ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்

ஐந்து மாநிலத் தேர்தல்களையே தீர்மானித்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது திருத்தம் அல்ல, திருட்டு என்பது அம்பலமாகியுள்ளது. பாஜக அரசால் திணிக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சக ஆணையர்களை கூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் இன்று ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்துள்ளன.

மக்களின் வாக்கு தான் ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த வாக்கையே பறிக்கும் வேலையை தேர்தல் ஆணையம் செய்தால், அது ஆணையமா? இல்லை பாஜகவின் கிளை அலுவலகமா? என்ற கேள்வி இன்று ஒவ்வொரு ஜனநாயகவாதியின் மனதிலும் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு துணைதேர்தல் ஆணையர்களைக் கொண்ட மூன்று நபர் அமைப்பு. எந்த முடிவும் பெரும்பான்மை அடிப்படையில் தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தங்களிடம் கேட்காமலேயே பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரண்டு ஆணையர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி தலைமை அலுவலக அதிகாரிகள், ஆணையத்தின் பெயரில் தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே அனுப்புவதாகவும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

SIR-ல் நடத்தப்பட்ட புதிய வாக்காளர் சேர்க்கை, இறந்தவர் பெயர்கள் நீக்கம், விண்ணப்ப படிவம் 6 – ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலமாக 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இம்மாற்றங்கள் யாவும் தங்களுக்கு தெரிவிக்கப்படாமல் முடிவு எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், அமைச்சரவை செயலாளருக்கு கடந்த 10 மாதங்களில் 14 முறை கடிதம் எழுதியுள்ளனர். இவற்றை நேரடியாக ஆய்வு செய்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இவர்கள் இருவரும் முதல் குற்றச்சாட்டாக, டெல்லியின் மையப்படுத்தலை குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலையும் அந்தந்த தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியே (ERO) கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் கடந்த ஓராண்டாக ERONet, ECINet தளங்களில் ERO-க்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டது. SIR -ன் தரவுகள் அனைத்தும் டெல்லியில் குவிக்கப்பட்டதால் தங்கள் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு அதன் சொந்த தொழில்நுட்ப பிரிவுக்குள்ளேயே சிதைக்கப்பட்டதாக மாநில தேர்தல் அதிகாரிகள் முறையிட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த குற்றச்சாட்டாக, ‘புதிய வாக்காளர் படிவம் 6’-ல் ஜூலை மாதம் முதல் புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டன. இதற்கு முன் இல்லாத கேள்விகளாக, விண்ணப்பதாரரின் பெற்றோர் கடந்த SIR வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்களா என்று புதிதாக கேட்கப்பட்டது. ‘வாக்காளர் பதிவு சட்ட விதி’களைத் திருத்தாமல் இப்படியான கேள்விகள் படிவத்தில் இருப்பது சட்டவிரோதம் என ஜோஷியும், சந்துவும் எச்சரித்தும், அந்த கேள்வி படிவத்தில் இருந்து நீக்கப்படாமலே SIR திருத்தம் நடந்தது.

மேலும், மேற்கு வங்கத்தில் நடந்த முறைகேட்டையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். SIR-ல் வயது, பெயர் உள்ளிட்ட உறவு முறை போன்ற (தர்க்க ரீதியான முரண்பாடு) சந்தேகத்தினால் 60 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அவர்களை நீக்கிய விதம் சரியில்லை என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.

அதன் அடிப்படையில் பிப்ரவரி 2026-ல் இந்த பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 2026-ல்  தீர்ப்பாயத்தில், 38 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில்  22.21 லட்சம் வழக்குகள், நீக்கப்பட்டவர்கள் தங்களை சேர்க்கக் கோரியது எனவும், 16.10 லட்சம் வழக்குகள், சேர்த்தவர்களை நீக்கக் கோரியது எனவும் ஆணையம்  சொன்னது. இதில் தான் குளறுபடி என இரு ஆணையர்களும் கேள்வி எழுப்பினர்.

தீர்ப்பாய முடிவின்படி சேர்க்கப்பட்ட 16.10 லட்சம் பேரை நீக்கக்கோரி, மேல் முறையீடு செய்ய ஆணையம் சார்பில் யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது? என்கிற சந்தேகத்தை, ஆணையர் சந்து  முன்வைக்கின்றார். இது குறித்து தனக்கோ, ஜோஷிக்கோ, வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கோ கூட தெரிவிக்கப்படவில்லை என பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்கம் மட்டுமல்ல, கோவாவிலும் டிஜிட்டல் தளத்தினால் குளறுபடி நடந்திருக்கிறது.  ஜனவரி 29, 2026 அன்று பெயர், உறவு உள்ளிட்ட  சந்தேகத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் வாக்காளர்கள்  நீக்கப்பட்டனர். அந்த வாக்காளர்கள் ஆவணம் கொடுத்து சேர்த்துக் கொள்ளப்படலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரித்ததில், 97 பேர் தகுதியான வாக்காளர்கள் என தெரிந்தது. ஆனால் அவர்களை மீண்டும் சேர்க்க மென்பொருளில் வசதி (revert option) இல்லை.

பிப் 11 முதல் 17 வரை, கோவா தலைமை தேர்தல் அதிகாரி, டெல்லியில் உள்ள துணை தேர்தல் ஆணையருக்கு 8 முறை கடிதம் எழுதி அந்த வசதியை கேட்டார். IT பிரிவு தலைவர் சீமா கன்னாவுக்கும் நகல் அனுப்பப்பட்டது. ஆனாலும் பதில் வரவில்லை, வசதியும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தகுதியான 97 பேர் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இப்படியாக தொடர்ந்த முறைகேடுகளால்  தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை அதன் தொழில்நுட்பம், அதன் கூட்டு முடிவு முறை, வெளிப்படைத்தன்மை என அனைத்திலுமே கேள்விக்குறியாகி இருக்கிறது. இரு ஆணையர்களும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியவை. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரினால், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவமும் தகர்க்கப்பட்டு, பல லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் மதிப்பிழந்திருக்கின்றன.

இந்த ஞானேஷ் குமாரை பல மாநிலத் தேர்தல்கள் நெருங்குவதற்கு முன்னர், தேர்ந்தெடுத்ததில் பல சர்ச்சைகள் நீடித்தன. உச்சநீதிமன்றம் மார்ச் 2, 2023ல், தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் பாஜக அரசாங்கம், டிசம்பர் 2023-ல் புதிய சட்டத்தை மக்களவையில், தலைமை நீதிபதி கொண்ட குழுவை நீக்கி விட்டு, பிரதமர் தேர்ந்தெடுக்கும் அமைச்சரை சேர்த்து புதிய சட்டத்தை அமலாக்கியது. இதனால் 3 பேரில் 2 பேர் அரசு தரப்பானார்கள்.

தேர்ந்தெடுப்பு குழுவின் பெரும்பான்மை அடிப்படையில் தான் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், பாஜக அரசு விரும்பிய நபரான ஞானேஷ் குமார் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசு சார்பற்று இயங்க வேண்டிய ஜனநாயக நிறுவனம் மோடி அரசின் சார்பில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.

தேர்தல்களுக்கு முன்பே, ஞானேஷ் குமாரினால் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட SIR – தீவிர வாக்காளர் திருத்தம் ஒரு மோசடி என்று மாநில கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். SIR குறிப்பிட்ட சமூக வாக்காளர்களான முஸ்லிம்கள், தலித்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை நீக்கவே பயன்படுகிறது. வாக்காளர்களை சேர்ப்பதற்கு அல்ல என  மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கே சென்று முறையிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தினால்  ‘நீதி கதவுகளுக்குப் பின்னால் அழுது கொண்டிருக்கிறது’ என்று வலியுடன் பேசினார். ஆனால் எவையும் கண்டு கொள்ளப்படவில்லை.

SIR என்பது இஸ்லாமியர்களை குறிவைத்து கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA-NRC) மறுவடிவமே என மே 17 இயக்கம் அப்போதே கூறியது. அதையே தான், வாக்காளர் படிவத்தில், விண்ணப்பதாரரின் பெற்றோர்களின் வாக்காளர் அடையாளத்தையும் நிரூபிக்கும்படி கேட்கப்பட்டது தங்களுக்கு விருப்பமில்லாமல் நடந்தது என்று இரு ஆணையர்களும் கூறியுள்ளனர். இவர்களின் கூற்றுகள் மூலம் மே 17 இயக்கம் முன்வைத்த குற்றச்சாட்டு இப்போது அம்பலமாகியிருக்கிறது.

இதற்காகவே நவம்பர் 10, 2025-ல், “பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் SIR சதியிலிருந்து நமது வாக்குரிமையை பாதுகாத்திடுவோம்” என – தேர்தல் ஆணைய அலுவலக முற்றுகைப் போராட்டத்தை, ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து மே 17 இயக்கம் நடத்தியது.

SIR நடைமுறை கொண்டு வரப்பட்ட பொழுதே, SIR வாக்காளர் திருத்த கெடுபிடிகள் கட்சிகள் சார்ந்தது அல்ல, குடிமக்களின் அடிப்படை உரிமை சார்ந்தது, இதனை அனைத்துக் கட்சிகளும் வலிமையாக எதிர்க்க வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்தியது. ஆனால் கட்சிகள் இதனை எளிமையாகக் கடந்தன. இன்று இரு தேர்தல் ஆணையர்களே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளை அம்பலப்படுத்தியுள்ளனர். 

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்த இந்திய தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இன்னும் பதவியில் இருப்பது ஆபத்தானது. பாஜகவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்தப் பதவிக்கு தகுதியானவர் இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்பது தான் அனைத்து கட்சிகளின், ஜனநாயக அமைப்புகளின் கண்டனங்களாக எழுந்துள்ளன.

தேர்தல் ஆணையத்தின் இந்த மோசடிகளை எதிர்த்து அனைவரும் வலிமையான குரலை எழுப்ப வேண்டும். வாக்காளர் உரிமை பறிப்பு என்பது மன்னிக்க முடியாத செயல். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் மோடி அரசின் சட்டத் திருத்தமும் நீக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, மூவர் குழுவில் பிரதமர் தேர்ந்தெடுக்கும் அமைச்சர் நீக்கப்பட்டு, இந்திய தலைமை நீதிபதி சேர்க்கப்பட வேண்டும். இந்த SIR திருத்த முறைகேடு மூலமாக நடத்தப்பட்ட தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். இது SIR மூலம் ஏற்பட்ட குளறுபடி தேர்தல்களுக்கு  தீர்வாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »