
சென்னை மாகாணத்திலிருந்து தமிழர்கள் வாழும் எல்லைப் பகுதிகளைப் போராடி மீட்டெடுத்த எல்லைத் தியாகிகளை நன்றியுடன் நினைவுகூறும் நாளே தமிழ்நாடு நாள்!
’தமிழ்நாடு தமிழருக்கே’ என்று ஒன்றிய அரசை நோக்கி முரசறைந்த தந்தை பெரியார், சங்க இலக்கியச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி இம்மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா, ‘இந்தியா முழுமைக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்களே’ என்று வரலாற்றுப் பூர்வமாக நிறுவிய அண்ணல் அம்பேத்கர் – தமிழர்களின் அடையாளங்களை மீட்டுத் தந்த தலைவர்களை மனதிலேந்தி தமிழ்நாட்டின் உரிமை காக்க உறுதியேற்கும் நாளே இந்நாள்.
இந்நாளில் தமிழ்நாடு இழந்து கொண்டிருக்கும் அதிகாரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. “தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் இழந்தான்” – என்றார் தந்தை பெரியார். அவர் ‘தமிழன் தமிழ்நாட்டை இழந்தான்’ என்று கூறுவது மிகையன்று. ஏனென்றால் அவர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை காங்கிரஸ் அரசாங்கம் சிறுகச் சிறுக பறித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு வந்த பாஜக அரசாங்கம் மொத்தமாக பறித்துக் கொண்டிருக்கிறது.

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற வேண்டுமென்ற வேலை திட்டத்தில் ஒன்றாக, மாநில உரிமைகள் அனைத்தையும் அபகரித்து மையத்தில் சேர்த்துக் கொள்கிறது. ‘ஒரே நாடு’ என்கிற தங்களது இலக்கை அடைவதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களைக் குறிவைத்து நடத்தும் இந்த உரிமை பறிப்பு கல்வியில் ஆரம்பித்து கூட்டுறவு சங்கம் வரை நீண்டு கொண்டிருக்கிறது.
பள்ளியில், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கல்வி உரிமைத் தொகையை தருவோம் என 2000 கோடிக்கு மேலான தமிழ்நாட்டின் கல்வி உரிமை நிதியை சுருட்டிக் கொண்டது. கல்லூரியில், மாநிலப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதை தடுத்து வைத்திருக்கிறது. VBSA என்கிற சட்டத்தினால் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களையே அபகரிப்பதோடு, இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பதை கட்டாயமாக்கும் சூழ்ச்சிகளிலும் இறங்கி இருக்கிறது.
இப்படியாக மோடி அரசு, பள்ளியில் இருந்து கல்லூரி வரை தமிழ்நாட்டில் கல்வி உரிமைகளை பறிப்பதோடு நிற்கவில்லை. மருத்துவப் படிப்பிலும் அதன் கரம் எல்லையின்றி நீள்கிறது. தமிழ்நாடு அரசு கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நீட்டைத் திணித்து எளிய தமிழ்நாட்டு மாணவர்களையே சேர விடாது, அவர்களின் மருத்துவக் கல்வியையே முடக்கிவிட்டது.
மருத்துவ படிப்பில் மட்டுமல்ல மருத்துவத் துணைப் படிப்புகளான நர்சிங், ஆடியோலஜி, ரேடியோலஜி, லேப் டெக்னீசியன், பிசியோதெரபி (BPT) போன்ற 56-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகளிலும் தமிழ்நாட்டின் உரிமை மோடி அரசால் 2021-ஆம் ஆண்டு NCAHP என்கிற சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இதன்படி, இனி எந்த ஒரு துணை மருத்துவ கல்லூரியும் தமிழ்நாடு கட்ட முடியாது, நுழைவுத் தேர்வும் கட்டாயம், அவர்கள் தீர்மானிக்கும் பாடத்திட்டம், பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் தேசிய பதிவேட்டில் பதிவேற்ற வேண்டும் போன்ற பல விதிகளை இந்தச் சட்டம் உள்ளடக்கியது.

இது மட்டுமல்ல, தனியார் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அறிவித்து தமிழ்நாட்டிற்கு சொந்தமான 461 மருத்துவ இடங்களையும் தனியாரே முடிவெடுக்க அனுமதித்து விட்டது. மேலும் மருத்துவ உயர்தனிச் சிறப்பு படிப்புகளுக்கான தமிழக அரசுக்கு சொந்தமான 131 இடங்களையும் பறித்துக் கொண்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றிய தொகுப்புக்கு என இளநிலைப் படிப்புகளில் ஏற்கனவே 15 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும், முதுநிலைப் படிப்புகளில் 50% ஒதுக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.
பள்ளி, கல்லூரி, மருத்துவக் கல்லூரி என தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பறிப்பதுடன் தமிழ்நாட்டின் நிதி ஆதாரங்களையும் பறித்துக்கொண்டது. தமிழ்நாடு அரசு விதிக்கும் வரியினால் கிடைத்த நிதி ஆதாரமான ‘வாட்’ வரியை முடக்கி விட்டு, ஜிஎஸ்டியைத் திணித்து ‘வரிவிதிப்பு தன்னாட்சியை’ பறித்தது. தமிழ்நாடு ஈட்டும் வரி வருவாயில் பெருமளவு எடுத்துக்கொண்டு, சிறிய அளவே திரும்பிக் கொடுக்கிறது. ஒரு ரூபாய்க்கு 29 காசு அளவுக்கு தான் திரும்பப் பெறப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய ‘தண்டனைக்காக’ 2% சதவீதம் அளவு நிதியே ஒதுக்குகிறது. மாநில அரசு தன் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் வாங்கக்கூடிய கடன் வரம்பை தனது விருப்பத்திற்கேற்பக் கட்டுப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் தனித்துவமான ‘பொது விநியோகத் திட்டத்தினை’ ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என புதிய டிஜிட்டல் கண்காணிப்பு மென்பொருளுக்குக் கீழ் கொண்டு வந்து, ஒன்றிய அரசு மாநில அரசைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விதிகளைப் பின்பற்றாவிட்டால், மத்திய தொகுப்பிலிருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமைக்கான மானிய நிதி குறைக்கப்படும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.
மாநில அரசிடமிருந்து நம் மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பை ‘ஸ்மார்ட் மீட்டர் மீட்டர் திட்டம்’ மூலமாக ஒன்றிய அரசு பறிக்கிறது. இதனால் இனி இல்லங்களுக்கு நேரடியாக மின் ஊழியர் வந்து கணக்கெடுக்கத் தேவையில்லை. தனியார் சர்வர் மூலம் அங்கிருந்தபடியே மின் அளவீட்டு கணக்குகளை எடுத்துக் கொள்ளும் ஆன்லைன் கணக்கெடுப்பு முறை வந்து விடும். இவ்வாறு மின்சாரத்தை தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவது முதல் ஸ்மார்ட் மீட்டர் வரையான திட்டங்கள் வரை பலவும் தமிழ்நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கும் திட்டங்களே!
மின்சாரத் துறையில் ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறையால் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்கப்படும் இலவச மற்றும் மானிய விலையிலான மின்சாரம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் மின்சார உள்கட்டமைப்புக்கான மத்திய நிதி நிறுத்தப்படும் என்ற அழுத்தமும் இதன் பின்னால் உள்ளது.
தமிழ்நாட்டின் நிதியில் கை வைத்ததை போல நம் மாநிலத்தின் கனிம வளம் மீதும் குறி வைத்த ஒன்றிய பாஜக அரசு ‘கனிம வளங்கள் திருத்த மசோதா’வை கொண்டு வந்தது. மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநில அரசே நிர்வகித்து, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநில மக்களுக்கு பயன்படுத்தும் உரிமையை இந்த மசோதா மூலம் பறித்து கொள்ள நினைக்கிறது ஒன்றிய அரசு.
மேலும் ‘தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (NCDC) திருத்த மசோதா’ என்ற பெயரில் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களையம் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை ‘கூட்டுறவு’ என்பது மாநிலப் பட்டியலில் இருந்து வந்த நிலையில், NCDC சட்டம் மூலம் கூட்டுறவு துறை மீது ஒன்றிய அரசு வெளிப்படையாகவே அத்துமீறுகிறது என்று விவசாய சங்கங்கள் கூறுகின்றன.
இவை மட்டுமல்லாது ‘செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டணம் (GNSS Toll System)’ மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் தூரத்தைக் கணக்கிட்டு தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறையை ஒன்றிய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில எல்லைகளுக்குள் உள்ள சாலைகளையும் அதன் போக்குவரத்தையும் கணக்கிடுவதற்கு மாநில அரசை ஆலோசிக்காமல், ஒன்றிய அரசே தன்னிச்சையாக கணக்கிடுவது நம் மாநிலத்தின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகவே நாம் கருத முடியும்.

தமிழ்நாட்டின் நிலம்சார் உரிமைகள் மட்டுமின்றி கடல்சார் உரிமைகளும் ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு வருகின்றன. முன்பு தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் போன்ற பெரிய துறைமுகங்கள் மட்டுமின்றி, சிறு துறைமுகங்களை மேம்படுத்தும் அதிகாரமும் மாநில அரசிடம் இருந்தது. ஆனால் ஒன்றிய அரசின் புதிய கடல்சார் கொள்கைகளின்படி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி பெறவும் புதிய சிறு துறைமுகங்களுக்கான ஒப்புதல்களைப் பெறவும் டெல்லி அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கிறது. இது தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தக தன்னாட்சியைக் குறைப்பதற்காகவே என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதோடு தமிழர் வேலைவாய்ப்பிலும் ஒன்றிய அரசு நம்மை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளில், தமிழ் மொழியை முதன்மை மொழியாகக் கொள்ளாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் விதிகளில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டு, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தமிழக அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் சூழல் உருவாகும். (மே 17 இயக்கம் தொடர்ச்சியாக இதை எதிர்த்து போராடி வருவதும் மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் இதற்காக தன்னுயிர் ஈந்ததும் குறிப்பிடத்தக்கது.)

மேலே குறிப்பிட்டுள்ள சட்டங்களோடு தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சமூக நல அமைப்புகளின் தன்னாட்சியை நேரடியாகப் பாதிக்கும் FCRA திருத்த மசோதா கொண்டு வந்தது, தொகுதிகள் மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை குறைக்க முயலுவது என இன்றளவும் ஒன்றிய அரசு மாநில அரசிற்கு, மாநில உரிமைகளுக்கு, மாநில அதிகாரத்திற்கு விரோதமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு ஒன்றிய அரசு நம் மாநிலத்தின் வளங்களை சுரண்டி, அதன் உரிமைகளை நசுக்கும் வேளையில் தான் நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ வரலாற்றில் மிக முக்கிய நாளாக கவனம் பெறுகிறது. தமிழ்நாடு நாளை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என்பதோடு மட்டுமே நிறைவு கொள்ளாமல் நம் மாநிலத்தின் உரிமையைக் காக்க உறுதி ஏற்போம். தமிழ்நாடு இழந்து கொண்டிருக்கும் அதிகாரங்களை மீட்டெடுப்போம்.
(‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் பொதுக்கூட்டம் திருவாரூரில் இன்று (நவம்பர் 1 , 2026) நடைபெறுகிறது. ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற முழக்கத்தோடு மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழ் காப்பு நடைபயணம் இன்றைய ‘தமிழ்நாடு நாள்’ விழா பொதுக்கூட்டத்தோடு நிறைவு பெறுகிறது.)
