மாநில உரிமையை பறிக்கும் VBSA மசோதா – தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆபத்து

கல்வித்துறையின் மீதான மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலும் குறைத்து, முழு அதிகாரத்தையும் ஒன்றிய அரசிடம் குவிக்கும் முயற்சியே ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ (VBSA) திட்டம். 1976-ல் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு தள்ளியபோதே மாநிலங்கள் பெரும் அதிகாரங்களை இழந்தன. இப்போது எஞ்சியிருக்கும் பல்கலைக்கழக நிர்வாக உரிமையையும் முற்றிலுமாக பறிக்கும் விதத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இத்திட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களிலும் எதிர்ப்பு அலைகள் எழுந்தது. இதனால் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மோடி அரசு அனுப்பி இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டு அரசு இதுகுறித்து இந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இத்திட்டத்தில் உள்ள ஆபத்துகளைப்  பற்றி ஒரு கருத்தரங்கம், மின்துறைப் பொறியாளர் ஐயா சா. காந்தி அவர்களின் தலைமையில் ’தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பு’ சார்பில் நடந்தது. இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களும், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழு முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன் ரெட்டி அவர்களும் இத்திட்டத்தின் ஆபத்தினை விரிவாக எடுத்துரைத்தனர்..

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான UGC, AICTE, NCTE போன்ற பல அமைப்புகளை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக, பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவது, தரம் நிர்ணயிப்பது, அங்கீகாரம் வழங்குவது, நிதி வழங்குவது என அனைத்தும் ஒன்றிய அரசே தீர்மானிக்கும் VBSA நிர்வாகக் குழுவே முடிவெடுப்பதைக் குறித்தும், அதன் மூலமாக ஏற்படப் போகும் பாதிப்பு குறித்தும் VBSA குறித்த முதல் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றி முன்னரே மே 17 இயக்கம் கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரையின் இணைப்பு:

கடுமையான அபராதங்களும் தண்டனை அதிகாரமும்:

UGC சட்டம் 1956-ன் படி, விதிகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது UGC-யால் அதிகபட்சம் ₹1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். 

ஆனால் VBSA-ன் படி, முதல் முறை விதிமீறல் மீறினால் ₹10 லட்சம், 2வது முறையில் ₹30 லட்சம், தொடர்ந்து மீறினால் ₹75 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். பட்டம் வழங்கும் அதிகாரத்தை நிறுத்துதல் மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்றவற்றை செய்யும்.

இங்குதான் ஆபத்து இருக்கிறது. ஏனென்றால் இதில் போலி பல்கலைக்கழகங்கள் மட்டும் சிக்காது. மாநில பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரிகளும்தான் சிக்கும் நிலை ஏற்படும். போலி நிறுவனங்கள் ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாகத்தான் இயங்குகின்றன. அவர்களுக்கு ₹2 கோடி என்றாலும் ₹1,000 என்றாலும் ஒன்றுதான். அவர்கள் பெயரை மாற்றிக்கொண்டு வேறு இடத்தில் தொடங்குவார்கள்.

ஆனால் அரசு கல்லூரிகள் தப்பிக்க முடியாது. உதாரணத்திற்கு, VBSA கூறும், ‘ஆசிரியர் – மாணவர் விகிதம், கட்டிட வசதி, டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை’ போன்ற தரநிலைகளை ஒரு மாநில அரசு,  பணப்பற்றாக்குறையால் பின்பற்றவில்லை என்றால், அதற்கு ₹10 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை அபராதம் விதிக்கும்.

அபராதம் கட்ட முடியாத அரசு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்க முடியாது. கிராமப்புற மாணவர்களுக்காக கல்லூரி கட்டணங்கள் குறைத்துக் கொண்டு, ஓரளவு வசதி குறைவுடன் இயங்கும் பல்கலைக்கழகம் மூடும் அபாயம் ஏற்படும். மாநில அரசு கட்டிய பல்கலைக்கழகங்களை போலி பல்கலைக்கழகங்கள் என்று டெல்லியில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் திட்டமாக VBSA நிர்வாகக் குழு இயங்கும்.

போலிகளை பிடிப்பதற்கு என்று சொல்லிக் கொண்டு, அதன் மாநில அரசு நடத்தும் ஏழை கல்லூரிகளின் கழுத்தில் கத்தி வைக்கப்படும்.

மேலும் மாநில அரசு, சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி விட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது தான் இதுவரையிலான நடைமுறையாக இருக்கிறது. ஆனால் இனி VBSA ஒழுங்குமுறை குழுவுடன் அனுமதி வாங்கிவிட்டு தான் ஆரம்பிக்க முடியும். அப்படியே அனுமதியின்றி பல்கலைக்கழகத்தை மாநில அரசுகள் துவங்கினால் குறைந்தபட்சம் ₹2 கோடி அபராதமும், உடனடியாக மூடும் அதிகாரமும் VBSA -ன் கைக்கு போய் விடும்..

ஒரு ஒழுங்குமுறை அமைப்பின் நம்பகத்தன்மையே அதன் மேல்முறையீட்டு முறை எவ்வளவு நடுநிலையானது என்பதில்தான் உள்ளது. ஆனால் VBSA மசோதாவின் பிரிவு 35-ன்படி, VBSA ஒரு பல்கலைக்கழகத்திற்கு ₹75 லட்சம் அபராதம் விதித்தாலோ, அங்கீகாரத்தை ரத்து செய்தாலோ, அந்த பல்கலைக்கழகம் ஒன்றிய அரசிடம் சென்று தான் முறையிட வேண்டும். தான் நியமித்த ஆணையத்தின் தவறை மோடி அரசு ஒப்புக்கொள்ளுமா? விசாரணையும் அவர்களே, தீர்ப்பும் அவர்களே என்றால், நீதி கிடைக்காத நிலையே ஏற்படும்.

பாதிக்கப்பட்ட மாநில கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே வழி, உயர் நீதிமன்றம் சென்று பல ஆண்டுகள் வழக்காடுவதுதான். சிறு கல்லூரிகளால் அதை செய்ய முடியாது. இறுதியில் VBSA சொல்வதைக் கேட்டு அடங்கிப் போவதை தவிர வேறு வழியில்லை என்கிற நிலை உருவாகும்.

ஒன்றியப் பட்டியல் வரிசை 66 – திருத்தப்பட வேண்டியதன் அவசியம்:

ஒன்றிய அரசு இன்று கல்வியில் தலையிட’ஒன்றியப் பட்டியல் வரிசை 66′ தான் காரணமாக காட்டுகிறது. அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணை, பட்டியல் 1, வரிசை 66 ன்படி, ஒன்றிய அரசின் வேலை “உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் தரத்தை நிர்ணயித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்” மட்டுமே என்கிறது. ஆனால் VBSA திட்டம், வரிசை 66-ல் உள்ள “தர நிர்ணயம்” என்ற வார்த்தையைக் கொண்டு, “நிர்வாகக் கட்டுப்பாடு” முழுவதையும் டெல்லிக்கு எடுத்துச் செல்லப் போகிறது.

புதிய கல்லூரி தொடங்க அனுமதி, அபராதம் விதிப்பது, மூடுவது வரை அனைத்தும் ஒன்றிய ஆணையத்திடம் செல்வதைக் குறிக்கிறது. இது அம்பேத்கர் முன்வைத்த அடிப்படை நோக்கத்திற்கு முற்றிலும் முரணாக செயல்படும். இச்சட்டம் நீக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்த விதி மாநிலங்களின் கல்வி உரிமையை நசுக்கும் ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

உயர்கல்வியின்  முன்னுதாரணங்கள்:

கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாறி 50 ஆண்டுகள் ஆன பிறகும், உலகளாவிய தரவரிசைத் தகவல்களின் படி, உலகின் முதல் 200 இடங்களுக்குள் இடம்பெறும் இந்திய நிறுவனங்களின் தரவரிசை  பல முன்னணி நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கிறது .

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற கூட்டாட்சி நாடுகளில் கூட கல்வி என்பது மாநிலங்களின் உரிமைதான். உதாரணமாக, இங்கிலாந்தின் உயர்கல்வியில் தேசிய அளவில் குறைந்தபட்ச தரநிலைகளை மட்டுமே வகுக்கிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் போன்ற பிராந்தியங்கள் தங்களுக்கான தனித்துவமான பாடத்திட்டத்தையும், நிர்வாக அதிகாரத்தையும் தக்கவைத்துள்ளன. உலகின் முன்னேறிய நாடுகள் எதுவும் உயர்கல்வியை வெறும் கட்டுப்பாட்டால் நடத்துவதில்லை.

ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இலவச பொது உயர்கல்வியை வழங்குகின்றன. அமெரிக்கா அதிக கட்டணம் வசூலித்தாலும் வலுவான கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவி அமைப்பை வைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மாணவர் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டிய பின் கடனை திருப்பிச் செலுத்தும் முறையை பின்பற்றுகின்றன.

அதாவது உலகம் கல்வியை அதிக கட்டுப்பாடுகளால் அணுகுவதில்லை. அதிக முதலீடு, மாணவர் மைய அணுகுமுறை, பல்கலைக்கழக தன்னாட்சி போன்றவை அங்கு உண்டு.. ஆனால் VBSA-வின் அணுகுமுறை இதற்கு நேர் எதிரானது – அதிக கட்டுப்பாடு, குறைந்த முதலீடு, டெல்லி மைய அதிகாரம் மட்டுமே இருக்கிறது.

இந்தியாவில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 2023-ல் சுமார் 33 விழுக்காடு ஆகும். அதாவது, நம்முடைய இளைஞர்களில் இன்னும் மிகப்பெரிய பகுதி உயர்கல்விக்குள் வர வேண்டிய நிலைதான் இருக்கிறது. UNESCO தரவின்படி இந்தியா 2022-ல் GDP-யில் 4.1% மட்டுமே கல்விக்கு செலவிடுகிறது. இது சர்வதேச இலக்கான 4-6%-ன் குறைந்தபட்ச விளிம்பு தான். 1968 கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்த 6% இலக்கை 60 ஆண்டுகளில் இன்னும் எட்டவில்லை. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் போது, அதையெல்லாம் விடுத்து மாநிலங்களுக்கு கட்டுப்பாட்டை மட்டும் அதிகரிப்பது எப்படி தரத்தை உயர்த்தும் என்கிற கேள்வி எழுகிறது.

மாநில பல்கலைக்கழகங்களுக்கு கடுமையான விதிகளை கொண்டு வரும் VBSA- திட்டம், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. அவை தங்கள் விருப்பப்படி மாணவர்களிலிருந்து கட்டணம் வசூலிக்கலாம். இதுவரை UGC கட்டணத்தை கட்டுப்படுத்தியது. இனி அந்த கட்டுப்பாடும் இருக்காது.

அரசு கல்லூரிகளுக்கு ₹75 லட்சம் அபராதம், தனியார் கட்டணக் கொள்ளைக்கு முழு சுதந்திரம் என கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கவே VBSA திட்டம் பயன்படும்.

இவை அனைத்தையும் விட முக்கியமாக, UGC சட்டத்தில் சமூக நீதிக்கான பாதுகாப்பு இருந்தது. ஆனால் VBSA, பல்கலைக்கழகங்களில் SC/ST/OBC இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்காது.  தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு மாதிரிக்கு இது நேரடி அச்சுறுத்தலாக அமையும்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வியை சமூக நீதிக்கான கருவியாக பார்க்கின்றன. முதல் தலைமுறை பட்டதாரிகள், இட ஒதுக்கீடு, பெண் கல்வி, மாநில மொழியில் கல்வி என்று 100 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஒரு மாதிரி இது. இந்த மாதிரியை டெல்லியில் அமர்ந்துகொண்டு ஒரே ஒரு ஆணையம் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

இவ்வளவு ஆபத்துகளை கொண்டு வரப்போகும் VBSA-விற்கு கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, வடமாநிலங்கள் முதற்கொண்டு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. ஆனால் தமிழ்நாடு தவெக அரசு இது குறித்து எதுவும் அறியாதது போல் இருக்கிறது. கல்வியாளர்களும், ஜனநாயக அமைப்புகளும் மட்டுமே எதிர்வினை ஆற்றுகின்றனர். தமிழ்நாடு இது குறித்த ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும். நீட் எதிர்ப்பு தீர்மானம் போன்று சட்டமன்றத்தில் VBSA-விற்கு எதிராகவும் தீர்மானம் இயற்ற வேண்டும்.

VBSA மசோதா என்பது கல்வித்தரத்தை உயர்த்தும் முயற்சி அல்ல; மாநிலங்களின கல்வி அதிகாரத்தை கைப்பற்றும் மோடி அரசின் ஆதிக்க முயற்சி. இதனை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.  ஒன்றியப் பட்டியலில் உள்ள பிரிவு 66 யைத் திருத்த வேண்டும் என்பது தற்காலிக தீர்வு என்றாலும், கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலில் கொண்டு வருவது தான் நிரந்தர தீர்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »