மே 17 இயக்கத்தை கண்டு மோடி அரசு அஞ்சுகிறது – திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தை கண்டு மோடி அரசு அஞ்சுகிறது – திருமுருகன் காந்தி

தோழர் திருமுருகன் காந்தி தி கேரவன் இதழுக்கு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம்

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ (NSO) நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்காக உளவு பார்த்திருக்க கூடும் என்று சுமார் 50,000 கைப்பேசி எண்களின் பட்டியல் கசிந்துள்ளது. ஒரு சர்வதேச கூட்டாய்வின் மூலம் அந்த எண்கள் தொடர்பான நபர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் “தி வயர் (The Wire)” இணையத்தளம், அந்த பட்டியலில் திருமுருகன் காந்தி அவர்களின் கைப்பேசி எண்ணும் இடப்பெற்றுள்ளதாக ஜூலை 27 அன்று தெரிவித்தது. தி வயர் மற்றும் 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் கூடி நடத்திய விசாரணையில் பல தொடர்பு எண்கள் பெகாசஸ் (Pegasus) மூலம் ஊடுருவப்பட்டதாக கண்டறியப்பட்டது. பெகாசஸ் என்னும் “தீம்பொருள்” (மால்வேர் – Malware) மூலம் ஒருவரின் கைபேசியுனுள் நுழைந்து, அவரது கைப்பேசி செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்து கசிந்த இந்த தரவுகளை, “பார்பிடன் ஸ்டோரீஸ் (Forbidden Stories)” எனப்படும் இலாப நோக்கற்ற பிரஞ்சு ஊடகம் கைப்பற்றி, அதை அம்னெஸ்டி இன்டர்நெஷனல் (Amnesty International) உடன் பாதுகாப்பு ஆய்வகத்தில் தடயவியல் பகுப்பாய்வு செய்து, சில எண்களுக்குரிய கைப்பேசிகள் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டறிந்துள்ளது.

2009-இல் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதி கேட்டு போராடி வருபர் தான் மே பதினேழு இயக்கத்தின் நிறுவனரான திருமுருகன் காந்தி. நீதி கேட்டு போராடியதற்காக இதற்கு முன்னர் பல முறை சிறை சென்றுள்ளார். தான் ஏன் குறி வைக்கப்படுகிறேன் என்பது குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அதனை ஒடுக்குவதற்கு கடந்த சில ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், “தி கேரவன்” இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான அபேய் ரெஜியிடம் (Abhay Regi) விரிவாக பேசினார்.

அபேய் ரெஜி: பெகாசஸ் ஊடுருவலால் உங்கள் கைபேசி பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நீங்கள் எப்போது முதன்முதலாக உணர்ந்தீர்கள்?

திருமுருகன் காந்தி:  மற்றவர்களை போலவே நானும் ஊடக செய்திகள் மூலமாக தான் அறிந்துக்கொண்டேன். மக்களை அரசு கண்காணிக்க முடிவு செய்திருந்தால், நான் அந்த பட்டியலில் முன்னிலையில் இருப்பேன் என்பதை சில காலமாகவே நான் அறிவேன். அவை தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். “பெகாசஸ்” போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பார்கள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதே நேரம், பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்களின் கைப்பேசிகளை பெகாசஸ் பயன்படுத்தி ஊடுருவியதாக செய்தி வெளியானது முதல் தொடர்ந்து பெகாசஸ் குறித்து நான் கவனித்து வருகிறேன்.

ரெஜி: இதற்கு பின்னால் ஒன்றிய அரசு உள்ளதாக நீங்கள் உறுதியாக நினைக்கிறீர்களா?

திருமுருகன் காந்தி: ஆமாம். பீமா கோரேகான் வழக்கில் பெகாசஸ் பயன்படுத்தியதை மறுத்ததை போலவே, தற்போதும் அரசு மறுத்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. இந்த மால்வேர் கொண்டு ஊடுருவப்பட்டுள்ளவர்களின் பட்டியலை பார்த்தால், இவர்களை இந்த அரசும் மோடியும் தான் அச்சுறுத்தலாக கருதியிருப்பார்கள் என்று நமக்கு எளிதில் புரிந்துவிடும். இத்தனை பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை கண்டு வேறு யாரும் அச்சப்படமாட்டார்கள்.

அவர்கள் [அரசு] மறுப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆகையால், அது ஒரு பொருட்டல்ல. இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தும் பயன்பாடுகளை கண்டு நாம் அச்சப்பட தேவையுள்ளதாக நான் கருதுகிறேன். பீமா கோரேகான், அவர்கள் உருவாக்கிய வடிவத்தின் (model) முதல் படியாக நாம் காண வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த வடிவத்தின் மூலம் அவர்கள் முரண்படும் சித்தாந்தத்தின் எந்த பொது நிகழ்வுகளின் மீதும் குற்றம்சாற்றிட முடியும். எனக்குள் ஏற்பட்டுள்ள அச்சம் என்னவென்றால், பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலியான ஆதாரங்களை உள்ளே சொருகி இன்னும் அதிகமானவர்களை இதுபோன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்வார்கள் என்பதே.

ரெஜி: உங்கள் கைபேசியினுள் ஊடுருவதற்கோ அல்லது உங்களை கண்காணிப்பதற்கோ ஏன் அரசிற்கு தேவை இருப்பதாக கருதுகிறீர்கள்?

திருமுருகன் காந்தி: மே பதினேழு இயக்கம் எதையும் மறைத்து வைத்தது இல்லை என்பதை நான் முதலில் தெரியப்படுத்திட விரும்புகிறேன். சமூகத்தில் கூடுதல் சனநாயக வெளி வேண்டுமென்று எங்கள் அமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றது. அதுபோலவே, எங்கள் அமைப்பினுள்ளும் சனநாயக வெளியை கடைபிடித்து வருகிறோம். எங்கள் அரசியல் கொள்கைகள் குறித்தும் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நாங்கள் வெளிப்படையாகவே இருந்துள்ளோம். நாங்கள் நம்புவதை எங்கள் புத்தகங்கள் மற்றும் துண்டறிக்கைகளில் வெளியிட்டு வருகிறோம். எங்கள் அனைத்து கூட்டங்களும் சட்டப்படி காவல்துறை அனுமதி பெற்றே நடத்தி வருகிறோம்.

நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியதை கடந்து அவர்கள் கண்காணிப்பின் மூலம் என்னைப்பற்றி அவர்களுக்கு புதிதாக ஒன்றும் கிடைத்திடப்போவதில்லை. பெகாசஸ் போன்ற தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் செய்யாத குற்றங்களை நாங்கள் செய்ததாக காட்டிடவும், அல்லது எங்கள் இயக்கத்தை மேலும் முடக்கிட வேண்டுமானால் அது அவர்களுக்கு உதவும். நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதை கண்டு அவர்கள் அஞ்சுவதால் பல ஆண்டுகளாகவே இதை செய்து வருகிறார்கள்.

ரெஜி: மே பதினேழு இயக்கத்தின் நோக்கங்கள் என்னென்ன?

திருமுருகன் காந்தி: நாங்கள் ஒரு தமிழ்த்தேசிய இயக்கம். அதாவது, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை பின்பற்றி தமிழர் நலனுக்காக செயல்படும் அமைப்பு. எளிமையாக கூற வேண்டுமென்றால், 2009 தமிழீழ இனப்படுகொலைக்கான நீதியை பெறவும், அப்பகுதியில் சனநாயகமும் சமூக நீதியும் தழைத்திட போராடி வருகிறோம். 2009-ல் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான இனப்படுகொலையின் பின்னணியில் எங்கள் அமைப்பு உருவானது. அந்த இனப்படுகொலையை செய்தது சிங்கள அரசாக இருந்தாலும் அதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு வழங்கப்பட்டது. மற்ற தமிழ் அமைப்புகளை போன்று அல்லாமல், இனப்படுகொலைக்கான நீதியை வென்றிட இனப்படுகொலைக்கு ஆதரவளித்த அனைவரையும் குறித்து பேச வேண்டும் என்பதில் நாங்கள்  தொடக்கம் முதலே தெளிவாக இருந்து வருகிறோம்.

இப்பிரச்னையை வெறும் உணர்ச்சிவயப்பட்டு அணுகிடாமல், இதில் புதைந்துள்ள புவிசார் அரசியல் பின்னல்கள்; அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து சீனா, இந்தியா செய்த உதவிகள்; ஐக்கிய நாடுகள் சபையின் கள்ளமௌனம் ஆகியவற்றை அம்பலப்படுத்திட உறுதியாக உள்ளோம். இனப்படுகொலை நிகழும்போது என்ஜிஓ-க்கள் உதவி செய்தது அல்லது மௌனம் காத்தது குறித்தும் நாங்கள் பேசி உள்ளோம்.

ரெஜி: இந்த காரணங்களுக்காக தான் இந்திய அரசு மே பதினேழு இயக்கத்தை குறி வைக்கின்றதா?

திருமுருகன் காந்தி: ஆமாம். 2012-ல் ஐ.நா வெளியிட்ட பெட்ரி அறிக்கையில் (Petrie Report), இனப்படுகொலையின் போது அதன் செயல்பாடுகள் மற்றும் அப்போது அது பெற்றிருந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை அதிகளவு தகவல் நீக்கம் செய்யப்பட்ட பிறகே பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் திருத்தம் செய்யப்படாத முழு ஆவணம் எங்களுக்கு கிடைத்தது. இந்தியாவும் அமெரிக்காவும் இனப்படுகொலைக்கு துணை போனதற்கான தகவல்கள் அந்த அறிக்கையில் உள்ளதை குறிப்பிட்டு நாங்கள் பெரியளவில் பிரச்சாரம் செய்தோம். இது குறித்து, சென்னை, பெங்களூரு, மும்பை, தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அம்பலப்படுத்தினோம்.

அதனையடுத்து, உடனடியாக 2013-ல், ஜெர்மனி பிரேமெனில் இனப்படுகொலையை விசாரிக்க “நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்” கூட்டப்பட்டது. [Permanent Peoples’ Tribunal – நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்பது ஒரு சுதந்திரமான சர்வதேச பொது சமூக கூட்டு ஆகும். இது, தீவிர மற்றும் முறைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை குறித்து விசாரணைகள் நடந்திடும்.] நான் அந்த தீர்ப்பாயத்தில் பங்கேற்று இந்தியாவிற்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை வழங்கினேன். பிரிட்டன், அமெரிக்கா, முக்கியமாக இலங்கைக்கு எதிராக பிற குழுக்களும் ஆதாரங்களை சமர்பித்தன. இதன் தீர்ப்பு, இந்தியா இனப்படுகொலையில் கூட்டு குற்றவாளி என்று அடிக்கோடிட்டு காட்டியது. இச்செய்தியை அதிகமாக பரப்புவதன் மூலம் நீதி கோர முடியும் என்று நாங்கள் இதை பெரிய அளவிலான பிரச்சாரமாக மேற்கொண்டோம்.

அப்போது தான் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு குறித்து முதன்முறையாக பரவலாக தெரிய வந்தது. அதற்கான எதிர்ப்பையும் இந்தியா சந்தித்தது. அப்போதிருந்து தான் நாங்கள் இந்திய அரசினால் குறி வைக்கப்படுகிறோம் என்று நினைக்கிறேன். அது முதல், என் மீதும் இயக்கத்தின் மீதுமான தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

ரெஜி: இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு உள்ளதை அம்பலப்படுத்திய பிறகு உங்கள் மீதான தாக்குதல்கள் எந்த முறைகளில் இருந்தன?

திருமுருகன் காந்தி: அவை 2013 போராட்டங்களுக்கு பிறகு நடந்தது. 2013-ல் மாணவர் போராட்டம் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரிதாக வெடித்தது. அதில், இலங்கை அரசை இனப்படுகொலை குற்றத்திற்காக விசாரிக்க வேண்டும்; முன்னதாக ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட போர் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதாக கருதிடக்கூடாது போன்ற கோரிக்கைகளை வைத்து போராடினர். அதில் நானும் பங்கெடுத்தேன். மே பதினேழு இயக்கமும் முழுமையாக இப்போராட்டத்தில் பங்கேற்றது. அப்போது, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி கே.ராமானுஜம் இந்த போராட்டத்தை “ஒருங்கிணைத்தது” நீங்கள் தானா என்று எங்களை கேட்டார். இதன்பிறகே அரசு எங்கள் மீதான கடும் ஒடுக்குமுறைகளை ஏவியது. எங்கள் நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்திடுவார்கள். நாங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதும் எங்களுக்கு தெரிந்திருந்தது.

இதை மீறியும், நாங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தோம். 201-5ல் நான் ஜெனிவா ஐ.நா மனித உரிமை மன்றத்தில் பேசியபோது, “2009ல் நடைபெற்றது போர் குற்றம் மட்டுமே அல்ல, அது ஒரு இனப்படுகொலை” என்று பதிவு செய்தேன். மேலும், எந்த நிவாரணமானாலும் சுயநிர்ணய உரிமை என்பது முக்கியமான அடிப்படை மனித உரிமையாக கருதப்பட வேண்டும் என்றும் நான் பேசி உள்ளேன். போர் குற்றம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்று குற்றங்கள் விரிவாக இருக்கும்பட்சத்தில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை கோருவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும். பின்னர், ஒரு சுதந்திர நிபுணரால் ஐ.நா பொது அவையில் இது வலியுறுத்தப்பட்டது. [அக்டோபர் 2014ல், ஐ.நா சுதந்திர நிபுணர் ஆல்ப்ரெட்-மௌரிஸ் டே சாயஸ் சுயநிர்ணயம் என்பது “ஐ.நா சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள விதிமுறையாக” நின்றுவிடாமல், அது “மோதலை தடுத்திடும் யுக்தியாகவும், நிலையான அமைதியை உறுதி செய்திடுவதாகவும்” அமைய வேண்டும் என்று ஐ.நா பொது அவையில் சமர்ப்பித்தார்.] பல்வேறு சமூகங்களின் பிரேதேசங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறும் (இந்திய) ஒன்றிய அரசு, சுயநிர்ணய உரிமையை கண்டு தான் அச்சப்படுகிறது.

ரெஜி: உங்கள் மீதும், மே பதினேழு இயக்கத்தின் மீதும் கடுமையான ஒடுக்குமுறை எப்போது தொடங்கியது?

திருமுருகன் காந்தி: 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகே அது பெரியளவில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னையின் சில பகுதிகளில் காவல் துறை நடத்திய  வன்முறைகள் குறித்து உண்மை கண்டறியும் ஆய்வு மேற்கொண்டோம். பல பகுதிகளில், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களான மீனவ சமூகங்களில், காவல் துறையினர் மூர்கத்தனமாக தாக்குதல் நடத்தி அப்பகுதி இளைஞர்கள் பலரை கைது செய்தனர். நாங்கள் எங்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு வழக்குகளை தொடர்ந்தோம். அதில், ஒரு சிலர் பிணை கிடைத்து வெளியே வந்தனர். காவல்துறை வன்முறை குறித்து ஆய்வு செய்திட நான்கு ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்ட நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழு இதுவரை தனது அறிக்கையை வெளியிடவில்லை. காவல்துறை வன்முறையை குறித்து நாங்கள் பேசியதை அடுத்து, எங்கள் மீதான அரசின் அணுகுமுறை மாறியது என்று நினைக்கிறேன். இனப்படுகொலை நிகழ்ந்தது முதல் ஆண்டுதோறும் நாங்கள் நினைவேந்தலை நடத்தி வருகிறோம். அந்த ஆண்டு (2017) மே 29ம் தேதியன்று மெழுவர்த்தி ஏந்தி இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தியதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.

எனக்கு பிணை கிடைத்த பிறகு வழக்கமாக செயல்பட்டு வந்தோம். 2018ல் ஜெனீவா ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அப்போது நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய படுகொலை குறித்து நான் பேசினேன். பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மன் அரசியல்வாதிகளிடமும் கருத்து முரண்படுபவர்களை ஒடுக்கிட இந்திய அரசு பயன்படுத்திடும் கடுமையான சட்டங்கள் குறித்தும் நான் பேசினேன்.

ஆகத்து 9, 2018 அன்று, நான் பெங்களூரில் தரை இறங்கியபோது, தமிழ்நாடு காவல்துறை என்னை கைது செய்தது. கைது செய்ததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. காவல்துறை விசாரணையின் போது எனது கடவுச்சொற்களை (password) தரும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். எனது அனைத்து கருவிகளின் முழு கட்டுப்பாடும் அவர்களிடம் இருந்தது. எனது கைப்பேசியில் ஊடுருவ வேண்டிய தேவையே அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

சென்னையில் உள்ள கீழமை நீதி மன்றத்திற்கு கொண்டு சென்று தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். எனது வழக்கறிஞர் என்னுடன் இல்லாத சூழலில் ஐ.நாவில் நான் பேசிய காணொளியை வழக்கிற்கான ஆதாரமாக காவல்துறை சமர்ப்பித்தது. 24 மணி நேரத்தில் வழக்கறிஞருடன் வரும்படி என்னை நீதிபதி பணித்தார். மறுநாள், ஐநா போன்ற சனநாயக மன்றத்தில் பேசியதற்கு அதிகாரப் பாதுகாப்பு (Diplomatic Immunity) உள்ளதாக தெரிவித்து காவல்துறை விசாரணைக்கு பிறகு என்னை விடுவிக்கும்படி ஆணையிட்டார்.

காவல்துறையின் இந்த விசாரணைக்கு பிறகு என்னை உடனே மீண்டும் கைது செய்தார்கள். இம்முறை இரு வேறு தேச துரோக வழக்குகளை என்மீது பதிந்தனர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக ஒரு வழக்கும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக மற்றொரு வழக்கையும் பதிவு செய்தனர். பத்து நாட்கள் நீதிமன்ற காவலுக்கு பிறகு கடவுசீட்டு (passport) தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டேன். நீதிமன்றம் சென்ற பிறகே உபா (UAPA) வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை உணர்ந்தேன். எனது புன்னகையை கட்டுப்படுத்தி கொண்டு நீதிபதியிடம் நான் பேசினேன். ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் தேச துரோக சட்டம், உபா, என்.எஸ்.ஏ (NSA) குறித்து பேசி நான் திரும்பியுள்ளேன். “தயவு செய்து என்னை கைது செய்யுங்கள். நான் பேசியது உண்மையென உலகிற்கு நிரூபித்திட இதைவிட சரியான வழி இல்லை.” என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டேன்.

ரெஜி: சிறையில் நீங்கள் எவ்வாறு நடத்தப்பட்டீர்கள்?

திருமுருகன் காந்தி: நான் தனியான, வேறு ஒருவரும் இல்லாத, சிறைப்பகுதியில் அடைக்கப்பட்டிருந்தேன். உணவை மட்டும் வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். வேறு யாரையும் காண வாய்ப்பே இருக்காது. சுமார் 50 நாட்களாக நீரிழப்பு (Dehydration) மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டேன். இது குறித்து நாள்தோறும் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அப்படியான ஒருநாளில் மயங்கி விழுந்த போது இரவில் என்னை வெளியே இருந்த தரைக்கு இழுத்து சென்றனர். இறுதியாக, வார்டன் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த மொத்த நிகழ்வின் போதும் நான் அரை-மயக்கத்தில் இருந்தேன். மருத்துவர் சில மருந்துகளை பரிந்துரைத்தார். அன்று இரவே யாருக்கும் தெரியாமல் மீண்டும் என்னை சிறை வளாகத்திற்கு, முழு நினைவு வருவதற்கு முன்பே கொண்டு வந்தனர். அவர்களிடமிருந்த மருந்தை கொடுப்பது குறித்தோ, இல்லை மீண்டும் மருத்துவமனைக்கும் அழைத்து செல்வது குறித்தோ அவர்கள் கவலைப்படவே இல்லை. நான் எழுதிய கடிதங்களை, வழங்கறிஞர்களுக்கு உட்பட, யாரிடமும் அவர்கள் கொண்டு சேர்க்கவில்லை. அடிப்படையில் தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். 56 நாட்களுக்கு பிறகு பிணை கிடைத்தது.

ரெஜி: எதற்காக உங்கள் மீது உபா வழக்கு தொடரப்பட்டது?

திருமுருகன் காந்தி: நான் பிணையில் வெளியே வந்தவுடன் எனக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒருங்கிணைத்த ஒவ்வொரு போராட்டத்தையும் எடுத்து எனக்கு எதிராக தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்தனர். 2014ல் காசா (பாலஸ்தீன்) போர் நடைபெற்ற போது பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி நுங்கம்பாக்கத்தில் நடத்திய போராட்டத்திற்காக உபா (UAPA) வழக்கு பதிவு செய்தனர். ஒரு இனப்படுகொலையை எதிர்த்து கேள்வியெழுப்பிடாமல் இருந்தால் அது மற்றொரு இடத்தில் இனப்படுகொலை நிகழ வழிவகை செய்திடும். இஸ்ரேலை தண்டித்திடாமல் இனப்படுகொலை நடத்திட அனுமதித்தால், அதேபோன்ற இனப்படுகொலை இங்கே நடந்தால் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாமல் சென்றிடும் என்று நான் போராட்டத்தில் பேசினேன். காவல்துறையினர் அதை தவறாக திரித்து வழக்கை பதிந்தனர். மேலும், போராட்டம் ஜூலை 2017ல் நடந்ததாக பதிவு செய்திருந்தனர்.

ஜூலை 2017ல் நான் புழல் சிறையில் இருந்தேன். அப்படியிருக்க, போராட்டத்தை எப்படி நடத்தியிருக்க முடியும் என்று எனது வழக்கறிஞர் வாதாடினார். தேதி தவறானதற்கு “எழுத்தர் பிழை” காரணம் என்று காவல்துறை பதில் அளித்தது. ஆனால், 2017 என்ற தேதியே முதல் தகவல் அறிக்கை தொடங்கி அனைத்து ஆவணங்களிலும் உள்ளது. “எழுத்தர் பிழை” எப்படி இத்தனை இடங்களிலும் வரும்? பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவளித்து பேசுவது மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல, அது இந்திய வெளியுறவு கொள்கையின் முக்கிய அங்கமாகவும் உள்ளது என்று எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

ஆனால், எனக்கு எதிரான வழக்குகள் குவிந்து கொண்டே சென்றது. அனைத்து பொய் வழக்குகள் மீதும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோதமாக ஒன்றுக்கூடியது, வெறுப்பு பேச்சு என்றும் சில, சமூகங்களை தூண்டுவதாக என பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றதற்காக எட்டு புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது, என் மீது 46 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக எனது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரெஜி: உங்கள் பெரும்பான்மை நேரம் நீதி மன்ற விசாரணைகளில் கழிந்திடும் நிலையில் உங்களால் மே பதினேழு இயக்கத்தின் பணிகளை தொடர முடிகிறதா?

திருமுருகன் காந்தி: நீதிமன்ற வழக்கு விசாரணைகள் வாரத்தில் ஐந்து நாட்களை எடுத்து கொள்கின்றன. ஆனாலும், நான் என்னால் இயன்றளவு செயல்பட முயற்சி செய்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இயக்கத்தின் பணிகள் செய்வதிலும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். மே பதினேழு நிகழ்வுகள் அனைத்திற்கும் காவல்துறை அனுமதி மறுக்கிறது. அதனால், பேரணிகள் பொது கூட்டங்கள் என்று எதையும் நடத்திட முடியாத சூழலில் உள்ளோம்.

மிக ஆபத்தாக, மற்ற இயக்க தோழர்கள் பேரணிகள் நடத்திட திட்டமிட்டால், என்னை அழைக்க மாட்டோம் என்று பல சமயங்களில் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி உறுதி மொழி எழுதி பெறுவதாக தெரிவிக்கின்றனர். தமிழ் புலிகள் கட்சி எனும் ஒரு தலித்திய கட்சி, தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் ஒருங்கிணைத்திருந்த நிகழ்ச்சியில் என்னை பேச அனுமதிக்க மாட்டோம் என்று கட்டாயப்படுத்தி காவல்துறை எழுதி வாங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அம்பேத்கரியர்கள் ஒன்றிணைந்து கோயம்பத்தூரில் நடத்திய நீலச்சட்டை பேரணியிலும் அதையே செய்தார்கள். இஸ்லாமியர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரதிநிதித்துவம் செய்திடும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடத்திய நிகழ்வில் அதே போன்ற வாக்குறுதியில் கையெழுத்திடுமாறு காவல்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. அக்கட்சியினர் அதை ஏற்கமறுத்து நீதிமன்றம் சென்றனர். அந்த அமைப்பை சாராத எவரும் அந்நிகழ்வில் பேச அனுமதித்திட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக, என்னை அவர்கள் கட்சி பத்திரிகையின் ஆசிரியராக நியமித்த பிறகு நான் அங்கு பேசினேன்.

ரெஜி: இதனால் உங்கள் சொந்த வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது?

திருமுருகன் காந்தி: அது மிகவும் கடினமாகவே இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு முறை எனது வீட்டை மாற்ற வேண்டி இருந்தது. நெடுநாட்களாக தெரிந்தவர்கள் முதற்கொண்டு பலர் எனக்கு வீடு வாடகைக்கு தர மறுத்துவிட்டனர். நான் ஒரு மென்பொருள் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வந்தேன். எனக்கு அலுவலக இடமளித்த வயது முதிர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் இரவு நேரங்களில் அழைப்பதுமாக இருந்ததால் அவர்கள் எங்களை வெளியேற்றிவிட்டனர். வேறு யாரும் வாடகைக்கு இடம் தர மறுத்த காரணத்தால் நிறுவனத்தை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

எனது மனைவியும் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. அவர் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்த கல்லூரியில் குறிவைக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளானார். அவர் வேலையை ராஜினாமா செய்திட நிர்பந்திக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் பல இடங்களில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அனைத்து தகுதியும் திறமையும் பெற்றிருந்தும் எந்த கல்லூரியும் அவரை பணியில் அமர்த்திட முன்வரவில்லை.

குறிப்பாக, எனது மகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படிக்கும் அவள் ட்யூஷன் மையத்திற்கு காவல் துறை சென்று அவளை குறித்து விசாரித்துள்ளனர். அவள் பள்ளியிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆசிரியர்கள் அவளை தவறாக நடத்துவது மற்றும் காரணமே இல்லாமல் அடிக்கடி தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப்படுவது போன்றவையும் நடைபெற்றன. அவள் வீட்டிற்கு சோகமாக வருவாள். மனச்சோர்வு அடைந்திருந்தாள். காவல்துறையினர் அவள் பள்ளிக்கு சென்று விசாரணை செய்ததால் பள்ளி நிர்வாகத்தினர் நெருக்கடிகளை தருவதாக பின்னர் தெரிய வந்தது. இதன் காரணமாக பள்ளியை மாற்ற வேண்டி இருந்தது. இவற்றை எதிர்கொள்ள அவள் வயதிற்கு மிகவும் கடினமாக தான் இருந்தது.

இதே போன்று இயக்க தோழர்களுக்கும் அவர்கள் செய்கிறார்கள். உள்ளூரில் அவர்கள் நற்பெயருக்கு காவல்துறையினர் களங்கம் கற்பிக்கிறார்கள். அக்கம்பக்கம் வீடுகளுக்கு சென்று தோழர்களின் புகைப்படங்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை  காட்டி அவர் தீவிரவாத வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக பரப்பி நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இது சங்கடமான சூழலை ஏற்படுத்துகிறது.

ரெஜி: நீங்கள் தனிநபராக தணிக்கையை எதிர்கொள்கிறீர்களா இல்லை, மே 17 இயக்கம் முழுவதுமே தணிக்கையை எதிர்கொள்கிறதா?

திருமுருகன் காந்தி: தணிக்கை, குறிப்பாக இணைய தணிக்கை, இயல்பாகிவிட்டது. மே பதினேழு இயக்கத்தின் “யூடியூப்” கணக்கு இரண்டு முறை முடக்கப்பட்டுள்ளது. 2017, 2018 மற்றும் 2020 என மூன்று முறை எனது முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை கேட்டால், “எங்கள் சமூக விதிமுறைகளை மீறி உள்ளீர்கள்.” என்ற பொதுவான பதிலளித்து மேலும் விளக்கம் தர மறுத்துவிடுகிறார்கள். கடந்த சனவரி மாதம் விவசாயி போராட்டத்தை ஆதரித்த பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் அனைவரின் கணக்கை ட்விட்டர் முடக்கியபோது எனது கணக்கும் முடக்கப்பட்டது. பின்னர், மற்றவர்கள் கணக்குகளுடன் சேர்ந்து எனது கணக்கும் அனுமதிக்கப்பட்டது.

ஊடக நிறுவனங்களின் தன்னிச்சையான தணிக்கையையும் நம்மால் கவனிக்க முடிகிறது. 2013, 2014களில் இலங்கை குறித்தான விவாத குழுக்களில் எங்களை தொடர்ந்து அழைப்பார்கள். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அது முற்றிலும் நின்று போனது. தந்தி தொலைக்காட்சி கடந்த 7 ஆண்டுகளாக அழைப்பதில்லை. புதிய தலைமுறை, நியூஸ் 7 தொலைக்காட்சிகளும் கடந்த 3 ஆண்டுகளாக அழைப்பதில்லை. பல்வேறு கட்டங்களில், இந்த தொலைக்காட்சிகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்னிடம் பெற்ற பேட்டிகளை இவர்கள் ஒளிபரப்பவில்லை. இவையனைத்தும், இந்த அரசு எங்களை குறிவைத்த நேரம் முதல், எங்கள் மீது ஒரு திரைமறைவு தணிக்கை நடத்துவதை எளிமையாக எங்களுக்கு உணர்த்துகிறது.

ரெஜி: அதன் பிறகும் மே பதினேழு இயக்கம் வெற்றி கண்டுள்ளதா?

திருமுருகன் காந்தி: நான் அப்படியாக தான் கருதுகிறேன். 2009 நடைபெற்றதை குறித்து தமிழ் மக்கள் கூடுதல் விழுப்புணர்வு அடைந்துள்ளனர். அவர்கள், சூழலியல் பிரச்சனைகள், சனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மிக வீரியமாக செயல்படுகின்றனர். கண்டிப்பாக மாநிலத்தில் உள்ள இன்னும் பல அமைப்புகள் இதை நோக்கி செயல்படுகிறார்கள். தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் அதன் நிறுவனர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களும் பெகாசஸ் ஊடுருவல் தாக்குதலுக்கு உள்ளானவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆனால், மே பதினேழு இயக்கம் தன் செயல்பாட்டில் மிக சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். கடந்த சில பத்தாண்டுகளாக, திராவிட பெருங்கட்சிகள் தங்கள் சித்தாந்த கருத்தியலில் இருந்து வழுவி வருவதை கண்டு வருகிறோம். தற்போது அவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. திசம்பர் 2018-ல் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி போன்ற போராட்டங்கள் தாக்கத்தை ஏற்பத்தியுள்ளதாக நான் கருதுகிறேன். நாங்கள் தமிழ்நாட்டின் அனைத்து பெரியாரிய அமைப்பினர்களையும் கருஞ்சட்டை பேரணிக்கு திருச்சிராப்பள்ளியில் ஒன்று திரட்டி, பெரியாரியவாதிகள் நவ தாராளவாதம் மற்றும் இந்துத்துவத்திற்கு எதிராக போராடாமல் ஓயமாட்டோம் என்று காட்டினோம்.

அதற்கு முன், வலதுசாரிகள் பெரியார் சிலைகளை தாக்கிய போது திமுக பெரும்பாலும் மௌனமாக இருந்தது. திருச்சியில் திரண்ட கூட்டத்தை கண்ட பிறகு அவர்களும் வெளிப்படையாக பேச தொடங்கினார்கள். கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தி திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் என எதற்கும் எதிர்ப்பு தெரிவித்திடாத அந்த கட்சி இன்று இத்திட்டங்களுக்கு எதிராக நிற்கிறது. கடந்த பத்தாண்டுகளாக ஈழ பிரச்சனையை புறக்கணித்து வந்த பெரிய திராவிட கட்சிகள் இன்று அதிகமான தமிழ் நாட்டு மக்கள் ஈழத்திற்கான நீதியை கோருவதை காண்கிறார்கள். அந்த வகையில், ஆமாம், மே பதினேழு இயக்கம் வெற்றி அடைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

ரெஜி: மே பதினேழு இயக்கம் தேர்தல் அரசியலில் இருந்து விலகி நிற்க முயற்சிக்கிறது என்று புரிந்து கொள்ளலாமா?

திருமுருகன் காந்தி: அப்படியாக இருக்க வேண்டியதில்லை. தில்லி கட்சிகளை போன்று நவ தாரளாவாத பொருளாதாரத்தை ஆதரிக்கும் திராவிட பெருங்கட்சிகளை குறித்து நாங்கள் கவனமாக உள்ளோம். மோடியின் ஆட்சி வெறும் இந்துத்துவ மதவாதமாக அல்லது பார்ப்பனிய பெரும்பான்மைவாதமாக மட்டுமே இல்லை. அது நவ தாராளவாதத்துடன் பின்னி பிணைந்துள்ளது. இதன் காரணமாகவே சுரங்கங்கள் அமைக்க ஆதிவாசி மக்கள் இடப்பெயர்வு நடப்பதும்; துறைமுகங்கள் உருவாக்கிட பாரம்பரிய மீனவ சமூகங்கள் சார்ந்திருக்கும் கடலோரம் மற்றும் கடற்புறங்கள் அழிக்கப்படுவதும் நடைபெறுகிறது. மோடி அரசின் இந்த அம்சங்களை எதிர்த்து திமுக மற்றும் அதிமுக நிற்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், மற்ற அமைப்புகள் நிற்கும். ஆகவே, நான் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் பல சிறு கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தலின் போது பிரச்சாரம் செய்தேன். இக்கட்சிகள் விளிம்புநிலை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்வதோடு நவ தாராளாரவாதத்தையும் எதிர்க்கின்றன. 2019 தேர்தலிலும் இது போன்ற பல  கட்சிகளுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்தேன். பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்னை பிரச்சாரம் செய்ய அழைத்தாலும் நான் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் பொதுவாக மறுத்து விடுகிறது. உதாரணமாக, 2019ல் நான் தொல்.திருமாவளவன் அவர்களுக்காக சிதம்பரத்தில் பிரச்சாரம் செய்திட திட்டமிட்டிருந்தேன். அவர் பதிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவராக இருப்பினும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், தேர்தல் ஆணையம் எனக்கு அனுமதி வழங்கிட மறுத்துவிட்டது. சனநாயகம் நசுக்கப்படும் இந்திய நிறுவன கட்டமைப்புகளில் இதுவும் ஒரு அம்சமாகும்.

ஆனால், அவர்களும் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த பெகாசஸ் தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது. சனநாயக நிறுவனங்கள் அனைத்தும் தோல்வியுற்ற போதிலும் நாம் செய்திடும் பணிகளை கண்டு அவர்கள் அச்சம் கொள்கின்றனர். நம்மை உளவு பார்ப்பதற்கு இதைவிட வேறு காரணம் இருக்க முடியாது. அப்படியென்றால், நாம் திறம்பட செயலாற்றுகிறோம். நாம் இந்தியாவில் சனநாயகத்தை மீட்டெடுத்து சமூக நீதியை வென்றிடுவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

பெகாசஸை பயன்படுத்தியது மோடி அரசு மே 17 இயக்கத்தை கண்டு பயப்படுகிறது என்பதை காட்டுகிறது: திருமுருகன் காந்தி” என்ற தலைப்பில், தி கேரவன் இணையத்தளத்தில் கடந்த சூலை 27 அன்று வெளியான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »