
மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், உயர்மட்ட அதிகாரிகள், தனியார்மயமாக்கல், ஸ்மார்ட் மீட்டர், அதிக விலையில் கொள்முதல் குறித்து விரிவான ஊடக சந்திப்பை கடந்த அக்டோபர் 13, 2026 அன்று மே 17 இயக்கம் நடத்தியது. இதில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை:
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அக்டோபர் (2026) மாதத்தினுடைய தேவைக்காக பொதுச் சந்தையில் 35 ரூபாயிலிருந்து 37 ரூபாய் என்கின்ற அளவிலே ஒரு யூனிட் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்குவதாக செய்தி வெளிவந்திருக்கிறது. அமைச்சர் அவர்களும் இது குறித்து பேசியிருக்கிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. ஏனென்றால் நாம் இதுவரை 35 ரூபாய்க்கோ 37 ரூபாய்க்கோ ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கியதில்லை. நமது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தினுடைய விலை 4 ரூபாயிலிருந்து 6 ரூபாய் அளவில் இருக்கக்கூடிய சமயத்தில், பொதுச் சந்தையில் 35 ரூபாய்க்கு அல்லது 37 ரூபாய்க்கு வாங்கினால், தமிழ்நாடு மின்சார வாரியம் பெரிய அளவில் நட்டத்தை சந்திக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அப்படி ஒரு நஷ்டத்தை அவர்கள் சந்தித்தால், அது நாளைக்கு பொதுமக்கள் தலையில் தான் வந்து விழும். பொதுமக்கள் தான் அதிக அளவில் மின்சாரக் கட்டணத்தை கட்ட வேண்டிய நிலைமை வரும். ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வு நடந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில், நாம் இன்றைக்கு பெரிய நெருக்கடியில் இருக்கக்கூடிய சமயத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் 35 அல்லது 37 ரூபாய் என்கின்ற அளவில் மின்சாரத்தை கொள்முதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை தவெக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அமைச்சர் நிர்மல்குமார்அவர்கள் பேசும் போது, இப்போது இருக்கக்கூடிய தட்பவெப்ப நிலையில் வெயில் அதிகமாக இருப்பதால் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார். ”எல் நினோ” என்கின்ற தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக வெயில் அதிகமாக இருக்கிறது, அதனால் மின்சாரத் தேவை அதிகரிக்கிறது என்பது உண்மை தான். ஆனால் 17,000 மெகாவாட்டிலிருந்து 21,000 மெகாவாட் என்ற அளவில் மின்சாரத் தேவை உயர்ந்திருக்கிறது, அதனால் அதிக விலை கொடுத்து சந்தையில் வாங்க வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதிக அளவு மின் தேவை இருப்பது உண்மை தான். ஆனால் அந்த மின் தேவையை பூர்த்தி செய்வதற்குரிய அளவில் தமிழ்நாடு மின்சார வாரியமே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் முழு அளவில் செயல்பட்டாலே, பொதுச் சந்தையில் போய் 35 ரூபாய்க்கோ 37 ரூபாய்க்கோ வாங்க வேண்டிய அவசியமே இல்லை. 4 ரூபாய், 5 ரூபாய் என்ற அளவில், அதிகபட்சமாக 7/8 ரூபாய் என்ற அளவில் கூட நமது சொந்த உற்பத்தியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். சொந்த உற்பத்தியில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, எதற்கு வெளியில் போய் வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை பார்த்தால், காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்தில் கிட்டத்தட்ட 400 மெகாவாட் செயல்படாமல் இருக்கிறது. வடசென்னையில் இருக்கக்கூடிய மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு அலகுகளில் 650 மெகாவாட் செயல்படாமல் இருக்கிறது. அதே போல உடன்குடியில் இருக்கக்கூடிய உற்பத்தி நிலையத்திலிருந்து, நமக்கு கிடைக்க வேண்டிய 660 மெகாவாட் இதுவரை உற்பத்தி ஆகவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 300 மெகாவாட் உற்பத்தி வரவில்லை. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம்நமக்கு வர வேண்டியது. இப்படி 2000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் அவை எல்லாம் உற்பத்தி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது என்ன காரணம் என்பது தான் கேள்வி. அதில் 2000 மெகாவாட் கிடைத்தாலே உங்கள் தேவையில் பெருமளவை நிவர்த்தி செய்து விட முடியும். காடம்பாறையில் மின்சாரம் உற்பத்தி செய்தால் அது 4 ரூபாய்க்கு வரும். அதே போல தூத்துக்குடியிலோ, வடசென்னையிலோ, உடன்குடியிலோ, மேட்டூர் அனல் மின் நிலையத்திலோ உற்பத்தியை தொடங்கினால் நமக்கு இவ்வளவு சிக்கல் இருக்காது. அப்படி ஒரு வாய்ப்பு இருந்த போதும், இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. இதை கடந்த ஆட்சியின் மீது குற்றம் சொன்னாலும், நீங்கள் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகிறது. அவற்றை நீங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க முடியும்.
இதைத் தவிர, அதிக தேவைக்கு கொள்முதல் செய்வதற்காக பிற நிறுவனங்களிடமிருந்து வாங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் 2013-14-ல் போடப்பட்டது. அது 2800 மெகாவாட் என்ற அளவில் ஒப்பந்தம். அது 2028-ஆம் ஆண்டு வரை இருக்கிறது. அதில் 1500 மெகாவாட் தான் வாங்குகிறார்கள், இன்னும் 1300 மெகாவாட் வாங்கவில்லை.
இதைத் தவிர திமுக ஆட்சிக் காலத்தில் இடைக்கால தேவைக்காக ஐந்தாண்டு கால ஒப்பந்தம் போடப்பட்டது. அதிலும் 2000-க்கும் மேற்பட்ட மெகாவாட்டுக்கு குறைந்த விலையில் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதிலும் முழு அளவில் வாங்கவில்லை. அதிலும் 1300 முதல் 1500 மெகாவாட் வாங்கவில்லை.
நீண்ட கால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம், அரசிடம் இருக்கக்கூடிய உற்பத்தி நிலையம் இது எல்லாம் சேர்த்தாலே 4500 மெகாவாட் வருகிறது. இது எதுவுமே 35 ரூபாய்க்கு வாங்க வேண்டியதில்லை. உங்கள் சொந்த உற்பத்தி அல்லது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 1300 மெகாவாட், திமுக ஆட்சியின் இறுதியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் (கடந்த ஆண்டு) 1300 மெகாவாட் எடுத்தாலே 4000 மெகாவாட் வருகிறது. தவெக அரசு சொல்லும் 17,000-லிருந்து 21,000 மெகாவாட் என்கின்ற அதிகரித்த தேவையை சரி செய்வதற்கு இந்த உற்பத்தியே போதுமானதாக இருக்கும். குறைந்தபட்ச அளவில் தான் வெளியில் வாங்க வேண்டியிருக்கும். ஆனால் அதை விட்டு விட்டு, சந்தையில் போய் 35 ரூபாய் கொடுத்து வாங்கினால், ஒரு நாளைக்கு 70-80 கோடி ரூபாய் நட்டம் என்ற வீதத்தில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் வரும்?
தவெக ஆட்சிக்கு வரும் போது நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த பற்றாக்குறையினால் பல்வேறு அரசு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டன. அப்படி இருக்கும் போது இதை எல்லாம் சரி செய்ய முடியும் அல்லவா? அது ஏன் செய்யப்படவில்லை என்பது தான் முதல் கேள்வி.
இரண்டாவதாக, நமது மாநிலத்தில் மட்டும்தான் வெயில் வருகிறதா? பக்கத்தில் ஆந்திராவில் வெயில் இல்லையா, தெலுங்கானாவில் வெயில் இல்லையா, கர்நாடகாவில் வெயில் வரவில்லையா? அங்கே எடுத்துக்கொண்டால், ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் அவர்கள் அதிகபட்சமாக இதே அளவு உச்சக்கட்ட காலத்தில் வாங்கக்கூடிய மின்சாரத்தின் விலை, அதாவது தேவை மிக அதிகமாக இருக்கும் போது, மாலை 6 மணிக்கு எல்லோரும் விளக்கு போட ஆரம்பிக்கும் சமயத்தில் மின்சாரத் தேவை அதிகமாகும். அந்த உச்சக்கட்ட மணி நேரத்திற்கு ஒரு விலை வைப்பார்கள். அப்படி வைக்கக்கூடிய விலையில்தான் நாம் 37 ரூபாய் கணக்கில் வாங்குகிறோம்.
ஆனால் அதே இடத்தில், இதே ஆந்திரா இதே அக்டோபர் காலகட்டத்திற்கு 20 ரூபாய்க்கு தான் வாங்குகிறது. மற்ற சமயத்தில் 16 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால் நாம் அதை விட இரண்டு மடங்காக 32 ரூபாயிலிருந்து 37 ரூபாய் வரை வாங்குகிறோம். இது ஏன்?
தெலுங்கானா எவ்வளவு வாங்குகிறது? அதிகபட்சம் 10 ரூபாய்க்கு வாங்குகிறது. இதே அதிகதேவையான மணி நேரத்திற்கு 8 ரூபாய்க்கு வாங்குகிறது.
கர்நாடகா என்ன செய்தது? ஏற்கனவே அவர்கள் தயார் நிலையில் இருந்து கோ-ஜெனரேஷனில் வாங்கிக்கொண்டார்கள், உற்பத்தியை பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் 6 ரூபாய், 7 ரூபாய் என்கின்ற இடத்தில் வாங்குகிறார்கள்.
கேரளா 30 ரூபாய்க்கு வாங்குகிறது. அது NTPC-யிடமிருந்து வாங்குகிறது. அதுவும் அதிகம் தான், ஆனால் அவர்கள் தான் அதிகமாக வாங்குகிறார்கள். எல்லா மாநிலத்திலும் வெயில் ஒரே மாதிரி தானே இருக்கிறது? ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெயில் மாறுமா?
ஆந்திராவுக்கு எப்படி விலை குறைவாக இருந்தது, 16 ரூபாய்க்கு எப்படி வாங்கினார்கள் என்றால், அவர்கள் செப்டம்பர் 9-ஆம் தேதியே இதற்கான ஒப்பந்தம் போட்டு வாங்கிவிட்டார்கள். ஏனெனில் தட்பவெப்ப நிலையில் வெயில் அதிகமானால் என்ன செய்வது, பருவமழை தள்ளிப் போனால் என்ன செய்வது என்று அப்போதே திட்டமிட்டு வாங்கிவிட்டார்கள். அதனால் அவர்கள் 16 ரூபாய்க்கு வாங்கிவிட்டார்கள்.
ஆனால் தமிழ்நாடு செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து 30 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதை நாம் என்னவென்று சொல்வது? வெயில் அதிகமாக இருக்கலாம். இதை விட ஏப்ரல் மாதம் வெயில் இல்லையா? இதே வருடம் ஏப்ரல் மாதம் மிக மோசமான வெயில். அப்போது 21,000 மெகாவாட் அதிகமாக தேவைப்பட்டது. அப்போது பொதுச் சந்தையில் 35 ரூபாய்க்கெல்லாம் சென்று வாங்கவில்லை, அப்போது சமாளிக்க முடிந்தது. அப்போதும் காற்றாலை இல்லை.
இப்போது அமைச்சர் என்ன சொல்கிறார், ஏப்ரல் மாதத்தில் காற்றாலை இல்லை. ஏப்ரல் மாதத்தில் மேட்டூரில் தண்ணீர் இல்லை, வைகையில் தண்ணீர் இல்லை, எங்கேயும் தண்ணீர் இல்லை. அப்போதும் உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது. அப்போதும் நம்மால் சமாளிக்க முடிந்தது. அப்போது 21,000 மெகாவாட் தேவை இருந்தது. இப்போது இன்னும் அந்த அளவை எட்டவில்லை. அப்போதே ஏப்ரல் மாதத்திலேயே வெளிச்சந்தையில் போய் 35 ரூபாய்க்கு வாங்காமல் சமாளிக்க முடிந்தது. இந்தியா முழுவதுமே பெரிய நெருக்கடி இருந்தது, ஏப்ரல் மாதத்தில் மிகப் பெரிய அளவுக்கு மின்சாரத் தேவை எல்லா இடத்திலும் இருந்தது. அப்போதே கூட இவ்வளவு விலைக்கு போய் நாம் வாங்கவில்லை. அப்படி இருக்கும் போது, இப்போது ஏன் 35 ரூபாய்க்கோ 37 ரூபாய்க்கோ நாம் வாங்க வேண்டும் என்பது தான் கேள்வி. இது மாண்புமிகு அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
கடந்த ஆட்சியில் இருக்கக்கூடிய பல தவறுகளை மாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் அதை விட ஒரு மோசமான விலைக்கு வாங்கினால், இதில் வரக்கூடிய நட்டத்தை யார் பொறுப்பேற்பது? அரசு பொறுப்பேற்காது, பொதுமக்களாகிய நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எங்கள் தலையில் தான் சுமத்தப் போகிறீர்கள். நாங்கள் தான் அதிகமான கட்டணம் கட்ட வேண்டிய நிலைமைக்கு வருகிறோம். அப்போது அரசாங்கம் ஒரு வேலையை சரியாக செய்கிறதா இல்லையா என்பதை நிர்வகிக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.
நான் அமைச்சர் அவர்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் தயவு செய்து உங்கள் அதிகாரிகளிடத்தில் மறுபடியும் ஆலோசனை செய்யுங்கள், பேசுங்கள். இதே அதிகாரிகள் தான் ஏப்ரல் மாதத்தில் சமாளித்திருக்கிறார்கள். அப்போது இந்த மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் இப்போது ஒழுங்கு முறை ஆணையத்தில் இருக்கிறார்.
இந்த ஒழுங்கு முறை ஆணையம் எதற்கு இருக்கிறது என்றால், மின்சாரத்தை எவ்வளவு விலைக்கு வாங்குகிறார்கள், மக்களிடம் எவ்வளவு விலைக்கு கொடுக்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்குரிய ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு தான் ஒழுங்கு முறை ஆணையம். ஆனால் ஒழுங்கு முறை ஆணையம் காலம் காலமாக செய்வதில்லை. காலம் காலமாக செய்யாத அந்த ஒழுங்கு முறை ஆணையம் இப்பொழுதும் அமைதியாக வாயை பொத்திக்கொண்டு இருக்கிறது.
நாம் என்ன கேட்கிறோம் என்றால், ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய மரியாதைக்குரிய ராதாகிருஷ்ணன் அவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் தலைவராக இருந்த போது ஏப்ரல் மாதத்தில் வெளிச்சந்தையில் 35 ரூபாய்க்கு வாங்காமல் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்த அனுபவம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இப்போது 35 ரூபாய்க்கு வாங்கப் போவதையும், 37 ரூபாய்க்கு வாங்கப் போவதையும் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்? அது குறித்து உங்கள் கருத்து என்ன? ஒழுங்கு முறை ஆணையம் ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும்.
ஏனென்றால் அன்றாடம் மின்சாரம் வாங்குகிறோம், ஒவ்வொரு நாளும் விலை மாறுகிறது என்றால், அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் தான் இந்த விலைக்கு வாங்கப் போகிறது என்றால், ஒழுங்கு முறை ஆணையம் கேள்வி கேட்க வேண்டுமா வேண்டாமா? என்பது தான் இப்போது முன்வைக்கும் கேள்வி.
திமுக காலத்தில் ஊழல் இருந்தது என சொல்லும் தவெக, அப்போது தலைவராக இருந்தவர் தான் ராஜேஷ் லக்கானி. இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்தான் பொறுப்பேற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரைத்தான் திரும்ப கொண்டு வருகிறீர்கள். திமுக காலத்தில் இருந்த ராதாகிருஷ்ணன் அவர்களைத்தான் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தலைவராகவும் மாற்றியிருக்கிறீர்கள். ஒன்றும் பெரிய அளவுக்கு மாற்றம் எதுவுமே இல்லை. அதிகாரிகள் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் போன ஆட்சியை விட இந்த ஆட்சியில் அதிகமான விலைக்கு வாங்குவது எதனால்? உங்களை யாராவது தவறாக வழிநடத்துகிறார்களா, அல்லது இது நிர்வாகச் சீர்கேடாக ஏற்பட்டதா, அல்லது இது ஊழலாக நாம் பார்ப்பதா, எப்படி பார்ப்பது என்கின்ற கேள்வி இருக்கிறது.
தவெக அரசுக்கு க்கு பல நெருக்கடிகள் இருக்கலாம். இப்போது இருக்கக்கூடிய மின்சாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால் அதில் எந்தவிதமான தர்க்கமும் இல்லையே என்ற கவலை தான். ஏனென்றால் கடைசியில் மக்கள் தலையில் தானே போடுவீர்கள். மற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய நிர்வாக அளவிலான செயல் திட்டங்கள் நம்மிடம் ஏன் இல்லை?
உதாரணமாக கர்நாடகாவை எடுத்துக்கொண்டால், ஒரு நெருக்கடிக்காக முன்னாடியே தயாராகி ’கோ-ஜெனரேஷன் யூனிட்’ என்று சொல்வார்கள், கரும்பாலையிலிருந்து எடுக்கக்கூடிய மின் உற்பத்திக்கு தயார் செய்துவிட்டார்கள். நமக்கு அவ்வளவு கரும்பாலை கிடையாதுதான்.
- கர்நாடகாவில் அப்படிப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். ஆந்திரா செப்டம்பர் மாதமே ஆணைப் போட்டு அக்டோபர் மாதத்திற்கான கொள்முதலை 16 ரூபாயில் முடித்துவிட்டார்கள்.
- தெலுங்கானா அதே மாதிரி ஒரு முயற்சி எடுத்து 8 ரூபாய்க்கு முடித்துவிட்டார்கள். அவர்கள் 8 ரூபாய், இவர்கள் 16 ரூபாய், தங்கள் சொந்த உற்பத்தியில் செய்துவிட்டார்கள்.
- கேரளாவை பார்த்தால் 30 ரூபாய்க்கு செய்துவிட்டார்கள்.
தமிழ்நாடு 35 ரூபாய்க்கு வந்து நிற்கிறீர்கள், 37 ரூபாய்க்கு வந்து நிற்கிறீர்கள் என்றால், இது உங்கள் காசு, என் காசு என்று பிரித்து பார்க்க முடியாது, பொதுமக்களுடைய காசு இது. அதனால் நாளைக்கு நாங்கள் தான் கட்ட வேண்டி வரும். நாம் எல்லோரும் சேர்ந்து தான் கட்டப் போகிறோம். அதனால் கேள்வி எழுப்ப வேண்டிய நிலையில் இப்போது வந்து நிற்கிறோம்.
உடனடியாக இந்த ஒப்பந்தங்களை எல்லாம் தவெக அரசு பரிசீலித்து, நம்மிடம் எப்போதும் இருக்கும் நீண்ட கால ஒப்பந்தம், சுய உற்பத்தி, இடைக்கால ஒப்பந்தம் இதில் 4000 மெகாவாட் வாங்க முடியும். அந்த முறைக்குள் கொண்டு வந்து எப்படி இந்த வருடம் ஏப்ரல் மாதம், மே மாதம் கையாண்டீர்களோ, அதை விட வெயில் குறைவாகத்தான் இருக்கிறது. அதே மாதிரி இப்பொழுதும் கையாண்டு இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறோம். இல்லை என்றால் இது நிச்சயமாக ஒரு பெரிய கேள்வியாக, பூதாகரமாக வெடிக்கும்.
ஏனென்றால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. மின்சார விலை ஏறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. எப்படி வாழ்வது? எங்களுக்கு சம்பளமும் உயரவில்லை. இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக பணவீக்கம் தமிழ்நாட்டில் தான். 6.8% இருக்கிறது. ஜனவரி மாதம் 3% இருந்தது. இப்போது 6.8% ஆக வந்திருக்கிறது. விலைவாசி அவ்வளவு ஏறியிருக்கிறது. இதை நாங்கள் எங்கிருந்து கட்டுவது என்று தெரியவில்லை. தவெக பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை. மின்சார விலையும் ஏறப்போகிறது. மின்சார விலை ஏறினால் மறுபடியும் பொருட்களின் விலையும் ஏறப்போகிறது இதனால் என்ன செய்வது, எப்படி வாழ்வது? இந்த கேள்வி எல்லோருக்கும் வந்துவிட்டது.
மின்சாரம் என்பது எல்லோருக்கும் தேவைப்படுகிறது. மின்சாரம் இல்லையெனில் கல்வி கிடையாது, குழந்தை படிக்க முடியாது. கணினி (computer) இயக்க முடியாது. அதெல்லாம் இல்லை என்றால் அறிவுக்கு வழியே கிடையாது. அப்படிப்பட்ட மோசமான நிலையில் நாம் இருக்கும் போது மின்சாரம் என்பது தண்ணீரைப் போல அடிப்படைத் தேவை. இன்றைக்கு அறிவு வளர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு எல்லாவற்றுக்குமே மின்சாரம் அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது.
அப்படி இருக்கும் போது விலைவாசி ஏறுவதற்கு, மின்சாரத்தின் விலை ஏறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள். ஏற்கனவே தனியார் கொள்முதலுக்கு போனதால் தான் பிரச்சனை. 2000-ல் கொண்டு வந்த மின்சாரச் சட்டம், வாஜ்பாய் கொண்டு வந்த மின்சாரச் சட்டத்தில் இவ்வளவு பிரச்சனை வந்தது.
25 வருடமாக பிரச்சனைக்கு காரணமே, சொந்த உற்பத்தியில் இருந்த மின்சார வாரியங்கள் எல்லாம் தனியாரிடம் போய் மின்சாரம் வாங்குங்கள் என்று அன்று வாஜ்பாய் அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் தான்.
அதனால் தான் இவ்வளவு பிரச்சனை. அதனால் தான் லாபத்தில் நடந்து கொண்டிருந்த மின்சார வாரியம் இப்போது ஒன்றரை லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என நட்டம் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு காரணமே தனியாரிடம் இந்த மாதிரி 35 ரூபாய்க்கு, 40 ரூபாய்க்கு, 20 ரூபாய்க்கு வாங்குவது. 20 ரூபாய்க்கு வாங்குவதே அதிகம்.
இது திமுக காலத்தில் வாங்கினார்கள் என்று சொன்ன போது நாம் இதை எதிர்த்திருக்கிறோம். உடனே கேட்பார்கள், திமுக காலத்தில் என்ன செய்தீர்கள் என்று. திமுக காலத்திலும் எதிர்த்திருக்கிறோம், அப்போதும் கேள்வி எழுப்பியிருக்கிறோம். அதிமுக காலத்தில் போராட்டமும் நடத்தியிருக்கிறோம். ஒழுங்கு முறை ஆணையத்தில் போய் நிறைய சண்டையும் போட்டிருக்கிறோம்.
இதே திமுக காலத்தில் ஒழுங்கு முறை ஆணையத்தில் சென்று நான்(திரு) சண்டை போட்டேன். அந்த வீடியோ இன்னும் இருக்கிறது. இது இந்த ஆட்சியா, அந்த ஆட்சியா என்பது அல்ல. எல்லா ஆட்சிக் காலத்திலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது. அந்த அடிப்படையில் இருந்து தான் கட்சி கடந்து பார்க்கிறோம். அதனால் இதை திமுக காலத்தில் சொல்லியிருக்கிறோம், அதிமுக காலத்தில் சொல்லியிருக்கிறோம், ஜெயலலிதா அம்மையார் காலத்தில் இந்த ஒப்பந்தம் போடப்பட்ட போதே எதிர்த்திருக்கிறோம்.
நீண்ட கால ஒப்பந்தம் அதிக விலைக்கு என்பதை பத்திரிகையாளர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். தனியார் கம்பெனி மின்சாரத்தை உற்பத்தி செய்து 2500 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிக்கொள்ளும், இவ்வளவு விலைக்கு வாங்கிக்கொள்ளும் என்று ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள். அரசு 2500 மெகாவாட் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, 1000 மெகாவாட் தான் தேவை என்று வாங்கினாலும், வாங்காத 1500 மெகாவாட்டுக்கு சேர்த்து அரசு மாதா மாதம் காசு கட்டியே ஆக வேண்டும். எவ்வளவு வாங்குகிறீர்களோ அதற்கு காசு கட்டுவது இல்லை, எவ்வளவு ஒப்பந்தம் போட்டீர்களோ அதற்கு காசு கட்டியாக வேண்டும். மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை என்றாலும் அரசு காசு கொடுத்தாக வேண்டும். அப்படி 2500 மெகாவாட்டுக்கு காசு கட்டிக்கொண்டிருக்கிறோம், 2000, 4000 கட்டணம் வர வேண்டிய இடத்தில் 8000, 10000 பில் வருகிறது. பயன்படுத்தாத மின்சாரம் எங்கிருந்து வருகிறது என்றால் அங்கிருந்து வருகிறது. அந்த கம்பெனிகள் சும்மா வைத்திருந்தாலும், பூட்டு போட்டு வைத்திருந்தாலும் தமிழ்நாடு மின்சார வாரியம் காசு தர வேண்டும். இதை எல்லாம் கேள்வி கேட்க வேண்டிய ஒழுங்கு முறை ஆணையம் இவ்வளவு வருடமாக கேள்வி கேட்கவில்லை. இது மாதிருஇயான ஊழலைப் பாத்த்தில்லை.
நாங்களே நேரடியாக ஒழுங்கு முறை ஆணையத்திற்கு சென்று சண்டை போட்டிருக்கிறோம். ஒழுங்கு முறை ஆணையம், இப்போது டெல்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக எப்படி போராட்டம் நடக்கிறதோ, அதுபோல ஒழுங்கு முறை ஆணையத்தை நோக்கி எல்லா மக்களும் வந்தால் மட்டும்தான் தமிழ்நாட்டில் மின்சார விலை குறையும். நாம் இன்றைக்கு படாத பாடு படுகிறோம் அல்லவா, இதற்கு எல்லாவற்றுக்கும் காரணம் ஒழுங்கு முறை ஆணையம் தான்.
இப்போது ஸ்மார்ட் மீட்டர் வேறு கொண்டு வருகிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் என்ன ஆகும் என்றால், மதியம் பயன்படுத்துகிற மின்சாரத்திற்கு ஒரு விலை வைப்பான், மாலை 6 மணிக்கு ஒரு விலை வைப்பான், இரவு 9 மணி 10 மணிக்கு ஒரு விலை வைப்பான். எல்லோரும் ஐபிஎல் கிரிக்கெல் விளையாட்டை பார்க்கிறேன் என்று சொல்லி டிவி போட்டால் மின்சார விலை ஏற ஆரம்பித்துவிடும். நிமிடத்திற்கு நிமிடம் கட்டணம் மாற ஆரம்பிக்கும். அந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கடந்த ஆட்சியில் வந்த போது பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் கொண்டு வர மாட்டேன் என்று சொன்னார்கள். இப்போது இவர்கள் கொண்டு வருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
யோசித்துப் பாருங்கள், நாம் சம்பாதிப்பதில் 50% பணத்தை மின்சாரத்திற்கு ஒதுக்கி வைக்க வேண்டிய நிலைமை வந்து நிற்கும். இதற்கு எல்லாம் காரணம் இந்த ஒழுங்கு முறை ஆணையம் தான்.
நாங்கள் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால், ஞானேஷ் குமாருக்கு எதிராக, இந்த தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் எப்படி போராட்டம் நடக்கிறதோ, அதே போல ஒழுங்கு முறை ஆணையத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் எதிராக நாங்கள் மிகப் பெரிய அளவில் மக்களை திரட்டி போராடுவோம்.
ஏனென்றால் சிறு வணிகர்கள், சின்ன கடை வைத்திருப்பவர்கள் ஒரு குளிர்சாதனப் பெட்டி (Fridge) வைத்து பால் வைத்து விற்க முடியாது. கடைகளுக்கான வணிக வேறு. எப்படி கடை நடத்துவார்கள்? சாதாரண மக்கள், ஏழை எளிய மக்கள் எப்படி மின்சாரத்தைப் பயன்படுத்துவது? எல்லோரையும் திரட்டுவோம். எல்லோரையும் திரட்டி மின்சார வாரியத்தையும், இப்போது வந்திருக்கும் மின்சாரத் தலைவர் லக்கானியையும் சொல்கிறோம். உங்கள் காலத்தில் தான் இன்னும் சீரழிந்தது. அவருக்கு சொல்கிறோம், எச்சரிக்கிறோம்.
இதை எல்லாம் ஒழுங்குபடுத்தவில்லை என்றால், இன்னும் கொள்ளை அடிக்க வேண்டும், தனியார் கம்பெனிகளுக்கு வாரிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், டெல்லியில் நடக்கக்கூடிய போராட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், ஒழுங்கு முறை ஆணையத்திற்கும் எதிராக சுற்றி நடக்கும். எச்சரிக்கிறோம்.
அங்கே கம்பெனிகளுக்கு சாதகமாக உட்கார்ந்து எல்லா தீர்ப்புகளையும் கொடுக்கும் வேலையை இந்த ஒழுங்கு முறை ஆணையம் செய்துகொண்டே இருக்கிறது. கம்பெனிக்காரனுக்காக மட்டும் வக்காலத்து வாங்கும் ஒழுங்கு முறை ஆணையம் எதற்கு சம்பளம் வாங்குகிறீர்கள்?
கடந்த 15, 16 வருடத்தில் செய்த ஊழலால், கம்பெனிகளுக்கு, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களுக்கு வக்காலத்து வாங்கியதால், சாமானிய மக்களுடைய பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் இந்த விலைவாசி ஏற்றத்திற்கு, மின்சார விலை ஏற்றத்திற்கு எல்லாம் காரணம் ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து அந்த தீர்ப்பாயத்தை நடத்தியவர்கள் தான்.
2011-ல் வந்து நேரடியாக ராஜா அண்ணாமலை மன்றத்தில் மல்லுக்கட்டினோம். அன்றிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒழுங்கு முறை ஆணையம் ஒழுங்காக நடக்கவில்லை என்றால், டெல்லியில் நடக்கக்கூடிய போராட்டம் இங்கே நடக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். விவசாயிகளை திரட்டுவோம், கடைக்காரர்களை திரட்டுவோம், சிறுத் தொழில் நடத்தக்கூடிய நெசவுத் தொழில் நடத்தக்கூடியவர்கள் வரை எல்லோரையும் திரட்டுவோம். திரட்டி வந்து முற்றுகை போட்டால் உங்களை மொத்தமாக இழுத்துப் போட வேண்டியிருக்கும், அதிகாரிகள் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்கிறோம்.
அதே சமயத்தில் மின்சார வாரியத்தில் வேலை செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான, கிட்டத்தட்ட 25,000 முதல் 40,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு சொல்கிறோம். உங்களுக்கு பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு கொடுக்க விருப்பப்படாத இந்த மின்சார வாரியம், தனியார் மின் உற்பத்தி கம்பெனிகளுக்கு கோடி கோடியாக, 2000 கோடி, 4000 கோடி என வாரிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஊழியர்கள் மழையிலும், வெயிலிலும், புயலிலும் இந்த மக்களுக்காக மின்சாரத்தை ஒழுங்குபடுத்தினீர்கள். கஜா புயலில் இறங்கி வேலை செய்தீர்கள், ஒரு மாதத்திற்குள் எல்லா இடத்திலும் கம்பத்தை நட்டு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தீர்கள். ஆனால் உங்களுக்கு வேலையை பணி நிரந்தரம் பண்ணவில்லை. இன்னும் ஒப்பந்த ஊழியராக வைத்து 8,000, 10,000 சம்பளத்திற்கு சுரண்டி பிழைக்கக்கூடிய இந்த மின்சார வாரியம், இந்த பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 1000/2000 கோடி என தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் கம்பெனிக்காரனும், தமிழ்நாடு மின்சார வாரியமும், தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணையமும் கூட்டு சேர்ந்துகொண்டு மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். தொழிலாளர்களை சுரண்டி பிழைக்கிறார்கள். இதை எச்சரிக்கிறோம் நாங்கள். இதை நிறுத்தவில்லை என்றால் நீங்கள் யாரும் இந்த பதவிகளில் இருக்க முடியாது.
ஒப்பந்த ஊழியர்களை சொல்கிறேன், நீங்கள் உழைத்து உருவாக்கி பாதுகாக்கக்கூடிய நிறுவனம் இந்த மின்சார வாரியம். இதை தனியாருக்கு தாரைவார்க்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் சேர்த்து எதிர்த்து போராட நீங்களும் வாருங்கள். உங்களை எத்தனை வருடம், 20 வருடமாக, 25 வருடமாக பணி நிரந்தரம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இந்த மின்சார வாரியம் உங்களுக்கு தர வேண்டிய சம்பளப் பணத்தை கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் இதற்குப் பிறகு நாங்கள் பொதுமக்களாகவும் பணம் கட்ட வேண்டும். மின்சார வாரியத்தில் வேலை செய்யக்கூடிய ஒப்பந்த ஊழியரும் பணத்தை இழந்து, முறையான சம்பளம் கிடைக்காமல், பணி நிரந்தரம் இல்லாமல் சிக்கி சீரழிய வேண்டும். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிக்காரன் சம்பாதிப்பான், ஒழுங்கு முறை ஆணையம் கை கட்டி வேடிக்கை பார்க்கும், மின்சார வாரியம் வாரி வாரிக் கொடுக்கும் என்றால் இவர்களை பார்த்து நாங்கள் சும்மா இருக்க முடியாது.
மே 17 இயக்கம் எச்சரிக்கிறது. மின்சார வாரியம் இப்படியே போய்க்கொண்டிருந்தால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த மாதிரி ஊழல் கட்டமைப்பை தமிழக அரசு, மின்சாரத்துறை சார்ந்த அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் இந்த குற்றச்சாட்டு அவர் மீதும் வரும். நீங்கள் இப்போது தான் வந்திருக்கிறோம், அதிகாரிகள் சொல்லக்கூடிய ஆலோசனையின் கீழ் தான் முடிவெடுப்போம் என்றால், இந்த ஆலோசனை சொல்லக்கூடிய அதிகாரிகளின் யோக்கியதை என்னவென்று பாருங்கள். இந்த 35, 37 ரூபாய் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவில்லை என்றால் உங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு நிச்சயமாக வரும் என்பதை தயவு செய்து கவலையோடு எதிர்கொள்ளுங்கள்.
இந்த மின்சார வாரியத்தில் இருக்கக்கூடிய ஊழல் மிகப் பெரிய ஊழல், தமிழ்நாட்டில் அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய ஊழல். ஒவ்வொரு முறையும் ஒழுங்கு முறை ஆணையத்தில் விவசாயிகளின் இலவச மின்சாரத்தை தடை பண்ண வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான முன்மொழிவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதால் நட்டம் வரவில்லை. இந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மின்சாரம் வாங்காத கம்பெனிகளுக்கு, மின்சாரம் கொடுக்கவில்லை என்றாலுமே, அவர்களுக்கு காசு கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
2800 மெகாவாட்டுக்கு காசு தருகிறோம் என்று சொல்லி ஒப்பந்தம் போட்டுவிட்டு வெறும் 1200 மெகாவாட்டை வாங்கிவிட்டு, வாங்காத 1300 மெகாவாட்டுக்கும் மாதா மாதம் காசு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் பிரச்சனைக்கு காரணம். அங்கே காசு கொடுக்கிறார்கள், ஆனால் மின்சாரத்தை வாங்க மாட்டார்கள். ஆனால் மின்சாரத்தை தனியாக 35 ரூபாய்க்கு வாங்குவார்கள். இது என்ன கூத்து? இதை யார் கேட்பது?தயவு செய்து இதற்கு மேல் இதை அனுமதிக்க வேண்டாம். மக்கள் இயக்கங்களை நாங்கள் அணிதிரட்டப் போகிறோம், ஒன்று திரட்டப் போகிறோம்.
இதற்கு மேலும் இந்த ஊழலை பார்த்து வேடிக்கை பார்க்க முடியாது. கடந்த ஆட்சி காலத்திலும் போராடி இருக்கிறோம். அதிமுக காலத்திலும், ஜெயலலிதா அம்மையார் காலத்திலும் போராடி இருக்கிறோம், எடப்பாடியார் காலத்திலும் போராடி இருக்கிறோம், திமுக காலத்திலும் போராடி இருக்கிறோம். இப்பொழுது தமிழக அரசிடம் சொல்கிறோம். எங்களுக்கு எந்த கட்சியை பற்றியும் தனிப்பட்ட பாசம் எல்லாம் கிடையாது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். அந்த அடிப்படையில் இந்த 35, 37 ரூபாய் என்பதை எல்லாம் அனுமதிக்க முடியாது.
கடந்த ஆட்சியை மிகப் பெரிய அளவுக்கு குற்றம் சொன்னீர்கள். அதே தவறை நீங்களும் செய்கிறீர்கள், அதை விட மோசமாக செய்கிறீர்கள். 20 ரூபாய் வாங்கியதே தவறு என்று சொன்னீர்கள், இப்போது 35, 37 ரூபாய் என்று சொல்கிறீர்கள். ஆகவே உடனடியாக இது ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இல்லையெனில், இதற்கு எதிராக பெருமளவில் போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும். ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக தன்னை சரி செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம்.
நன்றி. எல்லா ஊடக நண்பர்களுக்கும் நன்றி, மிக முக்கியமான சமயத்தில் குறுகிய நேரத்தில் எல்லோருமே வந்திருக்கிறீர்கள், அது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் கட்சி கிடையாது, நீங்கள் எங்களுக்கு கொடுக்கக்கூடிய ஆதரவுதான் நாங்கள் இயங்குகிறோம். நாங்கள் சொல்கிற உண்மை வெளியே போகிறது என்ற அடிப்படையில் இவ்வளவு நேரம் வந்து ஒத்துழைப்பு கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.