திராவிடம்-தமிழ்த்தேசியம் தலைப்புகள் குறித்து உருவாகி வளர்கிற பலவேறு விவாதங்களுக்கு விடையளிக்கவும், கேள்வி எழுப்பவும், ‘திராவிடமும், தமிழ்த்தேசியமும்’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக நவம்பர் 15, 2024 வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. அதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய கருத்துரை.
இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு பெரும் பிரச்சனை என்னவென்றால், தமிழினத்தை முன்னேற்றுவதற்காக பல்வேறு காலகட்டங்களில் கருத்தியலாக வளர்ந்து வந்த அரசியல் கொள்கைகளை எல்லாம் ஒன்றுக்கொன்று எதிராக மோத விடுகின்ற ஒரு மோசமான சூழ்நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ‘திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் தமிழினம் உய்வதற்காக, வளர்வதற்காக, விடுதலை பெறுவதற்காக காலம்தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட கருத்தியல்’. இந்த இரண்டு கருத்தியலையும் ஒன்றோடு ஒன்று மோத விடக்கூடிய ஒரு மோசமான அரசியல் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
திராவிடம் என்றாலே தமிழுக்கு தீட்டு, தமிழ் தேசியம் என்பது ஏற்க இயலாத ஒன்று என்று இரண்டு எதிர் கருத்துக்களும் மிகக் கொச்சையான வாதங்களோடு பரப்பப்படுகின்றன. எதையுமே ஒரு அரசியல் விவாதமாக வைத்தால் நம்மால் பேசிவிட முடியும். ஆனால் கொச்சையான மொழியோடு இதன் மீது தாக்குதல் நடத்தும்போது இளம்பருவத் தோழர்களால் அதை எதிர்கொள்ள முடியாது. அதை உள்வாங்குவதிலே, அந்த அரசியலை புரிந்து கொள்வதிலே பல சிக்கல்கள் எழுந்து விடுகிறது. இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற கொள்கைகள், தத்துவங்கள் அல்லது சித்தாந்தங்கள் என்று சொல்லுகிறோமே இவைகளை எல்லாம் அரசியல் கட்சிகள் பேச ஆரம்பித்ததனால் வந்த பிரச்சனையை நாம் எதிர்கொண்டு கொண்டிருக்கிறோம்.
‘அரசியல் கட்சிகளுக்கு இருக்கக்கூடிய ஒற்றை நோக்கம் என்னவென்றால், அதிகாரத்தை கைப்பற்றுவது’. அவர்களுக்கு நல்லவர்கள் மட்டும்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என்று அவர்கள் என்றைக்கும் கேட்பதில்லை அல்லது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் தான் ஓட்டளிக்க வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்களுக்கு அனைவருடைய ஓட்டும் தேவைப்படுகிறது. அனைவரையும் சமாதானப்படுத்துகின்ற ஒரு அரசியலைதான் அவர்கள் வெளியிலே பேச வேண்டி இருக்கிறது. இரண்டாவது ‘மக்களிடத்திலே கருத்தியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும், முற்போக்கு சிந்தனையை கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் வேலை செய்வதில்லை’. அவர்களுக்கு தாங்கள் அதிகாரத்தில் வந்துவிட்டால் மாற்றத்தை கொண்டு வந்து விடுவோம் என்று தங்களை கடவுளாக நிறுத்தக்கூடிய ஒரு பண்பிலிருந்து அவர்கள் அனைத்து அரசியலையும் விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள். அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. இந்த பிரச்சனையைப் பற்றி தான் இன்றைக்கு நாம் பேச வந்திருக்கின்றோம்.
இவ்வளவு நாள் திராவிடம் இருந்தது, அதனால் அந்த ‘திராவிடத்தை ஒழித்து விட்டு தான் முதலமைச்சர் ஆனால், நீங்கள் எல்லோரும் மன்னர்களாக மாறி விடுவீர்கள், இங்கே இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் ஒரு காலத்தில் ஒரே நொடியிலே தீர்த்து விடுவேன் என்று சொல்லுகின்ற குடுகுடுப்பைக் காரர்களைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’. உண்மையாக தமிழ்நாட்டினுடைய, தமிழர்களுடைய பிரச்சனை என்ன என்கிற விளக்கங்கள் இங்கு நடப்பதில்லை. தோழர் ஷெரிப் அவர்கள் பேசும்பொழுது, இங்கு இருக்கக்கூடிய கட்சிகளை திமுக, அதிமுக ஆகிய இரண்டு ஆளுகின்ற, ஆண்ட கட்சிகள் நாங்கள் திராவிட கட்சிகளாக பார்ப்பதில்லை என்று சொன்னார்.
இங்கே தேர்தல் கட்சிகளாக இருக்கக்கூடியவர்களுக்கு என்று ஒரு சில வேலைகள் இருக்கிறது. மக்களிடத்தில் எந்த கருத்துக்கள் பற்றிக் கொள்ளுகிறதோ அதை வைத்துக்கொண்டு ஓட்டு வாங்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு அது மிகவும் எளிமையான வழிமுறையாக இருக்கிறது. ‘புதிதாக ஏதேனும் ஒரு கருத்தை மக்களிடத்தில் சொல்லி விதைத்து, அதற்காக உழைத்து, சிறை சென்று, போராடி அதை நிலைபெற வைப்பதெல்லாம் இந்த கட்சிகளுக்கு ஒரு காலத்திலும் வராது’. அது திராவிடமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசியமாக இருந்தாலும் சரி, அதே சமயத்திலே மக்களிடத்திலே இந்த கருத்துக்களை எல்லாம் போய் சொல்லி மக்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான வேலைகளை செய்யக்கூடியவர்களை, களத்தில் நின்று செயல்படக்கூடியவர்களை எல்லாம் அகற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த இடத்தில் தங்கள் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய பெரிய சிக்கல்.
திமுகவினுடைய நீண்ட கால ஆட்சியிலே ஏற்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் திராவிடத்தை குறை சொல்வது என்பது முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது பல இடங்களில் இருந்து அணுக முடியும். ஆனால் இது ஒவ்வொரு காலத்திலும் தொடர்ச்சியாக வெவ்வேறு வகையிலே பேசப்பட்டுக் கொண்டே வருகிறது. இது மாபொசி காலத்திலிருந்து பார்த்தோம் என்றால் மாபொசியை இதனுடைய பிதாமகராக நாம் பார்க்க முடியும். அவர் காலத்தில் இதற்கான ஒரு குழப்பமான அரசியலை தொடர்ச்சியாக அவர் முன்வைத்து வந்தார். அந்த அரசியல், அந்த குழப்பமான அரசியல் பெரிதாக வளர்ந்து இன்றைக்கு வேறொன்றாக வந்து நிற்கிறது.
இன்றைக்கு சீமான் பேசும் பொழுது என்ன சொல்லுகிறார் என்றால், திராவிடம் என்றால் தெலுங்கு என்று பேசுகிறார். இன்றைக்கு நாம் தமிழர் கட்சியில் வந்து இணைந்த இளைஞர்கள் ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் தமிழினத்திற்கு ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று வந்த இளைஞர்கள் எல்லாருக்குமே திராவிடம் என்றால் தெலுங்கு என்கின்ற ஒரு புரிதலை, அப்படி என்ற ஒரு மயக்கத்தை உருவாக்கிவிட்டார். அதற்குப் பிறகு இது சம்பந்தமான பல்வேறு கருத்துக்களை பேசுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. அது குறித்து எந்த இடத்திலும் அவர் உரையாடுவதற்கு வரவே இல்லை. அவர் எந்த மேடையிலும் இது குறித்து பேசுவதும் இல்லை. மிக லாவகமாக இந்த கருத்தை தன்னை தேடி வந்த இளைஞர்களின் மண்டைக்குள் விதைத்துவிட்டு இது சம்பந்தமான எந்த விவாதத்திற்கும் போகாமல் தனித்து நிற்கக்கூடிய வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவர் எந்த விவாதத்துக்கும் போவதில்லை
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கு திமுக-வின் மேல், காங்கிரசின் மேல் தான் பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள். ஆனால் ”திமுக, காங்கிரசை தவிர்த்து வேறு எந்த கட்சி முற்போக்காக இருக்கக்கூடிய, இயங்கக்கூடிய கட்சிகளிடத்திலும் அல்லது இயக்கங்களுடைய மேடைகளிலோ அவரை பார்க்க முடியுமா? என்றால் உங்களால் பார்க்க முடியாது”. நம்மாழ்வாருடைய மேடையில் நீங்கள் பார்த்திருப்பீர்களா என்றால் வாய்ப்பில்லை. நம்மாழ்வாரினுடைய படத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். ஆனால் ’நம்மாழ்வார் போராட்டத்தில் களப்போராட்டத்தில் இருந்த காலத்தில் எல்லாம் அவரோடு மேடையில் ஏறி பேசியிருக்கிறாரா? இல்லை அல்லது இதுபோல மக்களுக்காக போராடக்கூடிய களத்தில் இருக்கக்கூடிய இயக்கங்களோடு மேடை ஏறி நின்று பேசியிருக்கிறாரா? பேசியது கிடையாது’.
ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படும் என்றால், அங்கே கருத்து விவாதம் வரும். அந்த கருத்தியல் விவாதத்தை அவருக்குப் பின்னால் வரக்கூடிய அல்லது அவரைத்(சீமானை) தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய இளைஞர்களுக்கு கேள்விகளை உருவாக்கும். அந்த கேள்விகளுக்கு இளைஞர்களிடத்தில் பதில் சொல்வதற்கு இவரிடத்தில் எந்த பதிலும் இருக்காது. அதனால் என்ன செய்வார் என்றால், அவர் என்றைக்குமே மேடையில் தனித்து நிற்பது என்பதை உருவாக்கிக்கொண்டு, அதை மட்டுமே ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருவது நடந்து வருகிறது.
இப்போது பிரச்சனை என்னவாகியது என்றால், அவரை மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும் அதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த ஒரு போராட்டத்திற்கு சென்றாலும் அவர்கள் தனியாக வந்து நிற்பார்கள். அவர்கள் யாரோடும் கலக்கக்கூடாது, யாரோடும் பேசக்கூடாது, யாரோடும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது, உரையாடல் நடத்தக்கூடாது, எந்த கூட்டத்திற்கும் போகக்கூடாது என்று அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு போனார்கள். அவருக்கு பின்னால் சென்ற இளைஞர்கள் என்னவானார்கள்? தமிழ்நாட்டினுடைய போராட்ட சக்தியாக மாறாமல் போய்விட்டார்கள். வெறும் கட்சி அரசியலுக்குள்ளாக கொள்கை அரசியலை கொண்டு வந்து சிக்க வைப்பது, கட்சி அரசியலினுடைய தேவையை கொள்கை அரசியல் மூலமாக பேசிக் கொள்வது, ஆனால் கொள்கை அரசியல் நடத்துகின்ற இடத்துக்கு வரும்பொழுது அது கைகழுவி விட்டு செல்வது என இவைதான் இன்றைக்கு அவர்(சீமான்) தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற யுக்தியாக இருக்கிறது.
இப்போது என்ன ஆனது என்றால், திராவிடம் என்றால் தெலுங்கு என்று சொல்கிறார். அதற்கு என்ன காரணத்தை கொண்டு வருகிறார் என்றால் மாபொசியில் இருந்து குணாவிலிருந்து பல்வேறு உதாரணங்கள் எடுத்து வந்து அதை மேலோட்டமாக பேசிவிட்டு செல்வது நடக்கிறது. காலம் காலமாக 100 ஆண்டுகளாக தெலுங்கர்களே இங்கே ஆட்சியிலே இருந்தார்கள், அதனால் தமிழர்கள் வாழ்விழந்து போனார்கள், தமிழர்கள் உரிமை இழந்து போனார்கள்.
’தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணமே இந்த தெலுங்கர்கள் என்று ஒரு பிரச்சாரத்தை மேலோட்டமாக புரிய வைத்துவிட்டு விட்டார்கள். அப்படியென்றால், எப்படியாக அவர்கள் (தெலுங்கர்கள்) தங்களை வளர்த்துக் கொண்டார்கள் எந்த விவாதத்தை பேச வேண்டும். அதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை, உரையாட வருவதில்லை’.
நீங்கள் எந்த கருத்து வேண்டுமானாலும் பேசலாம், உரையாடல் இருக்க வேண்டும், ஒரு விவாதம் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி எந்த விவாதங்களும் நடப்பதில்லை. அதிகபட்சம் என்ன நடக்கும் என்றால் இது சம்பந்தமாக நீங்கள் பேசினால், முகநூலிலோ அல்லது சமூக வலைதளத்திலேயோ உங்கள் மீதான ஒரு கொடூரமான தாக்குதல் நடத்துவார்கள். உங்களை கொச்சைப்படுத்துவார்கள், இழிவுபடுத்துவார்கள், அல்லது உங்களை தெலுங்கு என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.
நாம் இந்தியாவில் வாழ்கின்றோம். இந்தியாவினுடைய சட்டங்கள் தான் நமக்கான சட்டங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு என்று தனித்த சட்டங்களென எந்த சட்டங்களும் கிடையாது. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தேசிய இனங்கள் பல்வேறு மொழி பேசுகின்ற மக்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டம் தான் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்த தேசத்தை ஒற்றை ராணுவம் பாதுகாக்கிறது. ஒற்றை அரசியல் சாசனம் ஆள்கிறது. ஒரு நீதி அமைப்பு வழிநடத்துகிறது. ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்குமான உச்சபட்ச அதிகாரிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறார்கள். பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இப்படியாகத்தான் இந்தியா இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள்(சீமான்) ”தமிழக இளைஞர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள் என்றால், தமிழ்நாடு என்று தனித்த நாடாக இருப்பது போலவும், அது ஒட்டுமொத்தமாக தெலுங்கர் கையில் இருப்பது போலவும், இத்தனை பிரச்சனைக்கும் காரணம் தெலுங்கர்கள் தான் என்பது போலவும் பேசுகிறீர்களே தவிர, டெல்லி என்ற ஒரு ஊர் இருக்கிறது, இந்தியா என்கின்ற ஒரு நாடு இருக்கிறது, அங்கு அரசியல் சாசன சட்டங்கள் எல்லாம் இருக்கிறது, அதெல்லாம் நமது தலைவிதியை முடிவு செய்து கொண்டிருக்கிறது என்று எதுவுமே பேசாமல் ஒட்டுமொத்த பிரச்சனையும் உள்நாட்டு பிரச்சனையாக, தமிழ்நாட்டு பிரச்சனையாக மட்டுமே பேசிக்கொண்டு போய்விடுகிறீர்கள்”.
இன்றைக்கு அந்த இளைஞரிடத்தில் பேசும் பொழுதெல்லாம் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளே இருக்கக்கூடிய சிக்கலை மட்டுமே வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது திட்டமிட்டு வளர்த்தப்படுகிறது. தமிழர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனை யாரால் உருவாக்கப்படுகிறது? ஈழ பிரச்சனை யாரால் உருவாக்கப்பட்டது?ஈழப்படுகொலை யாரால் உருவாக்கப்பட்டது? இப்படி எந்த கேள்விக்கும் அவர் (சீமான்) இதுவரைக்கும் பதில் சொன்னதில்லை.
தமிழ் ஈழ இனப்படுகொலையினுடைய அடிப்படை காரணம் என்ன? கலைஞர் செய்து விட்டார், திமுக செய்து விட்டது என்று சொல்லி விடுவதை செய்கிறார். திமுகவின் மீதும் கலைஞர் மீதும் எங்களுக்கு ஓராயிரம் விமர்சனங்கள், உங்களை விட அதிகமாக உண்டு. அது வேறு விதம். அது அரசியலாக விவாதிப்பதே தவிர, உங்களை மாதிரி செருப்பு தூக்கி காட்டுவது அல்ல, கொச்சையாக இழிவாக ஒருவரை பேசுவது அல்ல. அரசியலாக எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவன்தான் இது போன்ற கொச்சையான இழிவான விமர்சனங்களை முன்வைப்பான்.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு தமிழர்கள் பிரச்சனையோ அதனுடைய மூலாதார பிரச்சனை என்ன?, அதன் அடிப்படை காரணம் என்ன? என்பதை இந்த இளைஞர்களிடத்திலே சொல்லாமல் அவர்களுடைய எதிரியை மடை மாற்றுகின்ற வேலையை மிகத் தெளிவாக செய்து முடித்துவிட்டார்கள்.
இந்தியாவில் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு என்ன பிரச்சனை, அடிப்படை பிரச்சனை என்ன?, இந்தியாவில் நமக்கான முரண்பாடு எங்கிருந்து வருகிறது?, இந்தியாவுக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகள் என்ன?, இந்திய அரசு என்கின்ற ஒரு அரசு, மொழி வழியாக இருக்கக்கூடிய மாநில அரசு இரண்டுதான் இந்தியாவுக்குள்ளே இருக்கிறது. இந்திய அரசு மாநில அரசுக்கு கொடுத்திருக்கும் அதிகாரம் மிகக் குறைவாக இருக்கிறது. இதற்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது. இந்த மாநிலத்தினுடைய மொழிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது. மாநில மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கிறது. மாநில மக்கள் தங்களுக்கு தேவையான பொருளாதார திட்டங்களைக் கூட உருவாக்கிக் கொள்ள முடியாதநிலையிலே இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் ஒடுக்கக்கூடிய இந்திய அரசு என்ற ஒன்றுதான் எல்லா கொள்கையும் வகுத்துக் கொண்டிருக்கிறது. எல்லாரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி பேசாமல் ஒரு மாநிலத்துக்குள் இருக்கக்கூடிய ஒரு மாநிலக் கட்சியை மட்டுமே வைத்துக்கொண்டு பேசுவது என்பது திட்டமிட்டு பெருமளவிலான இளைஞர்களை திசை திருப்புவதற்கு தான் பயன்படும்.
இது ஏன் நடக்கிறது என்றால், மாநிலத் தேர்தலில், தான் ஜெயிக்க வேண்டும், அப்படியென்றால் மாநில அளவிலான எதிரியை காட்டிவிட்டால் தனக்கு போதும், இந்திய அளவிலே நாம் யார்?, எதிரி யார்?, தமிழர்களுக்கு அடிப்படை பிரச்சனை என்பதை எல்லாம் சொல்லி விளக்கி ஓட்டு வாங்குவதை விட பக்கத்து வீட்டில் இருக்கிறவன்தான் எதிரி என்று சொல்லிட்டு அவனிடம் சண்டையை மூட்டிவிட்டு, தான் ஓட்டு வாங்குவது மிகவும் எளிமையானது என்பதால்தான் இது நடக்கிறது.
கடைசியாக எந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்? ஈழப்படுகொலை என்பது சிங்கள பேரினவாதம் செய்தது என்பதை விட தெலுங்கர்கள் செய்தது என்று முடித்து விட்டார்கள். எவ்வளவு பெரிய ஒரு அரசியல் விவாதத்தை மிகவும் எளிமையாக, கொச்சையாக அந்த இளைஞர்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்ததனால், அவனுக்கு அதனுடைய மொத்த பிரச்சனையும் புரியாமல் போய்விட்டது.
”இந்தியாவிற்குள்ளாக நமக்கு இருக்கக்கூடிய முதன்மையான முரண்பாடு எது? இந்தியா என்கின்ற கட்டமைப்பு மாநிலங்களை ஒடுக்குகிறது, மொழிவழி மாநிலங்களை ஒடுக்குகிறது, இந்த மொழிவழி மாநிலத்திற்கும், ஒன்றிய அரசிற்குமான முரண்பாடே முதன்மையான முரண்பாடாக இருக்கிறது. மக்களிடத்தில் என்ன முரண்பாடு இருக்கிறது? இந்து மதத்திற்குள் சாதியாக எல்லோரும் பிரிக்கப்பட்டிருக்கிறோம், சாதியாக ஒடுக்கப்பட்டிருக்கிறோம். இது ஒரு முக்கியமான முரண்பாடாக முதன்மை முரண்பாடாக இருக்கிறது”.
இந்த இரண்டு முரண்பாடு என்பதுதான் அனைத்து தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய தேசிய இனங்கள் அனைத்துமே எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தியா முழுவதும் இதுதான் பிரச்சனை. சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவது, மொழிவழி ரீதியாக உரிமை மறுக்கப்படுவது ஆகிய இரண்டு தான் பிரச்சனை. ஆனால் இவர் (சீமான்) என்ன முன்வைக்கிறார் என்றால், ஒரு மொழிவழி மாநிலத்தை இன்னொரு மொழிவழி மாநிலம் ஆக்கிரமிக்கிறது, ஒரு மொழி பேசுகின்ற மக்களை இன்னொரு ஒடுக்கப்படுகின்ற மொழியை பேசுகின்ற மக்கள் ஒடுக்குகிறார்கள், அடக்குகிறார்கள், பிரிக்கிறார்கள் என்று பேசுகிறார்.
இப்படி கட்டமைத்து விட்டால், நாம் இன்னொரு மொழிவழி தேசிய இனத்துடன் தான் சண்டை போட்டுக் கொண்டு இருப்போமே ஒழிய, நம் இரண்டு பேரையும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒன்றிய அரசை நோக்கி கேள்வியே வராமல் போய்விடும் எளிமையான விசியமாக மாறிவிடும்.
நூறு வருடத்திற்கு முன்பு, இந்தியா உருவானதிலிருந்து எடுத்து பார்த்தோம் என்றால்; இந்த ’சாதியும், பார்ப்பனியமும் தான் பிரதான முரண்பாடு என்று சொன்னவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும்’. இந்த இரண்டு பேர்தான் இந்தியாவினுடைய மக்கள் வளம் இல்லாமல், உரிமை இல்லாமல் வாழ்வதற்கு இதுதான் அடிப்படை பிரச்சனை என்று பேசினார்கள்.
இங்கே காங்கிரஸ் கட்சி என்ன பேசியது என்றால், வெள்ளையர்கள் தான் அனைத்திற்கும் காரணம் என்று பேசியது. வெள்ளையர்களை முன்வைத்து வெள்ளையர்களுடைய ஆதிக்கம் தான் இதனுடைய முதன்மை பிரதானமான காரணமாக இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் ஒடுக்கப்படுகின்ற ஏழைகளின் சார்பிலிருந்து சொல்லவில்லை. வெள்ளையர்களினால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் முதலாளிகளின் பார்வையிலிருந்து காங்கிரஸ் கட்சி பேசியது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களும், பெரியாரும், இந்த பார்ப்பன இந்துத்துவ சாதிய முறையில் ஒடுக்கப்பட்ட பிரச்சனைதான் முதல் பிரச்சனை, அந்த பிரச்சனையை தீர்த்து விட்டு மற்ற பிரச்சனையை பார்ப்போம் என்று பேசினார்கள். ஏனென்றால் இதுதான் 2000 வருடமாக இருக்கக்கூடிய பிரச்சனை. இதில்தான் நாம் ஒடுக்கப்படுகின்றோம், இந்த பிரச்சனையை தீர்த்து விட்டுதான் அடுத்த பிரச்சனையை பார்ப்பதற்கான அடித்தளமே உருவாகும் என்று சொன்னார்கள்.
காங்கிரஸ் என்ன சொல்லியது என்றால், இந்திய முதலாளிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது, எல்லாவற்றையும் வெள்ளைக்கார முதலாளிகள் எடுத்துவிட்டார்கள், ஆகவே வெள்ளைக்கார முதலாளிகளை விரட்டிவிட்டு இந்திய முதலாளிகள் கையில் அதிகாரத்தை கொடுத்து விடுங்கள் என்பது காங்கிரஸ் கட்சியினுடைய வாதமாக இருந்தது. இந்த இரண்டு போக்குகள் தான் அன்று இருந்தன.
இதற்குப் பிறகான இன்னொன்று எதுவென்றால், இந்துத்துவவாதிகள் ஒரு போக்கினை வைக்கிறார்கள். அது என்னவென்றால், இங்கே இருக்கும் எல்லாவற்றிற்கும் காரணம் வெள்ளைக்காரனோ, சாதியோ, பார்ப்பனியமோ அல்ல. எல்லாவற்றிகும் காரணம் முசுலிம்கள்தான் என்று முன்வைத்தார்கள். அவர்கள் பிரதான எதிரியாக முசுலிம்களை முன்வைத்தார்கள். முசுலிம்களிடத்திலே இவர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்துவிட்டதாக நினைத்த காரணத்தினால், முசுலிம்கள் தான் முதன்மையான காரணம் என்று பிரச்சாரத்தை முன்வைத்தார்கள். ஆக இந்துத்துவவாதிகளுக்கு முசுலிம்கள், கிருத்துவர்கள் முதன்மை எதிரிகளாக இருந்தார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு வெள்ளை முதலாளிகள் எதிரிகளாக இருந்தார்கள். இங்கே அண்ணல் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் சாதிய ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய பார்ப்பனியம் எதிரியாக இருந்தது. இப்படித்தான் எதிரிகளாக கட்டமைத்தார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி எதைச் சொன்னது என்றால், இங்கே இருக்கக்கூடிய பிரபுத்துவம் அல்லது பண்ணையார்த்தனம் மற்றும் முதலாளிய சிந்தனைப் போக்கு, ஏகாதிபத்திய வெள்ளையர்களுடைய சுரண்டல் போக்கு ஆகியவற்றை எதிரியாக இருக்கிறது என்றது. இந்திய முதலாளிக் கூட்டம், முதலாளிகளுக்கு துணை செய்யக்கூடிய முதலாளிகள் கூட்டம், வெள்ளையர் முதலாளிகள் கூட்டம், இவர்களால் சுரண்டப்படுகின்ற ஏழை எளிய மக்கள் கூட்டம் என்று கம்யூனிஸ்டுகள் சாதியை பிரதானமாக எடுக்கவில்லை, இதைத்தான் பிரதானமாக எடுத்தார்கள்.
ஆனால் ”தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் என்ன சொன்னார்கள் என்றால், இங்கே பார்ப்பனியம் இவர்களை சுரண்டுகிறது, ஒடுக்குகிறது, தொழிலாளிகளை ஒன்று சேர முடியாமல் தடுக்கிறது, தொழிலாளி ஒன்று சேர்ந்தால் தானே முதலாளிகளை எதிர்ப்பதற்கு வலிமை கிடைக்கும், ஆகவே தொழிலாளிகளை ஒன்றுபட விடாமல் இருக்கக்கூடிய சாதியை முதலில் ஒழித்துக் கட்டுங்கள், அதற்கு அடுத்துதான் நீங்கள் அடுத்த கட்டமான ஒரு வளர்ச்சியை நோக்கி, அரசியல் வளர்ச்சியை நோக்கி நகர முடியும் என்று சொன்னார்கள்”.
இந்த வளர்ச்சிப் போக்கை எல்லாம் விட்டுவிட்டு இந்துத்துவவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், இங்கு முசுலிம்கள் தான் பிரச்சனை, முசுலிம்களிடம் இருந்து அதிகாரத்தை பார்ப்பனர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று சொன்னது. இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்-சும் இந்த கொள்கையை முன்வைக்கிறார்கள்.
இதற்கு நடுவிலே மாபொசி வருகிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், நாம் பாரதத்திற்குள் இருக்க வேண்டும், அதை காங்கிரசு கட்சி போன்ற பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருப்பதை பற்றி எனக்கு பிரச்சனை இல்லை, கவலை இல்லை, ஆனால் இங்கே மொழி அடிப்படையில் தான் மாநிலங்களை பிரிக்க வேண்டும். இந்த மொழி அடிப்படையில் பிரிக்கக்கூடிய இடத்திலே பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருப்பது அல்லது மறுப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை என்கின்ற நிலைப்பாடு எடுக்கிறார். அவர் சாதி பிரச்சனையை கையிலெடுக்கவில்லை. இங்கே ஆந்திரக்காரனா, தமிழ்நாட்டுக்காரனா என்பதுதான் பிரச்சனை என்று முன்வைக்கின்றார்.
ஆந்திர தெலுங்கர்களைப் பற்றியான தனியான மதிப்பீடு வைக்கிறார். அது தமிழ்நாட்டுக்குள்ளே இருக்கக்கூடிய பிறமொழியாளர்கள் அல்லது இருமொழி பேசக்கூடியவர்கள் என தனியாக பிரித்து வைக்கிறார். அவருக்கு என்ன பிரச்சனை என்றால், இங்கே இருக்கக்கூடிய சென்னை மாகாணத்திற்குள்ளே, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சென்னைக்குள்ளே, நீதிக்கட்சிக்குள், காங்கிரசிற்குள் நடந்த இந்த ஆந்திரா தமிழ்நாடு சண்டையை பிரதானமாக முன்வைத்து அவர் ஒரு கோட்பாடு(Theory) உருவாக்குகிறார். அவருக்கு இந்தியா தேவை, இந்தி தேவை, சமஸ்கிருதத்தை பற்றி பிரச்சனை இல்லை. இந்து மதம் வேண்டும் என சங்கராச்சாரியாரோடு சேர்ந்து அவர் கூட்டத்திலே மேடை ஏறி பேசுகிறார்.
நான் ”இந்து மதத்தோடு சேரும் பொழுது 30/40 கோடி இந்துக்கள் எனக்கு நண்பர்களாக, சகோதரர்களாக மாறுகிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கிறார். அதற்கு முசுலிம் மதத்தில் சேர்ந்தால் 100 கோடி முசுலிம்கள் உங்களுக்கு நண்பராக வருவார்களே என யாரும் திரும்பி கேட்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு அரசியலைத்தான் மாபொசி முன்வைக்கிறார்”. அவர் என்ன பேசுகிறார் என்றால், இங்கே முசுலிம்கள் தமிழ் என்கின்ற அடையாளத்தை கடந்து நிற்கிறார்கள் மற்றும் கிருத்துவர்கள் மதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி நிற்கிறார்கள், பிறமொழியாளர்களை நம்ப முடியாது, அவர்களுடைய நலன் சார்ந்தே இயங்குகிறார்கள், இட ஒதுக்கீடு என்று பேசுகின்ற இந்த கம்யூனல் GO – வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தினால் இங்கே சாதிகளாக எல்லாரும் பிரிந்து போய்விட்டோம், பார்ப்பனர்களை அரசியல் ஆதிக்கத்திலிருந்து நீக்குவது தவறு அல்லது அதை நோக்கி சண்டை போடுவது தவறு என்பதையெல்லாம் மாபொசி பேசுகிறார். அடுத்தது இட ஒதுக்கீடு என்பது தேவையற்ற ஒன்று என்று அவர் பேசுகின்றார்.
இந்தியாவிற்குள் இருக்க வேண்டும், இந்தியாவிற்குள் தான் எல்லாம் பெற வேண்டும் என்று பாரதத்தோடு சேர்ந்து நிற்க வேண்டும் என்று அவர் பேசுகிறார். இந்தி தேவை என்று பேசுகிறார். அவர் சைவத்தினுடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, சைவத்தின் வழியாக ஒரு தமிழ் தேசியத்தை படைக்க வேண்டும் என்று முன் வைக்கிறார். கடைசியில் என்ன ஆனது என்றால் இந்தியாவிலே யாரெல்லாம் சாதி ஆதிக்கத்தின் காரணமாக பலன் அடைந்தார்கள் என்றால், பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும்தான் பலனை அடைந்தார்கள்.
விஜயநகர் பேரரசு வந்தபொழுது அதிலே ரெட்டியார்கள் சேர்ந்தார்கள், தெலுங்கர்களாக இருக்கக்கூடிய அந்த வெள்ளாள சமூகமும் சேர்ந்து கொள்கிறது. இந்த மூன்று ஆதிக்க கட்டமைப்பு என்கின்ற புள்ளியிலே, இந்த மூன்றையும் நிராகரித்து ஒரு சமத்துவத்தை முன்வைப்பது என்பதே தமிழ் தேசமாக இருக்க முடியும் என்பதை தமிழரசன் பேசுகிறார். தமிழ் தேசியத்துக்கான தெளிவான ஒரு வரையறையை முதன்முதலாக வரையறுத்துக் கொடுத்தவர் தமிழரசன். தமிழரசன் தெளிவாக சொல்லுகிறார்.
”திராவிட அரசியல் என்பது பார்ப்பனர்களை எதிரியாக முன்வைக்கிறது, பார்ப்பனர்களை விட பார்ப்பனியத்தை எதிரியாக முன்வைக்கிறது, மார்க்சியர்கள் எதை எதிரிகளாக முன்வைக்கிறார்களோ அந்த முதலாளித்துவத்தை எதிரியாக முன்வைக்கிறது, பண்ணையார்த்தனம், நிலப்பிரபுத்துவத்தை எதிரியாக முன்வைக்கிறது”, திராவிடம், மார்க்சியம் இரண்டுமே இறுதியில் என்ன சொல்லுகிறது என்றால், ஏழை எளிய மக்கள் உரிமை பெற வேண்டும் என்று சொல்லுகிறது. அதுதானே விடுதலையாக இருக்க முடியும்.
ஆனால் அது இல்லாமல் இங்கே இருக்கக்கூடிய, ஆதிக்கத்திற்கு சமரசப் போக்குகளை வைக்கக்கூடிய மாபொசியினுடைய தத்துவம்தான் இன்றைக்கு ஐயா. மணியரசன் மற்றும் நாம் தமிழரால் தமிழ் தேசிய கொள்கையாக முன்னிறுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் எல்லா பிரச்சனையையும் அவர்கள் பேசுகிறார்கள். மாபொசி என்ன சொல்றார் என்றால், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதால், எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கொடுப்பதால் சாதி வளர்கிறது, சாதி சங்கங்கள் வளர்கிறது, சாதி வலிமையாகிறது, அதனால் ஒற்றுமை வரவில்லை என்று பேசுகிறார். இன்றைக்கு இட ஒதுக்கீடு கேட்டதே சாதி சங்கங்கள் வந்ததற்கு அடிப்படை காரணம் என்கிறார். இட ஒதுக்கீடுக்கு எதிராக சித்தாந்தம் கொண்டவராக, இசுலாமியர்களையும், கிருத்துவர்களையும் வேறு பண்பாடாக பார்க்கும் எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார். இது இந்துத்துவவாதிகளுக்கு ஏற்புடையது.
பிஜேபியும், சீமானும் ஒரே அணியாக இருக்கிறார்கள் என்று எப்படி நாம் சொல்றோம் என்றால், பிஜேபிக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை, இந்த போலி தமிழ் தேசியவாதிக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை, அவர்களுக்கும் முசுலிம்களும் கிருத்துவர்களும் வேறு பண்பாட்டைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள், இந்த இந்துத்துவவாதிகளுக்கு பார்ப்பனியம் என்பது முதன்மை எதிரி அல்ல, இவர்களுக்கும் பார்ப்பனியம் முதன்மை எதிரி அல்ல, உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை இந்துத்துவம் சொல்கிறது.
இந்த தமிழ் தேசியவாதிகளுக்கு அதாவது மாபொசி வகைப்பட்ட தமிழ் தேசியவாதிகளுக்கும் பார்ப்பனியம் ஒரு பிரச்சனை அல்ல என்பதை வைத்தே ஒரே அணி என்று கொள்கிறோம். மேலும், பார்ப்பனர்களும் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களின் ஆதிக்கத்தில் இருப்பது என்பதில் தவறு இல்லை என்று மாபொசி வகைப்பட்ட சீமான்கள் சொல்லுகிறார்கள். ஆக இது இரண்டுமே ஒன்றுதான். நாம் இதை(நாதக) பிஜேபியுடைய B டீம் என்று சொல்லுவதை விட ஆர்எஸ்எஸ்-னுடைய B டீம் என்று சொல்லுவது பொருத்தமானதாக இருக்கும்.
இன்றைக்கு சீமான் பட்டியல் வெளியேற்றம் வேண்டும் என்று பேசுகிறார். இங்கே தெலுங்கு பேசக்கூடிய மக்களை அவர்களுக்கு இருக்கக்கூடிய இட ஒதுக்கீடு உரிமையை மறுக்க வேண்டும் என்று பேசுகிறார். முசுலிம்களை நீங்கள் கவனத்துடன் கையாள வேண்டும் என்று பேசுகிறார். இது எல்லாமே அவர் சொன்னதுதான். காஷ்மீரை பற்றியான அமரன் படத்துக்கெல்லாம் அவர் வந்து ஆதரவு தெரிவிப்பதற்கெல்லாம் பல காரணம் இருக்கிறது. ”இந்தியாவை பாரதம் என்று ஏற்றுக்கொண்டு அதை பாரத நாடு என்று சீமான் சொல்லுகிறார். ஆர்எஸ்எஸ்-னுடைய இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கொள்கைக்கும், சீமான் நிற்கிறார். ஆர்எஸ்எஸ் முன்மொழிகின்ற கிருத்துவ இசுலாமியர்கள் வேறு பண்பாட்டைச் சார்ந்தவர் என்று சொல்லுகின்ற மாபொசி வழியை ஏற்றுக்கொண்டு அந்த கொள்கை வழியிலே நிற்கிறார். அப்படியென்றால் ஆர்எஸ்எஸ் சொல்லுகின்ற இந்த படிநிலைகளை எல்லாம் தனது செயல் திட்டத்தில் வைத்திருக்கக்கூடிய அவர் எந்த வகையில் ஆர்எஸ்எஸ் பிஜேபிக்கு எதிரானவராக இருப்பார்?”.
சீமானுக்கு திமுக மீதே வெறுப்பு என்றால் திமுக அல்லாத வேறு எந்த முற்போக்கு அமைப்பையாவது அரவணைத்திருக்கிறார்? ஆனால் இந்துத்துவவாதிகளை அரவணைக்க முடிகிறது. அண்ணாமலையை பார்த்தால் கட்டித் தழுவிக் கொள்கிறார். பொன். ராதாகிருஷ்ணனை பார்த்தால் கும்பிடு போடுகிறார். இந்துத்துவவாதிகளிடத்தில் எல்லாம் அவருக்கு எந்த சிக்கலும் இருந்ததில்லை. ஆனால் இங்கே முற்போக்கு பேசக்கூடிய எவரோடும் அவரால் நட்பு பாராட்ட முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டியிருக்கிறது. திராவிடம் என்றால் தெலுங்கு அல்ல என்பதை அந்த இளைஞர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.
திராவிடம் என்பது ஆரியத்தினுடைய அதிகாரத்தை நீக்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட ஒரு கொள்கை பிரகடனம். ஒரு போராட்ட மரபு. திராவிடம்: சமஸ்கிருதம் வேண்டாம் என்று சொல்லுகிறது, இந்தி வேண்டாம் என்று சொல்லுகிறது, இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லுகிறது, பெண் விடுதலை வேண்டும் என்று சொல்லுகிறது, தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று சொல்லுகிறது, இதையெல்லாம் திமுக கண்டுபிடித்து சொல்லவில்லை. பெரியார்தான் சொன்னார்.
இதையெல்லாம் திராவிடம் சொல்லும் போது இவர்கள் பாரதம் வேண்டும், இந்தியா வேண்டும் என்று சொல்கிறார்கள். கம்யூனல் GO தேவையில்லை என்று சொல்லுகிறார்கள், இந்தி வேண்டும் என்று சொல்லுகிறார்கள், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். இந்த இரண்டு வகைப்பட்ட அரசியலைத்தான் நாம் இன்றைக்கு பார்க்கின்றோம். இதுதான் இவர்கள் சொல்லக்கூடிய தமிழ் தேசியம் என்பதை போலித் தமிழ்தேசியமாக நாம் பார்ப்பதனுடைய அடையாளம்.
நாம் தமிழரில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்காக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் உங்கள் தலைவரைத் தவிர வேறு யார் பேசுவதையும் கேட்பதில்லை, உங்களுக்கு அதற்கான காதுகள் முளைக்கவில்லை என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. எல்லாவற்றையும் போகிற போக்கில் ஒரு வெளியீட்டு அடிப்படையில் (Issue basis) பேசுகிறார்கள்.
கச்சத்தீவை திமுக விட்டுக்கொடுத்து விட்டது என்று பேசுகிறார்கள். கச்சத்தீவு பிரச்சனை வந்தபொழுது திமுக வலிமையாக எதிர்கொண்டிருக்கலாம், எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் அடுத்த கட்டம். அதனைப் பிறகு பேசலாம்.
இதைப் போன்ற ஒரு குற்றச்சாட்டு தந்தை பெரியாரின் காலத்திலே தமிழ்நாடு என்று மெட்ராஸ் மாகாணத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்ற போராட்டம் வந்தபொழுது காமராஜர் ஆட்சியை நோக்கி கேள்வி எழுப்பப்படுகிறது, நீங்கள் தான் பச்சைத் தமிழர் ஆயிற்றே, நீங்கள் ஏன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கூடாது, என்றெல்லாம் காமராஜரை நோக்கி பேசும் பொழுது பெரியார் அது குறித்து, ‘இங்கே காமராஜரிடம் மட்டுமே வைத்து இதை பேசுகிறீர்களே, இங்கே மாநிலத்தினுடைய எல்லையை உருவாக்குவதும், குறைப்பதும், கூட்டுவதும், இந்தியாவினுடைய நிலத்தை அதிகரிப்பதும் அல்லது குறைப்பதும் என அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் இருக்கிறது, ராஷ்டிரபதியிடம் இருக்கிறது, அவன் சட்டம் போட்டிருக்கிறான், இது காமராஜர் சொல்லி ஆகிற காரியமா, நீ உண்மையாகவே தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினால் ஒன்றிய அரசை நோக்கி நீ போராட்டம் நடத்த வேண்டும், இந்தியாவை எதிர்த்து நின்று போராட்டம் நடத்த வேண்டும், இந்தியாவிலிருந்து உனது உரிமையை பெறுவதற்காக போராட வேண்டும்’ என்று பேசுகிறார். இது தானே உண்மை.
இது குறித்து பெரியார் கட்டுரை எழுதுகிறார். அவர் வார்த்தையிலிருந்தே சொல்கிறேன். ‘தாய் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் இல்லையே என்று கொதிக்கும் இளைஞர்களே, தோழர்களே, புலவர்களே, பெருமக்களே, எழுத்தாளர்களே, பேச்சாளர்களே இதற்கெல்லாம் நாடு பிரிவினைத் தவிர வேறு வழி உண்டா என்ற கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள், நேர்மையாக விடை காணுங்கள், இதோ இந்திய சட்டம் சொல்லுகிறது, பாராளுமன்ற சட்டத்தினால் எந்த ராஜ்ஜியத்திலிருந்து ஒரு பிரதேசத்தை பிரித்தேனும், இரண்டோ அல்லது மேற்பட்ட ராஜ்ஜியங்களையோ இணைத்தேனும் அல்லது எந்த பிரதேசத்தையாவது ஒரு ராஜ்ஜியத்தின் பாகத்தோடு இணைத்தேனும் புதிய ராஜ்ஜியம் ஒன்றையும் அமைக்கலாம், எந்த ராஜ்ஜியத்தின் பரப்பையும் பெருக்கலாம், குறைக்கலாம், எல்லையை மாற்றலாம், பெயரை மாற்றலாம், இதையெல்லாம் ராஷ்டிரபதியின் சிபாரிசின் பெயரில் அன்றியும் வேறு எந்த வழியிலும் செய்ய இயலாது. ஆகவே பெயர் மாற்ற அதிகாரமும், சக்தியும் டெல்லி ஆட்சிக்கே உண்டு. அதிலும் இந்நாட்டு அரசாங்க சட்டசபைகள் கருத்து தெரிவித்தாலும் ராஷ்டிரபதியோ அல்லது பார்லிமென்ட் சபைகளோ அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற நியதி அரச அமைப்பில் இல்லை. இதற்காக தமிழ்நாட்டு அரசாங்கத்தோடு முட்டிக் கொள்வதை விட அநீதிக்கு காரணமான டெல்லி ஆட்சியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதுதானே அறிவுடைமை’ – இப்படி பேசுகிறார் பெரியார்.
பெரியாரை நோக்கி எல்லை போராட்டத்துக்கு வரவில்லை என்பதை ஆரம்பித்து தமிழ்நாடு பெயர் வைக்கவில்லை என்பது வரை இன்றைய போலி தமிழ் தேசியவாதிகள் கேள்வி கேட்கிறார்கள், கட்டுரை எழுதுறார்கள். பெரியார் இதற்கெல்லாம் அன்றே பதில் சொல்லி விட்டார். டெல்லியில் இருக்கிறவன் தானே அதற்கு காரணம் என்று சொல்லி, அவனை எதிர்த்து நீ போராடுவதற்கு தயாராக இருக்கிறாயா? என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கிறார். சுதந்திர தமிழ்நாடு என்ற புத்தகத்தில் அவர் இதை குறித்து விரிவாக பேசுகிறார். அவர் அடிப்படை பிரச்சனையைப் பற்றி ஆழமாக சொல்லி விடுகிறார்.
கச்சத்தீவை கொடுத்த பொழுது திமுக செயல்படவில்லை என்கிற விமர்சனம் திமுக மீது உண்டு, ஆனால் கச்சத்தீவை கொடுக்க வேண்டும் என்ற முடிவு யார் எடுத்தது? திமுக எடுத்ததா அல்லது டெல்லி எடுத்ததா? இதை பேசமாட்டார்கள், இந்த கேள்வி வைக்க மாட்டார்கள். ஈழப்போரின் பொழுது 2009 இனப்படுகொலையின் பொழுது திமுக உதவி செய்யவில்லை, திமுக திரளவில்லை, மக்களை திரட்டவில்லை என்ற குற்றச்சாட்டு திமுகவின் மீது நாமும் வைக்கின்றோம், ஆனால் ஈழ இனப்படுகொலை நடக்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்தது இந்திய அரசா, தமிழ்நாடு அரசா, முடிவை எடுத்தது யார்? அந்த கேள்வியை கேட்காமல் இருப்பதற்காகத்தான் இங்கே திராவிடத்தை எதிரியாக சீமான் தொடர்ச்சியாக கட்டமைத்துக் கொண்டே இருக்கிறார்.
’ஈழ இனப்படுகொலையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது இலங்கை அரசும், இந்திய அரசும் இதை வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள், எழுதிவிட்டார்கள். வட இந்தியாவிலிருந்து புத்தகம் வந்துவிட்டது. இந்தியாவில் மூன்று அதிகாரிகள், இலங்கையில் மூன்று அதிகாரிகள் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழுவை உருவாக்கி அதன் மூலமாக நாங்கள் போரை நடத்தினோம் என்று இந்தியாவிலும் சொல்லிவிட்டார்கள், இலங்கையிலும் சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன பிரச்சனை? அந்த மூன்று பேர் இங்கு பார்ப்பனர்கள், அங்கு சிங்களர்கள், பார்ப்பன அதிகாரம்தான் இந்தியாவில் கொள்கையை வகுக்கிறது’, இந்த கூட்டம் வகுத்த இந்த போரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் திமுக உதவி செய்யவில்லை அல்லது பங்களிக்கவில்லை அல்லது தமிழ்நாட்டில் திரண்ட போராட்டங்களை எல்லாம் ஒடுக்கியது என்கின்ற குற்றச்சாட்டு நமக்கும் இருக்கிறது. ஆனால் போரை நடத்தியவன் யார்? அதைப்பற்றி இன்று வரைக்கும் பேசவில்லை.
தமிழ் தேசியம் என்பது இந்தியாவினுடைய இந்த அதிகாரத்தை கேள்வி கேட்பது தானே ஒழிய, இங்கே இருக்கக்கூடிய மாநில சட்டசபையோடு மோதிக் கொண்டிருப்பது தமிழ் தேசியம் அல்ல. அது முதலமைச்சர் பதவிக்கான போட்டி மட்டும்தான். இந்த அடிப்படை பிரச்சனையைப் பற்றி பேசாமல், அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காணாமல், அடிப்படை பிரச்சனையைப் பற்றி இளைஞரிடத்தில் சொல்லாமல் மடை மாற்றுகிறார் சீமான். அடிப்படை பிரச்சனையைப் பற்றி பேசினால் சீமானால் கட்சி நடத்த முடியாது, வேறு ஒன்றுமே கிடையாது. டெல்லி அரசை நோக்கி கேள்வி எழுப்ப ஆரம்பித்தால் அவர் கட்சி நடத்த முடியாது. இந்தியாவிற்குள்ளாக அதுதான் இங்கு சட்டம், இந்தியாவிற்குள்ளாக நீங்கள் இந்திய அரசினுடைய கொள்கை திட்டங்களை கேள்வி எழுப்பினால், ஒடுக்கப்படுவீர்கள், அந்த ஒடுக்குமுறைக்கு தயாரா என்று அன்றைக்கு தந்தை பெரியார் கேட்டார். 1955-ல் அவர் இதைக் கேட்கிறார். மாநில அரசை கேட்கிறீர்களே, ஒன்றிய அரசுதான் அந்த கொள்கை திட்டத்தை வைத்திருக்கிறது. அந்த ஒன்றிய அரசை கேள்வி கேட்பதற்கு தயாரா என்று தந்தை பெரியார் அன்றைக்கே கேட்கிறார்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் பேசாமல், இங்கே இருக்கக்கூடிய அவர்களின் ஏவலாளர்களாக இருக்கக் கூடியவர்களிடத்திலே மாநில அரசை நோக்கி கேள்வி கேட்பது மட்டும்தான் இங்கே அரசியலாக தமிழ் தேசியமாக முன்வைக்கப்படுகிறது. அதனால்தான் சீமான் அவர்களுடைய கட்சிக் கூட்டங்களில் பார்த்தால், ஒன்றிய அரசைப் பற்றிய எந்த பேச்சும் இருக்காது. அது தரும் பிரச்சனைகள் பற்றி எதுவுமே பேசமாட்டார்.
யார் கொள்கையை வகுக்கிறார்கள் என்று நாம் தமிழர் தம்பிகள் இடத்தில் போய் கேட்டீர்கள் என்றால், ஈழப்படுகொலை செய்ததற்கும், ராணுவத்தை அனுப்பியதற்கும், உளவு பார்த்து சொல்லியதற்கும், புலிகளை தடை செய்ததற்கும்,புலிகள் மீதான ஒடுக்குமுறை கொண்டு வருவதற்கும், புலிகளினுடைய கப்பலை எல்லாம் கண்டறிந்து அந்த கப்பலை எல்லாம் அழித்தொழிப்பதற்குமான வேலையை செய்ததற்கும் யார் காரணம் என்று கேட்டீர்கள் என்றால், தெலுங்கர்கள் செய்தார்கள், திராவிடம் செய்தது என்பார்கள். திராவிடமா வந்து ராணுவத்தை கட்டுப்படுத்தி இருக்கிறது, தெலுங்கர்களா ராணுவத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தெலுங்கர்களா கப்பல் படைக்கு தளபதிகளாக இருக்கிறார்கள்?
இந்த 15 ஆண்டுகளாக ஈழப் பிரச்சனைக்காக எந்த போராட்டத்தையும் அவர் (சீமான்) நடத்தியதில்லை. ஏனென்றால், அவருக்கு நன்றாகத் தெரியும், ஈழத்திற்கான போராட்டத்தை நடத்த ஆரம்பித்தால் இந்த கேள்வி தானாக மேலே வரும், இந்த கேள்வி தானாக மேலே வந்தால் இந்திய அரசை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் அவருக்கு கிடையாது. ’வைகோ அவர்கள் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதில் நான் இந்திய அரசை குற்றம் சாட்டுகிறேன், சிங்கள அரசிற்கு இத்தனை ஆயுதங்கள் ஏன் கொடுத்தீர்கள், என்று அரசு ஆவணங்களை எடுத்து ஒரு புத்தகம் வெளியிடுகிறார். அதற்கு 2008-ல் அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டு அதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வந்தது’. ஒரு புத்தகம் எழுதியதே அதற்கு காரணம். இந்த இடத்தில் சீமான் எப்படி இந்திய அரசை எதிர்த்து பேசுவார்?
தமிழ் தேசியம் என்பது, இந்தியா எல்லா அதிகாரத்தையும் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துக் கொண்டு விட்டது, அந்த அதிகாரத்தை போராடி பெற வேண்டும் என்று சொல்லுவது. இந்தியாவிடம் போராடி இந்த உரிமைகளை பெற்றுக் கொள்வது என்பது சிரமமான காரியம் என்கின்ற காரணத்தினால் திமுகவிடம் போராடி முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ் தேசியமாக சீமான் முன்னிறுத்துகிறாரே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அதைவிட இது மிகவும் சுலபம். ஏனென்றால் இந்திய அரசை திட்டினால் வழக்கு வரும், சிறை தண்டனை வரும், திமுகவை திட்டினால் எந்த பிரச்சனையும் கிடையாது, பிஜேபி ஆதரவு கிடைக்கும். இவ்வளவுதான் அதனுடைய விசியம்.
ஆனால் நாம் திமுகவின் மீதான விமர்சனத்தை வைக்கிறோம். அதற்காக நாம் இவரைப் போல செருப்பைத் தூக்கி காட்டுவதோ அல்லது கலைஞரை இழிவுபடுத்துவதோ, திமுகவை இழிவுபடுத்துவோ இல்லை. திமுக என்பது மாநில உரிமை என்கின்ற இடத்திலிருந்து நழுவி இந்திய ஒன்றிய அரசியலுக்குள், அமைச்சரவைக்குள், அவர்கள் அதிகாரத்தில் பங்கெடுத்து விட்டார்கள். கிட்டத்தட்ட ’1999 காலகட்டத்திலிருந்து 2014 காலகட்டம் வரை 14 ஆண்டுகள் அவர்கள் டெல்லி அரசாங்கத்தில் கூட்டணி ஆட்சியிலே பங்கு பெற்று ஒரு இந்திய தேசிய கட்சியைப் போலவே சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்திய தேசிய அரசாங்கத்திற்குள் பங்கு பெற்றுவிட்டார்கள். இந்திய தேசிய அரசியலில் அமைச்சர்களாக மாறிவிட்டார்கள். அவர்களால் அவர்கள் குடும்பத்திற்கும், கட்சிக்கும் வேண்டுமான நலன் ஏற்பட்டதே ஒழிய தமிழினத்திற்கு நலன் ஏற்படவில்லை’ என்பதைத் தான் நாங்கள் பேசுகிறோம்.
ஒரு இந்திய கட்சியைப் போல திமுக சிந்திக்க ஆரம்பித்துவிட்ட கட்சி, இந்திய தேசியத்தை போல சிந்திக்க ஆரம்பித்துவிட்ட கட்சி, எப்படி அண்ணாவினுடைய கட்சியாக இருக்க முடியும், அது எப்படி தந்தை பெரியாரின் கட்சியாக இருக்க முடியும், அது எப்படி தமிழர் நலன்களை முன்னெடுக்கக்கூடிய கட்சியாக இருக்க முடியும். அது தமிழ்நாட்டினுடைய முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சி தமிழ்நாட்டு முதலாளிகளாக, தமிழ்நாட்டிலே தொழில் செய்பவர்கள் மட்டுமல்ல திமுகவினுடைய மாநில செயலாளர்கள், அமைச்சர்கள் பலபேருமே முதலாளிகளாக, தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். இந்த முதலாளிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் எந்த பங்கமும் வரக்கூடாத வகையில்தான் திமுக கொள்கை முடிவெடுக்கிறது. தமிழ்நாட்டு முதலாளிகளுக்காக பேரம் பேசுகிறது.
இந்திய அளவில் இருக்கக்கூடிய முதலாளிகளுக்காக பேரம் பேசுகின்ற காங்கிரசோடும், பாஜகவோடும் கைகோர்ப்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதில் கொள்கை எல்லாம் அவர்களுக்கு கிடையாது. நாங்கள் திராவிட கொள்கை பேசுகிறோம், அவர்கள் இந்திய கொள்கையை பேசுகிறார்கள். தமிழ்நாட்டு முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வார்கள். சிப்கார்ட் வேண்டுமா, நாங்கள் எடுத்து தருகிறோம், உங்களுக்கு நிலம் வேண்டுமா, அதற்கு சட்டம் கொண்டு வருகிறோம், அந்த நிலத்தை எடுப்பதற்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ, நாங்கள் செய்து தருகிறோம், உங்க கம்பெனியில் தொழிலாளர்களுக்கு ஏதாவது சிக்கல் வருகிறதா, தொழிலாளிகளுடைய போராட்டங்களைக் கலைத்து விடுகின்றோம், தொழிலாளர் தலைவர்களை சிறைப்படுத்தி விடுகிறோம் என்று முதலாளிகளுக்கு இயங்கும் கட்சியாகவே திமுக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரும் எந்த முதலாளிக்கும், எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்க்கக்கூடிய தமிழ்நாட்டினுடைய முதலாளிகளுடைய பிரதிகளாகத்தான் திமுக இருக்கிறது, அதிமுக இருந்தது. இந்த இரண்டு கட்சிகளும் இந்த முதலாளிகளுடைய பிரதிநிதிகளாகவே இருக்கின்றன. இது எப்படி சாமானிய பாட்டாளிகளினுடைய, தமிழ்நாட்டினுடைய ஏழை எளிய மக்களுடைய பிரதிகளாக இருக்க முடியும்? அந்த அடிப்படையில் தான் நாங்கள் திமுகவிலும், அதிமுகவிலும் வேறுபட்டு நிற்கிறோம். இதுதான் நாங்கள் திமுகவின் மீது வைக்கக்கூடிய விமர்சனம்.
இது விமர்சனமா அல்லது செருப்பை தூக்கி காட்டுவது விமர்சனமா? எது விமர்சனம்? ஒரு கொள்கை ரீதியாக விமர்சனங்களை பேசத் தெரியாத கட்சி நாம் தமிழர் கட்சி. தனிமனித தாக்குதலில் மட்டும்தான் ஈடுபடுவார்கள். இன்றைக்கு இந்த கூட்டத்தில் நின்று நாம் தமிழரை விமர்சிக்கக்கூடிய திருமுருகனை நோக்கியோ அல்லது குழந்தை அரசனை நோக்கியோ அல்லது தோழர் கே.எம். ஷெரிப்பை நோக்கியோ விமர்சனம் வைத்தால் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஆனால் அவர் என்ன செய்வார்? இவர் தெலுங்கர், அவர் கன்னடர் என்று ஒரு கதை கட்டுவார். அதை தவிர அவருக்கு எந்த பதிலுமே இருக்காது. இங்கு இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால், தமிழ்நாட்டு முதலாளிகளுக்கு திமுக பிரதிநிதியாக இருப்பதா அல்லது நாம் தமிழர் பிரதிநிதியாக இருப்பதா என்பது தானே தவிர வேற ஒரு சண்டை ஒன்றும் கிடையாது. இதில் இவர்கள் தமிழ் தேசியம். அவர்கள் திராவிடம். இது திராவிடமும் கிடையாது. அது தமிழ் தேசியமும் கிடையாது. இவர்கள் முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தக்கூடிய ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும், செய்யும் கட்சிகளாக மாறி விட்டது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய திராவிடம், தமிழ் தேசியமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வரக்கூடிய கட்சிகள் எல்லாம் இந்த இடத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ’தமிழ் தேசியம் என்பது தமிழர்களுக்கும், இந்திய அரசுக்குமான முதன்மை முரண்பாடுகளான இந்தியம் என்பதை நோக்கியான கேள்வியும், இந்து மதம் என்கின்ற அந்த கட்டமைப்பை நோக்கிய கேள்வியும், சாதி என்கின்ற கட்டமைப்பை நோக்கிய கேள்வியும், இந்தியாவினுடைய முதலாளிகளாக இருக்கக்கூடிய பனியாக்கள் என்ற மார்வாடிகளை நோக்கிய கேள்வியும் தான் தமிழ் தேசியமாக இருக்க முடியுமே தவிர வேற எதுவும் இருக்க முடியாது’.
இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்காதவன், இந்திய ஆதிக்கத்தை கேள்வி கேட்காதவன் மார்வாடிகளின் கொள்ளையை கேள்வி கேட்காதவன், இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கையை – பாதுகாப்புக் கொள்கையை கேள்வி கேட்காதவன், இந்தியாவினுடைய இந்த முதலாளித்துவ சிந்தனைகளை கேள்வி கேட்காதவன் ஒரு காலத்திலும் தமிழ் தேசியனாக இருக்க முடியாது.
இதை போலத்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்த பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்த இந்துத்துவ ஆதிக்கத்தையும், இந்த ஆதிக்கங்களை எல்லாம் தூக்கி சுமக்கக்கூடிய இந்திய அரசையும் கேள்வி கேட்காத கட்சி திராவிட கட்சியாக இருக்க முடியாது. திராவிடம் என்கிற வார்த்தையை எடுத்துக்கொண்டு ஐயா. மணியரசன், அது தமிழ் வார்த்தை கிடையாது அதை எப்படி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்கிறார். இதைக் கேட்கிறவர்களுக்கு, இது உண்மை போலத் தோன்றும். திராவிடர் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை இல்லையே, நாம் எப்படி வைத்துக் கொள்வது, தமிழர்கள் ஆயிற்றே என்கிற எண்ணம் வரும். கம்யூனிசம் என்ற வார்த்தை கூடத்தான் தமிழ் வார்த்தை கிடையாது. அதை வைத்துக் கொள்வது இல்லையா? சோசலிஸ்ட் கூடத்தான் தமிழ் வார்த்தை கிடையாது. அதையும் வைத்துக் கொள்வது இல்லையா? என்ன வார்த்தை என்பதா முக்கியம், அந்த வார்த்தை என்ன, அது என்ன மொழி என்பதா முக்கியம்? அது என்ன அர்த்தத்தை சொல்லுகிறது, எந்த கொள்கைக்காக நிற்கிறது என்பதைத் தானே பார்ப்போம்.
இந்த வார்த்தையினுடைய வேர்ச்சொல் ஆராய்ச்சிக்காக போய் கொண்டிருப்பது என் வேலை இல்லை. அது சமஸ்கிருதமா அல்லது பாலி மொழியா அல்லது மங்கோலிய மொழியா என்பது பார்ப்பது அல்ல என் வேலை. மொழித் தூய்மையை மட்டுமே பார்த்து, பிராமின் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாக இருக்கிறது, அதனால் அந்த பிராமின் என்ற வார்த்தையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டு அதற்கு பதிலாக அந்தணர் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
திராவிடம் என்ற வார்த்தையை எல்லிஸ் பேசுகின்ற அர்த்தம் வேறு, அதற்கு பின்பு கால்டுவெல் பேசும்பொழுது அதனுடைய அர்த்தம் வேறு, எல்லிஸ் பேசும்பொழுது அது 1800-ம் வருடத்தின் ஆரம்ப கட்டம். இந்தியாவில் வெள்ளைக்காரன் வந்த உடனே இங்கு சட்ட திட்டங்கள் எல்லாம் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்கள். இந்த சட்ட திட்டங்களுக்கான நூல் எல்லாம் என்ன இருக்கிறது, அதையெல்லாம் எடுத்து வைத்து இந்த மக்களை ஆட்சி செய்தால்தான் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். அவை எல்லாம் வடநாட்டிலே சமஸ்கிருதம் அடிப்படையிலாக பிராமண அல்லது பார்ப்பன அடிப்படையிலான கொள்கை கோட்பாடாக கிடைக்கிறது. அதையெல்லாம் எடுக்கிறார்கள். அந்த சமயத்தில் ’எல்லிஸ் வேறொன்றை கொண்டு வருகிறார். அது தென்புலத்தில் இருக்கக்கூடிய கோட்பாடுகள் என்று தனியாக இருக்கிறது, அது வட இந்திய கோட்பாடுகளைப் போல, சமஸ்கிருத கோட்பாடுகளைப் போல இல்லை என்பதை கண்டறிகிறார்’. இங்கே இருக்கக்கூடிய சட்ட நூல்கள் வேறாக இருக்கிறது என்று சொல்லுகிறார். அதற்கு அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார்.
அந்த இடத்தில் திராவிடம் என்கின்ற வார்த்தை சட்டத்தின் எல்லையை சொல்லுகிறது, ஒரு சட்டம் எவ்வளவு தூரம் செல்லுபடி ஆகிறது என்கிற இடத்தைச் சொல்லுவதற்கு, நிலப்பரப்பைச் சொல்லுவதற்கு திராவிடம் என்கின்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இன்று இந்தியம் என்று எடுத்துக் கொண்டால், இந்தியா என்பது ஒரு சட்டச்சொல். இந்தியாவிற்கு ஒரு சட்டம் இருக்கிறது, அந்த சட்டம் எதுவரைக்கும் செல்லுபடியாகும், இந்தியாவுக்கு எல்லை எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு வரைக்கும் செல்லுபடியாகும். இன்றைக்கு நாடு, தேசம் என்பதை சட்டத்தினுடைய எல்லையாகவும் பார்க்க முடியும் அல்லது எவ்வளவு எல்லை தூரம் சட்டம் செல்லுபடி ஆகுமோ அது எனது தேசம், நாடு என்பதாகும். அந்த அடிப்படையில் அன்றைக்கு திராவிடம் என்கின்ற வார்த்தையை அதிலிருந்து பயன்படுத்துகிறார் எல்லீஸ்.
அதிலிருந்து மாற்றாக மொழிக்கூட்டத்திற்காக பயன்படுத்துகின்றார் கால்டுவெல். இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது திராவிடம் என்பதை இங்கே தென்னிந்தியத்திலே இருக்கக்கூடிய மொழிக்கூட்டத்தை குறிப்பதற்காக சொல்கிறார். அதை பர்னல் என்ற அதிகாரி எதிர்த்து ஒரு கேள்வி கேட்கின்றார். அவர் சமஸ்கிருதத்தில் தேர்ந்தவர். அவர் என்ன கேள்வி கேட்கிறார் என்றால், சமஸ்கிருதங்களிலோ அல்லது வட இந்திய பார்ப்பன இலக்கியங்களில் அப்படிப்பட்ட சொல் குறிப்பிடப்படவில்லை. அது வேறாக குறிப்பிடப்படுகிறது. திராவிடம் என்று குறிப்பிடவில்லை ஒரு கேள்வியை முன்வைக்கின்றார். அதற்கு பதிலும் இவர் சொல்லுகின்றார். அதை எடுத்துப் பேசினால் பெரிதாகப் போகும், பிறிதொரு சமயத்தில் பேசலாம்.
திராவிடம் என்ற வார்த்தையை வெள்ளையர்கள், இந்த நிலப்பரப்பிற்குள் இருந்த வேறுபாடுகளை ஒரு பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்பதற்காக வைத்தார்கள். ஆனால் மக்கள் இயக்கங்கள் எதற்காக எடுத்துக் கொண்டார்கள் எனில் அதுதான் திராவிட வார்த்தையின் பின்புலம். அதைப் பேச வேண்டும்.
நம் வரலாற்றில் நாம் மத அடிப்படையில் அல்லது சாதி அடிப்படையில் தான் ஒரு இயக்கமாக இருக்க முடிந்திருக்கிறது. ஒரு சாதிக்கூட்டமாக இருப்பார்கள் அல்லது மதக்கூட்டமாக இருப்பார்கள், சைவர்களாக இருப்பார்கள், வைணவர்களாக இருப்பார்கள், சமணர்களாக இருப்பார்கள், பௌத்தர்களாக இருப்பார்கள் அல்லது 98 வலங்கை சாதிகள், 98 இடங்கை சாதிகள் என்று சாதி சாதிகளாக இருப்பார்கள். ஆனால் சாதி கடந்து, மதம் கடந்து, கடவுள் நம்பிக்கை கடந்து ஒரு இயக்கமாக, சனநாயக இயக்கமாக 19 ஆம் நூற்றாண்டினுடைய கடைசியில் தான் உருவாகிறது. அதற்கு முன்பு உருவாகவில்லை. அன்றிலிருந்து வளர்ந்தவையே இன்று பார்க்கிறோமே, இன்று இருக்கும் அரசியல் கட்சி, இயக்கங்கள் வரை எல்லாம். இவை எவ்வளவு கால வரலாறு கொண்டது?
சங்கர மடத்துக்கு ஒரு கால வரலாறு சொல்கிறார்கள். இங்கு இருக்கக்கூடிய சைவ மடங்களுக்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகாலம் மக்கள் கூட்டமாக இருக்கக்கூடிய சங்கங்களாக இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் சாதி மதம் கடந்து ஒன்றாக ஒரு சனநாயக அமைப்பாக இயக்கமாக இருந்த காலகட்டம் இன்றிலிருந்து 100/150 வருடத்திற்குள்தான் இருக்கும்.
அந்த சமயத்தில் இந்தியா எப்படி இருந்தது, ஆங்கில ஆட்சி எப்படி இருந்தது என்பது தான் கேள்வி. அன்றைக்கு ஆரிய சமாஜம் கோலோச்சியது, பிரம்ம சமாஜம் கோலோச்சியது. சமஸ்கிருதம்தான் வெள்ளையர்களோடு ஆதர்சனமாக இருந்தது. ஆரியர்கள் தான் அவர்களுடைய பிரதான அதிகாரிகளாக இருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்வதற்கான ஒரு வார்த்தை தேவைப்பட்டது. அந்த வார்த்தை என்பது இந்த மொழி ஆய்விலிருந்து சட்ட ஆய்விலிருந்து வந்த வார்த்தை என பிடித்துக் கொள்கிறார்கள். அதற்கு முன்பு வரைக்கும் நமக்கும் டெல்லிக்கும் தொடர்பு இல்லை நமக்கும் கல்கத்தாவிற்கும் தொடர்பு இல்லை. நமக்கும் குஜராத்திற்கும் தொடர்பு இல்லை, நமக்கும் காஷ்மீரத்துக்கும்,தொடர்பு கிடையாது.
நம்மை எல்லாம் ஆள்வதற்காக வெள்ளையன் இணைத்த ஒரு ஆட்சிப் பரப்பிற்குள் வருகிறோமோ, அன்றைக்கு அவன் வேறு – நான் வேறு, அவன் மொழி வேறு – என் மொழி வேறு, அவன் பண்பாடு வேறு – என் பண்பாடு வேறு, அவன் நிலப்பரப்பு வேறு – எனது நிலப்பரப்பு வேறு என்று சொல்லுவதற்கு ஒரு வார்த்தை தேவைப்படுகிறது. அன்றைக்கு இந்த சமூகத்திலே படித்தவனாக, அரசியலை பேசக்கூடியவனாக இருந்தவன் வெள்ளைக்காரன். அவன் ஒரு சொல்லை பயன்படுத்துகிறான். அந்த சொல்லோடு உறவாடுகின்ற சிந்தனையாளர்கள் அதை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம். இது தான் நடந்திருக்கிறது.
நாங்கள் எல்லாம் அவன் இல்லை என்று சொல்றதுக்கு நமக்கு ஒரு பெயர் வேண்டி இருந்தது. இந்த நிலப்பரப்பில் தனியாக வாழ்ந்த வரை பிரித்துச் சொல்ல அவசியம் இல்லை. ஆனால் எல்லோரையும் ஒரு இடத்துக்குள்ளே பூட்டியதற்குப் பிறகு எனக்கும் உனக்கும் வேறு பெயர் என்று வேறுபடுத்தி காட்டுவதற்காக ஒரு பெயரை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே இந்த பெயர் புழக்கத்தில் வந்துவிட்டது.
நாம் தமிழர் கட்சிக்காரன் பெரியார் தெலுங்கு, அதனால் திராவிடம் என்பதே தெலுங்கு என மிகவும் எளிமையாக சொல்லி முடித்து விடுகிறான். அதற்கு 150 வருடத்தில் நடந்த எந்த வரலாறும் அவன் தெரிந்து கொள்வதில்லை. இவ்வளவுதான் அவனுக்கு தெரிந்த ஒரே வரலாறு. ஆக, திராவிடம் என்ற வார்த்தையை இந்த பின்புலத்தில் இருந்துதான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இன்னும் சொல்ல மீண்டும் என்றால் தமிழ்நாட்டிலே ஏழை எளிய மக்கள் நடத்திய புரட்சி என்பது 700 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. அது இன்று, நேற்று அல்ல 700 வருட வரலாறு கொண்டது. 700 வருடத்திற்கு முன்பு பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும் தான் ஊர் நில உடைமையாளர்கள், பண்ணையார்கள். அவர்கள் விதித்த வரி தாங்க முடியாமல் 700 வருடத்திற்கு முன்பு 98 இடங்கை சாதி, 98 வலங்கை சாதி சேர்ந்து தீர்மானம் போடுகிறார்கள்.
இந்த வெள்ளாளர்களுக்கும் பார்ப்பனருக்கும் இனிமேல் வரி கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் போடுகிறார்கள். அது தஞ்சைப் பகுதி காவிரி டெல்டா முழுக்க எல்லா கிராமங்களிலும் அந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. பார்ப்பனர் அல்லாத ஏழை எளிய குடியானவர்கள் ஒன்று திரள்வதற்கு ஒரு இயக்கம் தேவைப்பட்டது. அன்று அவர்கள் இயக்கமாக மாறுவதற்கான சூழல் கிடையாது. அரசர் காலத்திலே அல்லது நில உடைமை காலத்திற்குள்ளாக இப்படி இயக்கமாக எல்லாம் மாற முடியாது. ஆகவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அன்று போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்த போராட்டம் எப்பொழுது கூர்மை அடைகிறது என்றால், வெள்ளைக்காரன் வந்து வரி தீவிரமாக போடும்போது தீவிரம் அடைகிறது. வெள்ளைக்காரன் காலத்தில் மோசமான வரியாக போடப்படுகிறது. வெள்ளைக்காரனின் மோசமான வரியை எதிர்த்து நின்று மக்கள் போராட ஆரம்பிக்கிறார்கள்.
அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்தான் மருதுபாண்டியர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனும், தீரன் சின்னமலையும், கோபால நாயக்கரும், ஒண்டிவீரனும், பூலித்தேவனும். அதிலிருந்து வந்தவர்கள்தான் அவர்கள். ஆண்ட பரம்பரையிருந்து அவர்கள் வரவில்லை. ஏழை எளிய மக்கள் வெள்ளையர்களுடைய வரிக்கொடுமை தாங்க முடியாமல் கையில் வேல் கம்பை எடுத்து அவர்களுடன் சண்டை போட வந்தார்கள். உங்களுக்கு படைத் தளபதியாக நாங்கள் வருகிறோம் என்று சொல்லி இந்த பாளையக்காரர்கள் வந்தார்கள். உயிர் கொடுத்து போராடினார்கள். அந்த போராட்டத்திலும் பார்ப்பனர்கள் பங்கேற்கவில்லை. அதுதான் மக்கள் திரண்டு எழுந்து வந்த போராட்டம். அது கொடூரமாக நசுக்கப்பட்டது, கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் சுந்தரலிங்கம் என்கிற ஒரு வீரன் இருந்தார், மருதுபாண்டியர்கள் இருப்பார்கள், எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் இருப்பார்கள். அதில் முசுலிம்கள் இருந்தார்கள். பார்ப்பனர்கள் மட்டும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு தேவையில்லை, அவர்கள் அந்த பிரச்சனையிலே இல்லை. இந்த போராட்டம் வேலூர் புரட்சியோடு நசுக்கப்பட்டு விடுகிறது. அனைவரையும் பீரங்கி வாயிலே கட்டி சுட்டு வெள்ளையர்கள் சிதைத்து விடுகிறார்கள். மக்களிடம் பயம் வந்துவிடுகிறது. மக்கள் போராட முடியாமல் இருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு சனநாயக அமைப்புகளாக மாறலாம் என்ற ஒரு சூழல் வந்த உடனே, அப்பொழுதுதான் ஆதி திராவிட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை என்று சபைகள் எல்லாம் உருவாக ஆரம்பிக்கிறது. இந்த இடத்துக்குள்ளாக பார்ப்பனர்கள் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் எனக் கொண்டு வருகிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்கள் தங்களுக்கு என்று இயக்கங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த இயக்கங்கள்தான் பார்ப்பனர் இல்லாத இயக்கமாக வருகிறது. இன்னொரு புறத்திலே சுயமரியாதை இயக்கம் வருகிறது. இரண்டும் ஒன்றல்ல, இரண்டு பிரதிநிதிகளும் வேறு வேறு.
பெங்களூர் குணா சொல்லுவதும் மாபொசி சொல்லுவதும் என்னவென்றால், ‘நீதிக்கட்சி என்பது இங்கே இருந்த பண்ணையார்களுக்கான கட்சி. அவர்களுடைய வர்க்க நலன்களை முன்னிறுத்திய கட்சி. அதனோடு தமிழ் நாட்டைச் சார்ந்த பண்ணையார்களுக்கும், தெலுங்கு பண்ணையார்களுக்கும் நடந்த சண்டையாக இருக்கிறது. அது தமிழ்நாட்டினுடைய வரலாறாக மாறிவிடாது. அதெல்லாம் சாதி நலன்கள் சார்ந்து இயங்கியது. இன நலன் சார்ந்து இயங்கியதில்லை’ என்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேறொரு சமயத்தில் விரிவாக பேச வேண்டி இருக்கிறது.
இப்படிப்பட்ட சமயத்தில்தான் இந்த சாதி என்பது மிக மோசமாக மக்களை சுரண்டுகிறது என்கின்ற அடிப்படை பிரச்சனையை உணர மறுத்தவர் தான் மாபொசி. இன்றைக்கும் சாதி சண்டைகள், சாதியால் ஏற்படும் ஒடுக்குமுறை பிரச்சினைகளுக்கு, சாதிய படுகொலையின் பொழுது ஐயா. மணியரசனோ அல்லது நண்பர் சீமானோ போராட்ட களத்துக்கு ஏன் வருவதில்லை என்றால், அவர்களுக்கு அது பிரதான பிரச்சனையே கிடையாது. சாதி ஒடுக்குமுறை எல்லாம் இருக்கும், அதெல்லாம் பரவாயில்லை, நானும் நீயும் ஒன்றாக தமிழனாகவே சேர்ந்து நின்று சண்டை போடுவோம் என்கிறார்கள். எனக்கு முதலமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தால், போதும் உன் பிரச்சனையை பற்றி பின்னர் பார்த்து தீர்த்து விடுகிறேன் என்று எளிமையாக முன் வைக்கிறார் சீமான். அதனால்தான் இவர்கள் சாதிகளுக்கு இடையேயான சண்டைகளைப் பற்றி பேசுவதில்லை. இந்துத்துவவாதிகளும் சாதிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. இரண்டு பேருக்குமான ஒற்றுமை இந்த இடத்தில்தான் இருக்கிறது. இரண்டு பேருமே சாதியை ஒழிக்க வேண்டும் என்கின்ற கொள்கை கொண்டவர்கள் அல்ல, சாதி ஒழிப்பை உதட்டளவில் பேசுகிறார்கள்.
சாதிதான் பிரதான முரண்பாடாக தொழிலாளர்களை பிரித்துக் கொண்டிருக்கிறது, சாதி ஒழிப்பை உங்களது போராட்டத்தோடு இணைக்கவில்லை என்றால் தமிழ்தேசியம் சாத்தியமில்லை என்று பேசியவர் தமிழரசன். தமிழரசன் சொல்லக்கூடிய இந்த கொள்கைகளுக்கும் இங்கே நாம் தமிழர் கட்சிக்கும், ஐயா. மணியரசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் பேச்சளவில், அறிக்கை அளவில் எல்லாமே இருக்கும். ஆனால் சாதிப்பிரச்சினை வந்தால் இந்த சாதி பிரச்சனைக்கு எல்லாம் காரணம் திராவிடம், திராவிட இயக்கம், திராவிட கட்சி, திமுக என்று சொல்லிவிட்டு கடந்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமா சாதி இருக்கிறது, சாதி முரண்பாடு தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கிறது? இந்த சாதி பிரச்சனைக்கு எல்லாம் காரணம் திராவிட இயக்கம் என்று இன்றைக்கு ஐயா. மணியரசன் சொல்லுவதோ, நண்பர் சீமான் சொல்வதற்கான மூல வித்து எங்கு இருக்கிறது என்றால் மாபொசி இடம் இருக்கிறது. கம்யூனல் GO, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்ததனால் தான் சாதி சங்கம் வந்து பிரதிநிதித்துவத்தை கேட்கிறார்கள். அதனால் தான் சாதி உணர்வு வளர்ந்து விட்டது, இன உணர்வு வளரவில்லை. இந்த பிரதிநிதித்துவத்தை எல்லாம் ஏன் கேட்கிறீர்கள் என்று மாபொசி பேசியதன் விளைவுதான், இன்றைக்கு இவர்கள் பேசக் கூடியதாக மாறியிருக்கிறது.
வன்னியருக்கு இட ஒதுக்கீடு அல்லது பட்டியல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு இப்படி எல்லாம் தனித்தனி சாதி சங்கமா வைத்து இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, இந்த இட ஒதுக்கீடு கேட்பதே திராவிட இயக்கம் முன்னின்று போராடிய காரணத்தினால்தான். தமிழனாக இணையாமல் உரிமைக்காக போராடிய காரணத்தினால் இங்கே சாதி வளர்ந்துவிட்டது என்று சொல்லுவதுதான் மாபோசிசம். இந்த மாபோசிசத்தை தூக்கிக்கொண்டு திராவிடம் சாதியை வளர்த்துவிட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் கேட்பது என்னவென்றால், இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் சாதி வளர்ந்ததா, இட ஒதுக்கீடு வர கம்யூனல் GO அல்லது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கின்ற ஒன்று வரவில்லை என்றால் சாதியே வந்திருக்காதா? இதிலிருந்து இவர்கள் எங்கே ஆர்எஸ்எஸ் உடன் ஒத்துப்போகிறார்கள் என்று புரியவில்லையா? இதைத்தான் தமிழரசன் சொல்லும்பொழுது சாதிதான் முதன்மை முரண்பாடு என்றார்.
இவர்கள் பிரதான முரண்பாடு குறித்து பேசும்போது நேர் தலைகீழாக பேசுகிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கான போராட்ட களத்திலே ஐயா. மணியரசனையும் பார்த்திருக்க முடியாது, சீமானையும் பார்த்திருக்க முடியாது. சாதி ஒழிப்பு போராட்ட களத்தில், இவர்கள் இங்கே பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திப்பதில் இவர்களை நீங்கள் பார்க்க முடியாததற்கு இதுதான் காரணம். அவருக்கு (சீமான்) சாதி பிரச்சனை அல்ல. தமிழனாக, தலைவனாக என்னை ஏற்றுக்கொள், முதலமைச்சராக ஆக்கு என்பதுதான் அவர் முன்வைப்பதாக இருக்கிறது.
அடுத்தது இங்கு இந்த திராவிட ஒவ்வாமை என்பது எங்கிருந்து வருகிறது என்றால், திமுகவுக்கு போட்டியாக தேர்தல் களத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்தவர்கள் அல்லது தமிழரசு கட்சியிலிருந்து வந்தவர்கள் என இவர்களிடத்தில் இயல்பாக கட்சிப் போட்டி இருக்கிறது அல்லவா, அதை கொள்கைப் போட்டியாக மாற்றிவிட்டார்கள். இரண்டும் வேறு வேறு. திராவிட எதிர்ப்பு பேசக்கூடியவர்களின் பின்புறத்தில் இருப்பதை சென்று பார்த்தல் திராவிட கட்சி அல்லாத வேறு கட்சி சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் கட்சி ரீதியான போராட்டத்திலும், போட்டியிலும் இருந்த காரணத்தினால் அதே விசியத்தை கொள்கை கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
இந்த அடிப்படைதான் திராவிட ஒவ்வாமையினுடைய காரணமாக இருக்கிறது. திராவிட ஒவ்வாமைக்கு அல்லது திராவிட எதிர்ப்புக்கு எதெல்லாம் காரணமாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு சாதி தேவைப்படுகிறது, சாதியை ஏற்றுக்கொண்ட ஒரு ஒற்றுமை தேவைப்படுகிறது, இந்தியா வேண்டும், இந்தியாவிற்குள்ளாக ஒரு அதிகாரம், தங்கள் கையில் அது வரவேண்டும் என்பதெல்லாம் தான் காரணமாக இருக்கிறது. ஆக சாதி ஒழிப்பு அவர்களுக்கு பிரச்சனை இல்லை, இட ஒதுக்கீடு உரிமை அவர்களுக்கு தேவையில்லை, இந்தியா இருந்துவிட்டு போகட்டும், இந்தியாவிற்குள் இருக்கக்கூடிய தங்களது மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை கொடுத்து விட்டால் போதும், மிகவும் எளிமையான கோரிக்கையாக இதுவே இருக்கிறது. இதில் எங்கு தமிழ்தேசியம் இருக்கிறது? இதை கொள்கை இல்லாத எந்த கட்சி வேண்டுமானாலும் இதை பேசலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை.
தான் முதலமைச்சர் ஆனால் எல்லா பிரச்சனையும் தீர்த்துவிடுகிறேன் என்கிற அடிப்படையில் தான் இங்கே தமிழ் தேசியம் என்பது உருவாக்கப்பட்டு குழப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் பேச வேண்டிய விசியங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் இன்றைக்கு சீமான் செய்வதனுடைய அடிப்படை நோக்கம் என்னவென்றால், இன்றைக்கு தமிழ் உணர்வு கொண்டவர்களை எல்லாம் தவறான எதிரியை நோக்கி திசை திருப்பிவிட்டு நிற்பதுதான்.
நமக்கும் பிறமொழி பேசக்கூடிய அண்டை மொழியைச் சார்ந்த மாநிலத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய முரண்பாடுகள் தீர்க்கப்படக்கூடிய முரண்பாடுகளே தவிர தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகள் அல்ல. ஆனால் முதன்மை முரண்பாடாக நம்மை வளர விடாமல் இருப்பதற்கு காரணம் பார்ப்பனியம். அது சாதியாக பிரித்திருக்கிறது, அது ஊரு, சேரி, அக்ரகாரம் என பிரித்துவைத்த காரணத்தினால்தான் 2000 வருடமாக வளர முடியவில்லை என்பதுதான் அடிப்படைப் பிரச்சனை. ஆனால் அது பிரச்சனை இல்லை என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆக இங்கு இந்த மடை மாற்றப்பட்ட மிக மோசமான அரசியல் இன்றைக்கு இதன் விளைவாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இது 2009 இனப்படுகொலையின் பின்னணியில் நடந்தது தான் பெரிய சோகம். 2009-ல் அன்றைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் டெல்லி அரசான அன்றைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இனப்படுகொலை நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இனப்படுகொலை நடந்து முடிந்தது. எல்லோருக்கும் கோவம் இருந்தது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது மிகப்பெரிய சோகமாக, கோவமாக மாறியது. ஏமாற்றம் இருந்தது. அன்றைக்கு இலங்கை அரசுக்கு அனைத்து உதவிகளும் செய்தது இந்திய அரசு. அதன் மீதான கோபம் இருந்தது.
அந்த சமயத்திலே பெரியாரிஸ்டுகள்தான் சீமானை வைத்து, நாம் தமிழர் என்கின்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தார்கள். இயக்குனர் மணிவண்ணன் வீட்டிலே இதற்கான கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு நானும் போயிருக்கின்றேன். தோழர். கொளத்தூர்மணி அவர்கள், நான் வர வேண்டும் என்று சொன்னதாக ராஜீவ் காந்தி என்னை அழைத்துச் சென்றார். அப்பொழுதே, ஒரு கொள்கை திட்டத்தை முன்வைத்து அதன் மீதான அமைப்பை கட்டுங்கள் என்று சொன்னேன். ஆனால் அன்றைக்கு என்ன சொன்னார்கள் என்றால் திமுகவை நம்பினோம், ஆனால் திமுக நமக்கு துரோகம் இழைத்துவிட்டது, ஆக திமுகவுக்கு மாற்றாக ஒரு தேர்தல் கட்சி வேண்டும் என்று சொன்னார்கள். சீமான் சொல்லும் வரலாறு நாம் தமிழர் வரலாறு கிடையாது. நாம் தமிழர் வரலாறை எழுதியவர்கள் பெரியாரிஸ்டுகள்.
அவர் (சீமான்) திராவிடத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை நான் சொல்ல வேண்டும். அவர் அன்றைக்கு திக மேடைகளிலே பேச்சாளராக பேசியவர். அவர் பேசினார், ஓரளவு கூட்டம் வந்தது. ஏனென்றால் நம் ஊரில், சினிமாக்காரர் பேசினால் கூட்டத்தில் நின்று கேட்பார்கள். அதற்காக பெரியாரிஸ்டுகள் அவரை ஒரு பேச்சாளராக பயன்படுத்திக் கொண்டார்கள். திமுகவினுடைய ஆட்சி சமயத்தில் ஈழப்படுகொலை நடந்த உடனே எல்லாருக்கும் ஒரு கோவம் வருகிறது. இனிமேல் திமுகவை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை, நமக்கென்று ஒரு கட்சி உருவாக்க வேண்டும் என்று அன்றைக்கு இயக்குனர் மணிவண்ணன், தோழர். கொளத்தூர்மணி, ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட பலர் அதில் பங்கெடுத்து உருவான கட்சியே சீமானின் கட்சி
ஒரு மேடை பேச்சாளர் கட்சி கட்ட முடியாது, ஒரு இயக்கத்தவன்தான் கட்சி கட்ட முடியும், ஒரு இயக்கத்தைச் சார்ந்தவனால் மட்டும்தான் ஒரு இடத்திலே காவல்துறையை எதிர்த்து நின்று போராடி, ஒரு அரசை எதிர்த்து நின்று போராடி, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த முடியும், இயக்கத்தை கட்ட முடியும், போராட முடியும். அன்றைக்கு இயக்கங்களாக இருக்கக்கூடிய பெரியார் இயக்கங்கள் எல்லாம் பின்தளத்தில் நாம் போராட்ட சக்தியாக நிற்போம், தேர்தல் களத்திற்குள் நமக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்வோம் என்று உருவாக்கினார்கள். அன்றைக்கு அந்த கூட்டமைப்பில் யாரெல்லாம் வந்தார்கள் என்றால், பெரியாரிய இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், தனித்தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர்கள், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு மீட்சிப்படையைச் சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் என எல்லாரும் சேர்ந்துதான் அன்றைக்கு ஒரு இயக்கமாக மாறுவதற்காக அந்த கூட்டத்தைக் கூட்டினார்கள். அப்படியாகத்தான் அந்த கட்சி வந்தது.
அந்த சமயத்தில் என்ன நடந்தது என்றால், அன்றைக்கு ஈழ ஆதரவு போராட்டமாக, இலங்கை அரசுக்கு எதிராக, இலங்கை தூதருக்கு எதிராக அல்லது இலங்கையை ஆதரிக்கக் கூடியவர்களுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தும். அந்த போராட்டத்தோடு நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கொடியை தூக்கிட்டு வருவார்கள். போராடி கைதாவது பெரியார் தி.க தோழர்களாக இருப்பார்கள், பேட்டி கொடுப்பது நாம் தமிழராக இருக்கும். இதுதான் நடந்தது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 2010 செப்டம்பர் 17 தந்தை பெரியாரினுடைய பிறந்தநாள் அன்று எம்ஜிஆர் நகரிலே மிகப்பெரிய கூட்டமாக முதல் கூட்டத்தை ஒரு மாபெரும் எழுச்சிக் கூட்டத்தை பெரியார் திராவிடக் கழகம் சீமானை வைத்து, நாம் தமிழரை வைத்து நடத்தியது. அன்றைக்கு திமுக அரசு சீமானை அல்லது நாம் தமிழர் என்கின்ற ஒரு கட்சி உருவாவதை தடுப்பதற்காக அடக்குமுறை ஏவுகின்ற சமயத்தில் அதை எதிர்த்து நின்று வீதியிலே போராடியவர்கள் பெரியாரிய தோழர்கள், திராவிட இயக்கத் தோழர்கள். சீமானுடைய சொந்தக்காரர்கள் கிடையாது
இதோ இங்கு இளமாறன் இருக்கிறார் அவர் தான் வைத்திருந்த சொத்துக்களை விற்று மிகப்பெரிய கூட்டத்தை 2011-ல் கோயம்புத்தூரில் நடத்துகிறார். அவர் கோயம்புத்தூரில் இருந்து வந்தவர். அவர் 2009-ல் திமுகவிலே கோவை மாவட்ட மாணவரணி பொறுப்பாளராக இருந்தவர். அப்படியே இன்றைக்கு இருந்திருந்தார் என்றால் அமைச்சராக இருந்திருப்பார்.
அன்றைக்கு நாம் தமிழர் என்கின்ற கட்சியை உருவாக்கிய பொழுது அதிலே இதுபோன்ற திராவிட இயக்க பின்னணியில் இருந்து வந்தவர்கள், திமுகவிற்கு நிகராக இன்னொன்றை உருவாக்க வேண்டும் என்கிற தமிழர் சிந்தனையின் அடிப்படையில் நேர்மையாக இயங்குகின்ற, டெல்லியை சார்ந்திருக்காத ஒரு கட்சியை உருவாக்க வேண்டும் என்று வந்து நின்றார்கள். இதையெல்லாம் சீமானால் மறுக்க முடியுமா? நான் ஆதாரத்தோடு எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன்.
இவர்கள் எல்லாம் வந்து நின்றார்கள் என்றால், அன்பான சர்வாதிகாரம் பண்ண முடியாது. ஏனென்றால் இவர்கள் கேள்வி கேட்பார்கள். தன் விருப்பத்திற்கு பொய் பேச முடியாது. தோழர். இளமாறன் போன்றவர்கள், தோழர். சுந்தரமூர்த்தி போன்றவர்கள், இப்படி இன்னும் சொல்லப்போனால் தோழர் புதுக்கோட்டை முத்துக்குமார், காரைக்குடி மைக்கேல் எனப் பலர் இருந்தார்கள்.
காரைக்குடி மைக்கேல் விடுதலைப் புலிகளுடன் நேரடியாக இருந்து எல்லா உதவிகளும் செய்தவர். புதுக்கோட்டை முத்துக்குமாரை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அவரை சிறை வைத்த காரணத்திற்காகத்தான் வீரப்பன் ராஜ்குமாரை கடத்திய கதையே நடந்தது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கட்சியோடு இருந்தால் எலி மிச்சம் வைச்ச பழம் அல்லது தேள் கடிச்ச கதை எல்லாம் சொல்ல முடியாது. சினிமா கதை எல்லாம் சொல்ல முடியாது.
நான் தேசிய தலைவரோடு சாப்பாடு சாப்பிட்டேன் என்கிற கதையெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் தேசிய தலைவரோடும், விடுதலைப் புலிகளோடும் நேரடியாக இருந்து களத்தில் நின்று, அதற்கான எல்லா வேலைகளும் செய்து வழக்கு வாங்கி சிறைக்கு சென்றவர்கள் இவர்கள். இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு எப்படி அவர் சினிமா கதையை சொல்ல முடியும்? அதனால் என்ன செய்தார் என்றால் இவர்களை எல்லாம் வெளியில் அனுப்புவதற்கான, அப்புறப்படுத்துவதற்கான வேலை திட்டத்தை முன்வைத்தார். அதில் ஒன்றுதான் திராவிட எதிர்ப்பு.
திராவிட எதிர்ப்பு என்ற அறிக்கையை வெளியிட்ட உடனே நேர்மையான பெரியாரிஸ்டுகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறி விட்டார்கள். அவருக்கு அங்கே ஆதிக்கம் செலுத்த வேண்டும். அவர் சொல்வதுதான், அவர் சொல்லும் கதைதான் அங்கு எடுபட வேண்டும். இரண்டாவதாக பெரியாரிஸ்டுகள் இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசை குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு அதிகாரிகள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள்.
அவர்கள் போராட்டம் நடத்துகின்ற அந்த காலகட்டத்திற்குள் அதையெல்லாம் மடைமாற்றிவிட்டு, இங்கே தெலுங்கர்கள் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்லுவதற்கான வேலையை செய்தால், இந்தியாவின் மீதான அழுத்தம் குறைந்துவிடும் என்று மடைமாற்றி விட்டார். ’2008, 2009, 2010 என மூன்று வருடமாக இந்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை நடத்தி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த தமிழ்நாட்டு இளைஞர்களை 2011-ல் தெலுங்கர்கள் தான் பிரச்சனை என்று தெளிவாக மடை மாற்றியவர் சீமான்’.
இன்றைக்கு அவர் கட்சியில் இருக்கிறவர்கள் எல்லாம் ஐயா. வைகோவை ரொம்ப இழிவாக பேசுவதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலின் பொழுது இவர் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற முடிவெடுக்கிறார். அதை புதுக்கோட்டை முத்துக்குமார், மைக்கேல் உள்ளிட்டவர்கள், தோழர் இளமாறன் போன்றவர்கள் எல்லாம் கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்த சமயத்திலே அவர் அதிமுகவோடு நெருங்குவதற்கு வழி இல்லை, தொடர்பில்லை. அந்த சமயத்திலே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த ஐயா. வைகோவை சென்று பார்த்து ஐயா. வைகோவின் வழியாகத்தான் அதிமுகவிற்கான மேடை பிரச்சாரகராக மாறியவர் சீமான் அவர்கள். அவர் இல்லை என்று சொல்ல முடியுமா? போட்டோவே இருக்கிறது. இதுதான் 2011-ல் நடந்தது.
இது நடந்த உடனே அன்றைக்கு புதுக்கோட்டை முத்துக்குமார் என்னிடத்தில் போன் செய்து, நாம் எதை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதற்கு மாறாக இவர் அதிமுக- விடம் போய் கட்சியை சேர்த்து விடுகிறார். திமுக, அதிமுக வேண்டாம் என்று சொல்லி தானே, நாம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்று பேசினார். ’நான் முத்துக்குமாரிடம், இதனால்தான் முத்து தோழர் இவர்களை வைத்து எல்லாம் நீங்கள் கட்சி கட்டாதீர்கள், கொள்கை அடிப்படையில் உருவாக்குங்கள் என்று சொன்னேன் என்றேன். அன்று மணிவண்ணன் வீட்டு வாசலில் நின்று அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினேன். இப்படி எல்லாம் உருவாக்காதீர்கள், தவறு என்று அன்றே சொன்னேன். இவர்கள் ஜூலை மாதத்தில் பிரகடனப்படுத்தும் பொழுது, இவர்களிடம் விட்டோம் என்றால் வேலைக்கு ஆகாது என்று சொல்லித்தான் நாங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மே 17 இயக்கத்தை ஆரம்பித்தோம்’.
இந்த சமயத்தில்தான் அவருக்கு அதிமுகவின் அனுசரனை கிடைத்துவிட்டது. அன்று என்ன நிலை என்றால் ஈழத்தினுடைய ஆதரவு அலை வலுவாக இருக்கிறது. திமுக எதிர்ப்பு அலை வலுவாக இருக்கிறது. அதனால் அதை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிமுக, ஐயா. வைகோவை விட சீமானை பயன்படுத்திக் கொண்டால் சீட்டு கேட்க மாட்டார் என நினைத்தது. அவ்வளவுதான் விசியம், வேற ஒன்றும் கிடையாது. இதுதான் நடந்தது. அன்று அதிமுகவினுடைய பிரதான பிரச்சாரகராக மாறிவிட்டார். இதற்குப் பிறகு திராவிட எதிர்ப்பும் சேர்ந்து பேசினால் உண்மையான பெரியாரிஸ்டுகள் வெளியே போய்விடுவார்கள், கட்சி கைக்குள் வந்துவிடும் என்று நினைத்தார்.
இப்போது திராவிட எதிர்ப்பு பேசுகிறாரே, என்றைக்காவது ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்து, நீங்கள் கன்னடர் தானேன்னு நின்று சண்டை போட்டிருக்காரா? அங்கு போய் கேட்க வேண்டியதுதானே, இங்கு இருக்கிறவன் எல்லாம் தெலுங்கு என்று சொல்லுவது, தமிழர் இல்லை என்று சொல்லுவது, எல்லாவற்றிற்கும் முத்திரை குத்தினாரே, ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்தபோது 2011லிருந்து 2016 காலத்தில் நாம் தமிழர் கட்சிக்கார்கள் யாராவது அவரை கன்னடர் என்று மேடையேறி சண்டை போட்டு இருக்கிறார்களா என்றால், இல்லை. அப்படி என்றால் இந்த திராவிட எதிர்ப்பு என்பது கட்சிக்குள்ளாக இருந்த நேர்மையானவர்களை வெளியேற்றுவது மட்டுமே. நேர்மையானவர்களை வெளியேற்றி விட்டு, கட்சியை தனது அன்பான சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டில் வைத்து பல பொய் கதைகளை பேசிக் கொண்டிருக்கிறார்.
எங்களுக்கு இருக்கும் வருத்தம் என்னவென்றால், அன்றைக்கு இவரை எல்லாம் அழைத்து ஒரு கட்சி கட்ட வேண்டும் என்று சொன்ன பெரியாரிய தலைவர்கள் அன்றைக்கே அம்பலப்படுத்தி இருந்தார்கள் என்றால், இன்று இந்த பிரச்சனை கிடையாது. இன்றைக்கு கட்சியே இருந்திருக்காது. எல்லா பெரியாரிஸ்டுகளும் வெளியில் வந்திருந்தால் கட்சி இருந்திருக்காது அல்லது கட்சித் தலைமையை மாற்றி இருக்க முடியும். அதை அவர்கள் செய்யவில்லை அதை நாங்கள் விமர்சனமாகவே சொல்லுகின்றோம். 10 வருடம் கழித்து அவரை அம்பலப்படுத்தி என்ன ஆகப் போகிறது?
ஆக, இவர் என்ன செய்தார் என்றால், 2009 ஈழ இனப்படுகொலைக்காக இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்டவர்களை எல்லாம் மடை மாற்றி தெலுங்கு எதிர்ப்பு என்று கொண்டு வந்து நிறுத்திவிட்டார். இதற்கு அடிப்படை ஆதாரமாக மாபொசி-யை எடுக்கிறார்கள், குணாவை எடுக்கிறார்கள். குணாவினுடைய புத்தகம் மாபொசியிடம் இருந்து எடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் வைக்கப்பட்டிருப்பதுதான். மாபொசி-யினுடைய தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றதாக இருக்கிறது.
ஒன்றே ஒன்றை அவர்களிடம் கேட்கிறேன், பார்ப்பனியத்திற்கு சுரண்டல் செய்வதற்கு ஒரு கொள்கை திட்டம் இருக்கிறது, சனாதனம் என்கின்ற கொள்கை திட்டம் இருக்கிறது. தெலுங்கர்களை எதிரியாக வைக்கிறீங்கள் என்றால், அங்கு என்ன கொள்கை திட்டத்தை வைப்பீர்கள், என்ன கோட்பாடு அங்கு இருக்கிறது? இங்கே சனாதனம் என்கின்ற கோட்பாடு இருப்பது போல அங்கு என்ன கோட்பாடு இருக்கிறது? அது ஆதிக்கமாக இருக்கிறது என்றால், அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது வேறு.
ஆனால் கோட்பாடு ரீதியாக உங்களை இழிவானவராக நடத்தக்கூடிய இந்து மதத்தினால் 2000 ஆண்டுகளாக சிதைக்கப்பட்ட மக்கள், அந்த அடிமைத்தனத்தில் இருந்து மேல் எழுவதுதான் பிரதான சண்டை. அந்த சண்டையை திராவிடம் மட்டும் தான் நடத்தியது. அதனால்தான் திராவிடம் தேவைப்படுகிறது. ஆரியத்தினுடைய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கக்கூடிய பணியை திராவிடம் செய்கிறது. ஆரியத்தின் பிடியிலிருந்து தமிழினம் மீட்கப்படக்கூடிய போராட்டத்திலே திராவிடத்தை இணைத்துக் கொண்டு தனித்தமிழ் இயக்கம் வருகிறது. சமஸ்கிருதத்தினுடைய ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுக்கக்கூடிய அந்த போராட்டத்தில், அந்த தனித்தமிழ் இயக்கத்தையும் இணைத்துக் கொண்டு வர்க்க போராட்டத்தை முன்னெடுத்த தமிழரசன் அவர்கள் முன்னெடுத்த அந்த அரசியல் இணைப்பு தான் தமிழ் தேசியம். இதில் ஏதாவது ஒன்று பேசி விட்டு இருந்தால் தமிழ் தேசியம் கிடையாது. வெறும் தமிழ் மொழியை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், இங்கு ஏழை எளியோருடைய பிரச்சனை தீர்ந்து விடுவதில்லை. பார்ப்பனியம் ஒழிந்து விடுவதில்லை. வர்க்க அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் பார்ப்பனியத்தை என்ன செய்வது? இந்திய அரசியலை என்ன செய்வது? இந்திய மேலாதிக்கத்தை என்ன செய்வது?
இது எல்லாவற்றையும் ஒன்றிணைத்த ஒன்றுதான் தமிழ் தேசியம். அப்படிப்பட்ட ஒரு தமிழ் தேசியத்தில் நீங்கள் திராவிடத்தை பிடுங்கி விட்டால், அங்கே ஆரியத்தை ஒட்ட வைத்துக்கொண்டு ஆரிய தேசியமாக மாறிவிடக்கூடியதுதான் நடக்கும். ஆகவே திராவிடத்தை மறுத்த தமிழ் தேசியம் என்பது ஆரியத்திற்கு சார்பானதாக இருக்கும், தமிழ் தேசியத்தை மறுத்த திராவிடம் என்பதும் ஆரியத்தினுடைய சார்பாகத்தான் போய் நிற்குமே ஒழிய வேறொன்றாக நிற்காது. இது ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ் தேசியம் என்பது சுயநிர்ணய உரிமையை பற்றிப் பேசுவது, அந்த சுயநிர்ணய உரிமையைப் பற்றி மிகத் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அந்த சுயநிர்ணய உரிமையை மறுத்துவிட்டு இந்திய அரசாங்கத்தோடு கைகோர்த்துக் கொண்டு, இந்தியாவின் கொள்கையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இங்கே திணிப்பதை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தால் அதுவும் ஆரியத்தோடு கைகலப்பதாகத்தான் நிற்கும்.
ஆக இங்கே பிரதான எதிரியாக இருப்பது ஆரியம், இந்தியம், இந்து மதம், பார்ப்பனியம், சனாதனம். இந்த முரண்பாடோடு, இந்த கும்பல் யாரோடு சேர்ந்து இருக்கிறது என்றால், ஏகாதிபத்தியத்தோடு, முதலாளிகளோடு சேர்ந்து இருக்கிறது. ஆக இந்த முதலாளிகளும், இந்த பார்ப்பனிய சக்திகளும் சேர்ந்து இருப்பதை, சேர்ந்து எதிர்த்தால்தான் நீங்கள் வெல்ல முடியும். இதில் ஏதேனும் ஒன்றை மட்டும்தான் எதிர்ப்போம் என்றால், பார்ப்பனியத்தை மட்டுமே எதிர்ப்பேன் என்று சொல்லிவிட்டு முதலாளித்துவத்தை கைவிட்டால், இன்றைக்கு திமுக செல்வதைப் போல முதலாளித்துவத்தோடு கைகோர்த்து பின்னர் அப்படியே ஆரியத்தோடு கைகோர்க்கும் நிலை ஏற்படும் அல்லது இங்கு பார்ப்பன எதிர்ப்பை கைவிட்டார்கள் என்றால், இங்கே பார்ப்பனியத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஆரியத்தோடு போய் தான் நிற்பார்கள். இப்படித்தான் நடக்கும். எப்படி போனாலும் அதுதான் வழியாக அமையும். இந்த இரண்டையும் நீங்கள் பார்த்து புரிந்து எதிர்கொண்டால் மட்டும்தான் திராவிடம், தமிழ் தேசியம் என்கின்ற இரண்டையும் சரியாக எடுக்க முடியும்.
இந்த இரண்டுமே ரோட்டுக்கு இந்த பக்கம் நிற்பதா அல்லது ரோட்டுக்கு அந்தப்பக்கம் நிற்பதா என்று சொல்லுவது அல்ல. சீமான் சார், நீங்கள் இன்னும் ரோட்டுக்கே வரல சார், நீங்க ரோட்டுக்கு அந்த பக்கம் நில்லு, இல்ல இந்த பக்கம் நில்லு, நடுவுல நின்னா லாரி அடிச்சிட்டு போயிருவே என்று சொன்னீர்களே, நீங்க இன்னும் ரோடே கண்டுபிடிக்கல. இன்னும் காட்டுக்குள்ள சுத்திட்டு இருக்கிறீங்க. முதல்ல ரோட்டை கண்டுபிடிங்க. அதற்குப் பிறகு ரோட்டுக்கு எந்த பக்கம் நிக்கிறது என்கிற முடிவு செய்யலாம். இல்லையென்றால் சாலையை நாம் போடுவோம். அதைத்தான் மேதகு பிரபாகரன் அவர்கள் சொன்னார், பாதையை தேடாதே – பாதையை உருவாக்கு என்று சொன்னார்.
இன்றைக்கு நமக்கு இருக்கிற பெரிய பிரச்சனை என்னவென்றால், தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு இந்திய பார்ப்பனர்களுக்கு வாலாட்டக்கூடிய ஒரு கட்சி தமிழ் தேசியகட்சியாக வந்து நிற்பதுதான்.
தமிழ்நாட்டினுடைய தமிழ் தேசியத்தினுடைய பிரதான சிக்கலே, ஆரியம் என்பதை விட தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு வந்து நிற்கக்கூடிய போலிகள் தான். இவர்கள் முதன்மை எதிரி என்பதை நாம் புரிந்து கொண்டு தேசியம் என்பதை உள்வாங்கி, அந்த இடத்திலே திராவிடத்தினுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு முன்னகர வேண்டும். ஆகவே திராவிடம் தமிழ் தேசியம் இரண்டும் தமிழினத்தினுடைய வளர்ச்சிக்கு ஒரு படிக்கட்டுகளாகத்தான் இருக்கிறதே ஒழிய, எதிர்நிலையில் இல்லை என்பதை சொல்லி முடிக்கின்றேன்.
யுட்யூப் இணைப்பு