சாதி மதம் கடந்து ஒற்றுமையை வளர்த்துப் பேணிக்காத்த வீரமங்கை வேலு நாச்சியார்
வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்கள் போராடிய முதல் விடுதலைப் போர் என்றவுடன் 1857-இல் வடஇந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்தை பலர் நினைவுகூருவர். ஆனால் வடஇந்தியாவில் நடந்ததற்கு பல ஆண்டுகள் முன்னரே தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்த சிற்றசர்கள் குறித்தோ அவர்களுக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்த இசுலாமியர் குறித்தோ பலரும் அறிவதில்லை. அத்தகைய வீரம் செறிந்த தென்னிந்தியாவின் விடுதலை வரலாற்றிலே, பெண்கள் படையணி கொண்டு போருக்கு சென்ற, சிவகங்கை சீமை கண்ட பெண்சிங்கம், முதல் பெண் போராளி வேலு நாச்சியார்.
போரிலே தன் நாடு, தன் நாட்டு மக்கள், கணவர் என அனைத்தையும் இழந்து நின்றாலும் மனம் தளராமல் தன் நாட்டை அழித்தவர்களை அழிக்காமல் விடமாட்டேன் என்று சூளுரை ஏற்றவர் வேலு நாச்சியார். எட்டு வருட காலம் தன் மகளுடன் பல ஊர்களுக்கு கடும் பயணங்களை மேற்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக அதாவது அடிமைத்தனத்திற்கு எதிரான படையைத் திரட்டி பகையை வென்றவர் வேலு நாச்சியார்.
பெண்ணடிமைத்தனம் பல்வேறு சமூகக் கட்டுப்பாடுகளை உருவாக்கிய அந்தக் காலத்தில், கணவன் இறந்தவுடன் பல சடங்கு சம்பிரதாய புழுக்கத்தில் பெண்களை சிக்க வைத்துவிடுவார்கள். ஆனால் அந்த தடைகள் எல்லாம் தவிடுபொடியாக்கி வெளிவந்த வீர வாளே வேலு நாச்சியார். இந்திய சுதந்திர போராட்டக் களத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் முதலாக போர் தொடுத்த வீரப்பெண்மணி தமிழ்நாட்டை சேர்ந்த வேலுநாச்சியார் தான்.
சனவரி 3, 1730இல் இராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரின் தந்தையார் பெயர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி, தாயார் பெயர் சக்கந்தி முத்தாத்தாள் ஆவர். அரசாளும் உரிமை ஆண்மகனுக்கே உண்டு என்ற கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்திலும் தன் மகளை ஆண்பிள்ளை போன்று வளர்த்தார் அவரது தந்தை. தன் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள்வீச்சு, சிலம்பம், வளரி என்ற ஆயுதத்தை கையாள்வது போன்ற போர்க்களப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். தன்னை சுற்றி எதிரிகள் வளைத்து நின்றாலும் சமாளிக்கும் திறமையும் கடுமையான போர்ப் பயிற்சியும் கற்றார் வேலு நாச்சியார். தாய்மொழியான தமிழுடன் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம் என பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
இவ்வாறு வீர கலைகளை கற்றுத் தேர்ந்த தனது மகளுக்கு சிறந்த வீரனே மணமகனாக வரவேண்டும் என்று விரும்பிய தந்தை சிவகங்கை சீமையை ஆளும் முத்துவடுக நாதரை 1746 ஆண்டில் திருமணம் முடித்து வைத்தார். வேலுநாச்சியாரின் வீரமும், திட்டங்கள் தீட்டுவதில் உள்ள வல்லமையும் முத்து வடுகநாதருக்கு ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்தது. இதனால் மகிழ்ச்சியாக காலமும் ஓடியது.
திருமணத்திற்குப் பின் முத்து வடுகநாதர் சிவகங்கை மாவட்டத்தை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். மேலும் விவசாய பணிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தமையால் முத்து வடுகநாதர் விவசாயத்தையும் மேற்கொண்டு வந்துள்ளார். வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் உடனிருந்து அனைத்துப் பணிகளையும் வழி நடத்தியதால் முத்துவடுகநாதர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
இந்த காலக்கட்டத்தில்தான் ஆற்காட்டில் ஆட்சியில் இருந்த நவாப் முகமது அலி என்பவர், சிவகங்கை சீமை வளத்துடன் இருப்பதைக் கண்டு அவர்களிடம் வரி வாங்குவதற்காக தம்முடைய சிப்பாய்களை அனுப்பி வைத்தார். ஆனால் முத்துவடுகநாதர் வரி கொடுக்க முடியாது என விரட்டயடிக்க, கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் முத்துவடுகநாதருக்கு கடிதம் கொடுத்தனுப்புகின்றனர். அதில் “வரிகொடுக்காத பூலித்தேவன் நாட்டை விட்டு விரட்டப்பட்டார். அந்த நிலை உங்களுக்கும் ஏற்படும் எனவே முறையான வரி கட்ட வேண்டும் இல்லையெனில் நீங்கள் அதிக காலம் சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சி செய்ய முடியாது” என்று மிரட்டல் விடுத்ததை அடுத்து கடும் கோபம் கொண்ட முத்து வடுகநாதர் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினார். கோபமுற்ற ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பின் உதவியுடன் காளையார் கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த முத்துவடுகநாதர் மற்றும் வேலுநாச்சியாரை மறைந்திருந்து தாக்கினர். இதில் முத்துவடுகநாதர் கோவில் வாயிலிலேயே உயிரிழந்தார். (1772ல் இந்தப் போர் நடந்தது)
அங்கிருந்து தப்பிய வேலுநாச்சியாரும் அவரது மகளும், மருது சகோதரர்கள், தளபதி தாண்டவராயன் பிள்ளை ஆகியோருடன் மேலூர் வழியாக திண்டுக்கல் சென்றார். மைசூரை ஆண்ட ஹைதர் அலி உதவியுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறிது காலம் வேலுநாச்சியார் தங்கி இருந்தார். அங்குதான் வேலுநாச்சியார் படையணியை கட்டமைக்க ஹைதர் அலி, விருப்பாச்சி கோபால் நாயக்கர் உள்ளிட்ட பலரும் உதவிக்கரம் நீட்டினர்.
ஹைதர் அலியுடன் உருதுமொழியில் உரையாடியவர் வேலு நாச்சியார். இதனால் ஹைதர் அலி பெரும் மகிழ்ச்சியுற்றதுடன் வேலு நாச்சியாருக்கு பல உதவிகள் செய்தார். அங்கு எட்டு ஆண்டுகள் தங்கி பல்முனை போர் தொடுக்கும் முறைகளை பின்பற்றி ஹைதர் அலி வழங்கிய காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை மற்றும் பீரங்கி ஆகியவைகளுடன் சிவகங்கை நோக்கி திரும்பினார் வேலு நாச்சியார்.
புதிய போர் முறைகளை வகுத்து தன் நாட்டில் போர் பயிற்சி பெற்ற மக்களுடன் இணைந்து கி.பி.1780இல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். இறுதியாக வெள்ளையர்களின் ஆயுத கிடங்கை அழிக்க வேண்டும் என்கிற சூழலில் தன்னுடைய நாட்டை மீட்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட, பெண் படை வீரர்களின் தளபதியாக இருந்த குயிலி தானே ஒரு மனித வெடிகுண்டாக மாறி ஆயுத கிடங்கில் தாக்குதல் நடத்தினார். இதனால் வெள்ளையர்கள் திக்குமுக்காடி செய்வதறியாது நின்றனர். தன் உயிரைக்காட்டிலும் தாயக விடுதலைக்காக தங்களது உயிரையும் கொடுக்கத் துணியும் இம்மக்களின் வீரம் கண்டு இறுதியாக வெள்ளையர்களே வேறு வழியின்றி வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இவ்வாறு மீண்டும் சிவகங்கை மண்ணை கைப்பற்றினார் வேலு நாச்சியார்.
பெண் என்று தன்னை எண்ணி எதற்குமே சமரசம் செய்து கொண்டு பின் வாங்கவில்லை இவர். தனது கணவரை நயவஞ்சமாக கொன்றவர்களை பழிவாங்கும் மனதுடன், எட்டு ஆண்டுகள் தனது மகளையும் உடன் வைத்துக்கொண்டு இடம் மாறி மாறி பயணித்து, வெற்றி எனும் எல்லைக்காய் அடைவதற்காக திட்டங்களை வகுத்தவர். போரில் தலைமை ஏற்று வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மீண்டும் இழந்த மண்ணை மீட்டெடுத்த இந்தியாவின் முதல் வீரமங்கை வேலுநாச்சியார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் சிறந்த ஆட்சியை வழங்கி இருக்கிறார். மேலும் வேலு நாச்சியார் தம்முடைய ஆட்சிக் காலத்தில் பல கோயில்களை கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் எண்ணற்ற பணிகளை செய்ததுடன் சிவகங்கை விட்டு வெளி ஊருக்கு சென்று வணிகம் செய்ய அந்தந்த ஊர்களுக்கு சாலை வசதிகள் என பல்வேறு வகையான மக்கள் நலத் திட்டங்களை செய்திருக்கிறார். இவ்வாறு சிவகங்கை மக்களை செழிப்புடன் வைத்திருந்த வேலு நாச்சியார் கி.பி.1789 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார்.
டிசம்பர் 25, 1796 அன்று இயற்கை அவரை அழைத்து கொண்டுவிட்டாலும் சிவகங்கைச் சீமையை மீட்ட வீரமங்கையாக வரலாறு படைத்தவர் வேலு நாச்சியார். வடஇந்தியாவில் ஜான்சி ராணி பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்த வேலு நாச்சியார் தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் என்பதுதான் உண்மை வரலாறு.
ஹைதர் அலி சரியான நேரத்தில் உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செயலாற்றியவர் வேலு நாச்சியார். மேலும் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தானுடன் நட்புறவைப் பேணி வந்தார். இன்று இந்துக்களையும் இசுலாமியரையும் பிரிப்பதற்காக சதிவேலைகள் பின்னும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் வேலு நாச்சியாரை போற்றுவது போல் நாடகம் ஆடுகின்றன. ஆனால் கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு சார்பாக இடம்பெற்றிருந்த வேலுநாச்சியாரையும் மருதுசகோதரர்களையும் ஒன்றிய பாஜக அரசு நிராகரித்தது.
இவ்வாறு இரட்டை வேடமிடும் இந்துத்துவ சக்திகளின் நாடகத்தை முறியடித்து உண்மை வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சிகளை மே 17 இயக்கம் செய்து வருகிறது. வரலாறு மீட்பு மாநாட்டை ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைத்து மக்களுக்கு மத நல்லிணக்கத்தை ஊட்டி வருகிறது மே17 இயக்கம். எனவே சாதி மதம் கடந்து ஒற்றுமையாய் வளர்த்துப் பேணிக்காத்த வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவுகூர்வோம்.