைப்பினர் 3000 பேர் வர இருந்ததாகவும், தான் பேசி 300 பேரை மட்டுமே வர வைத்ததாகவும் அவர் பேராசிரியர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த அளவுக்கு RSS அமைப்புடன் அவருக்கு என்ன நெருக்கம் இருக்கிறது என்கிற சந்தேகம் மாணவர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும், பாஜக எம்.பி.யும், நடிகருமான ’சுரேஷ் கோபி’ தான் அந்த கல்லூரியின் தலைவராக இருக்கிறார். ஆனால் அவரும் இந்த சம்பவம் குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. எந்த இடத்திலும் எந்த பதிவையும் செய்யவில்லை.

கல்லூரிக்குள் வன்முறை நடத்திய ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவர்களையே மிரட்டும் போக்கினில் செயல்படும் கல்லூரி துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என்றும், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கல்லூரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்திய மாணவர்களைக் குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களை குறி வைத்து தாக்கிய இந்த செய்தி, தமிழ்நாட்டின் எந்த ஊடகத்திலும் வெளிவரவே இல்லை. தமிழ்நாட்டின் எந்த அரசியல் தலைமைகளும் இது குறித்து பேசவில்லை. தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை. இடதுசாரி மாணவர்கள் அமைப்பு மட்டும் உறுதுணையாக இருப்பதாகவும்,  ஜனநாயக அமைப்புகள் இது குறித்து பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்டோபர் 27 அன்று ‘ஒரு நாள் நாடு தழுவிய கல்வி நிறுத்தப் போராட்டத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளனர். 

இது வெறும் அந்த வளாகத்தில் மட்டும் நடந்த வன்முறை அல்ல. இது ஒன்றிய அரசு கல்வி நிறுவனத்தில், தமிழர்கள் உட்பட தென்னிந்திய மாணவர்கள் படிக்கக்கூடாது என்று நடத்தப்படும் மொழி மற்றும் இன வெறுப்பு தாக்குதலாக நடைபெற்றுள்ளது.

ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படைக் கட்டுமானமே வன்முறை தான். ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றுவது, அங்கு கேள்வி கேட்கும் மாணவர்களை ஒடுக்குவது, தமிழ் உட்பட தென்னிந்திய அடையாளங்களை ‘தேச விரோதம்’ என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்துவது போன்ற வேலைத் திட்டத்தில் ஒன்றே மாணவர்கள் மீதான வன்முறை. இடதுசாரி அமைப்புகள் வலுவாக உள்ள JNU போன்ற கல்லூரிகளில் ABVP போன்ற ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்புகள் செய்வதும், இப்போது SRFTI-யில் நடப்பதும் ஒன்று தான்.

ஆர்எஸ்எஸ்-சிற்கு, ABGP, HJM என பெயர்கள் மாறும், காவிக்கொடி மாறாது. கல் வீசும் கைகள் மாறும், சித்தாந்தம் மாறாது. ஒரு சுவரொட்டியை கிழித்ததற்கு பாரத மாதாவை இழிவுபடுத்திவிட்டதாக கதை கட்டி, தமிழ் மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைப்பதை தேசபக்தி என்று பரப்பும் இது தேசபக்தி அல்ல, இது வெறும் மொழி வெறுப்பு, இன வெறுப்பு.

இன்று SRFTI-யில் தமிழ் மாணவர்களை அடிக்க அனுமதித்தால், நாளை ஒவ்வொரு ஒன்றிய பல்கலைக்கழகத்திலும் நம் பிள்ளைகள் தாக்கப்படுவார்கள். எனவே இது SRFTI பிரச்சினை மட்டும் அல்ல, தமிழர்கள் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் உரிமைக்கான பிரச்சினை. மாணவர்களுக்கு ஆதரவாக ஒவ்வொருவரும் குரல் எழுப்புவது அவசியம்.

ஒருவர் மீது வன்முறை செலுத்துவதை தேசபக்தி என்று கூறிக் கொண்டுதான் ஆர்எஸ்எஸ் வளர்கிறது. தமிழ்நாட்டில் 128 இடங்களில் பேரணி நடத்த முனைகிறது. இவர்களை அம்பலப்படுத்தி விரட்டியடிப்போம். பாதிக்கப்பட்ட திரைக்கல்லூரி மாணவர்களுக்கு மாணவர்களுக்கு துணை நிற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »