எகிறும் விலைவாசி – கட்டுப்படுத்தும் வழி என்ன?

இந்தியாவில் எகிறும் விலைவாசி – அரிசி, பருப்பு, வெங்காயம், பூண்டு முதல் அனைத்து விவசாய பொருட்களும் சில மாதங்களிலேயே பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றன. உலகளாவிய போர்கள், எல் நினோ தாக்கம், மழைப்பற்றாக்குறை, அரசுகளின் நிர்வாக திறனின்மை போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து, ஏழை எளிய மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் அரசுகள் விலையேற்றத்தை ஒத்துக் கொண்டாலும் அதை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் இன்னும் வீரியமாக நடைபெற வேண்டிய தேவையில் இருக்கின்றன.

இந்தியாவின் உணவு விலைவாசி விகிதம் (FOOD INFLATION RATE) ஆகஸ்ட் மாதத்தில் 5.97% ஆக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 7.74% ஆக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி போக்குவரத்து முதல் ஒரு குடும்பத்தை நடத்தும் செலவுகள் வரை பல வகையிலும் செலவுகள் அதிகரித்திருக்கின்றன. அண்மையில் கிடைத்த தரவுகளின்படி, கடந்த மாதம் இந்தியாவில் அதிகமான பணவீக்க விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு 6.81% பதிவு செய்திருக்கிறது. (உணவு விலைவாசி விகிதம் 10.62%). பறவைகளுக்கும் அரிசிமாவை உணவாகக் கொடுத்து நெற்களஞ்சியமாக விளங்கிய தமிழ்நாட்டில், தற்போது சன்ன ரக அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

(தகவல் ஆதாரம்: புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்) https://www.mospi.gov.in/all-visualization

தமிழ்நாட்டில் அரிசி மற்றும் வேளாண் பொருட்களின் விலையேற்றத்திற்கு முதன்மை காரணமாக காவிரி நீர் பற்றாக்குறையே கூறப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் 79 டி.எம்.சி நீர் வரவில்லை. 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரி நீர்வரத்து குறைந்ததால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. (காவிரி நீர், மேகதாட்டு அணை விடயங்களில் ஒன்றிய அரசையும் கர்நாடக அரசையும் எதிர்த்து மே பதினேழு இயக்கம் பல முறை போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை போராடும் போதும் காவிரி நீர் பற்றாக்குறையால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்களின் விலையும் ஏறும் என்று முன்னரே கூறி இருக்கிறது.)

இந்திய அளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் முதன்மைக் காரணியாக பல பொருளாதார வல்லுநர்கள் கூறுவது ‘எல்-நினோ’. இந்த ஆண்டு எல்-நினோ எனும் காலநிலையால் உணவுப் பாதுகாப்பின் மீதான தாக்கம் கடுமையாக இருக்கலாம் என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஏற்கனவே உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள 45 நாடுகளில் இன்னும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

காலநிலைக்கு அடுத்து எண்ணெய்-உரம்-உணவு பொருட்கள் எனும் சங்கிலி இணைப்பு இந்த விலைவாசி ஏற்றத்திற்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிகளவில் உர ஏற்றுமதி செய்யும் நாடுகளான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர், இந்த சங்கிலியை பாதித்தது. மேலும் மேற்கு ஆசியாவில் நடந்த போர்களின் நேரடி விளைவு உலகளாவிய பெட்ரோ கெமிக்கல் மையங்கள் மீது எதிரொலிக்கத் தொடங்கின. (இந்த உலகலாவிய போர்கள் குறித்தும் எல்-நினோ குறித்தும் மே 17  இயக்கக் குரல் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட்டுவருகிறது. காலநிலை மாற்றத்தைக் கண்டு கொள்ளாத அரசுகள் இப்போது அதன் விளைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே இத்தகைய கடும் பொருளாதார சிக்கல்கள் உணர்த்துகின்றன. வாசிக்க:

இந்தியாவின் LPG தேவையில் சுமார் 60% இறக்குமதி செய்யப்படும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் எரிவாயு உருளையின் விலை உயர்ந்தது. குறிப்பாக உணவகங்கள், தேநீர்க் கடைகள், விடுதிகள் ஆகியவற்றின் உணவுப் பொருட்கள் விலை பன்மடங்கு அதிகரித்தது. டீசல் மற்றும் பிற எரிபொருட்களின் விலை உயர்ந்ததும் விவசாயப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் என அனைவரையும் கடுமையாக அழுத்தும் இந்த விலைவாசி உயர்வு சிக்கல் விரைவாகத் தீரப் போவதில்லை. இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுவது நம் கண்முன்னே மிகப்பெரும் உணவுப் பஞ்சத்திற்கான சிக்கலாக உருவெடுக்கிறது. இதை ஒன்றிய பாஜக அரசும் ஒத்துக் கொண்டிருக்கிறது. (அண்மையில் நியூயார்க்கில் உள்ள ஆசியா சொசைட்டியில் பேசிய ஒன்றிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “வரவிருக்கும் மாதங்களில் ஒரு பெரிய உணவுநெருக்கடி ஏற்படக்கூடும்” என்று கூறியது நினைவிருக்கலாம்.)

தமிழ்நாட்டில் அரிசி விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 50-க்கு சன்ன ரக அரிசி வழங்கும் திட்டத்தை ஆளும் தவெக அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கை தற்காலிகமாக ஒரு தீர்வைக் கொண்டு வந்தாலும் நீண்டகால தீர்வை நோக்கி அரசு நகர வேண்டும். பயிர் சாகுபடி நடக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும். அரிசி விலையை கட்டுக்குள் கொண்டுவர உள்ளூர் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதும், விவசாயிகளுக்கான மின்சார சேவை/ நீர்ப்பாசன வசதி போன்றவற்றை மேம்படுத்துவதும் அரசின் தலையாய கடமை. வெளிமாநில விநியோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, எல்-நினோ, உரத்தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொள்ள நீண்ட காலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

ஒன்றிய அரசைப் பொறுத்த வரை அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் கையிருப்பு இருந்தாலும் அவை பெரிய அளவிலான உணவுப் பஞ்சத்தை சமாளிக்குமா என்ற உறுதியான தகவல் இல்லை. மேலும் அரிசி, கோதுமை விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் காய்கறி, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் குறைய வேண்டும். அப்போதுதான் உணவுப் பண வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதை கருத்தில் கொண்டே சில உடனடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

“பயிர்களுக்கு எல் நினோ அச்சுறுத்தல் இருந்தபோதிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் போதுமான கையிருப்பு உள்ளது. இது விலை உயர்வைத் தடுக்க உதவும்” என்று இந்தியப் பருப்பு மற்றும் தானியங்கள் சங்கத்தின் செயலாளர் கூறி இருக்கிறார். இந்த கையிருப்பு தானியங்களை மக்களுக்கு சீராக விநியோகிப்பதையே முதல் நடவடிக்கையாக விரைந்து செய்ய வேண்டும். தேவைக்கேற்ப தானிய கையிருப்பை சந்தையில் முறையாக விற்பனை செய்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்களின் எரிபொருள் செலவைக் குறைக்க ஒன்றிய அரசின் கலால் வரிகளை மக்களுக்கு பயன்படும் வகையில் குறைக்க வேண்டும். மோடி அரசு கடந்த மார்ச் 2026இல் பெட்ரோல், டீசல் இரண்டுக்கும் லிட்டருக்கு ₹10 கலால் வரியைக் குறைத்தது. ஆனால் அப்போது அறிவிக்கப்பட்ட ₹10 குறைப்பு, எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றிருந்த இழப்பை ஈடுசெய்யவே என்று ஒன்றிய அரசு தெரிவித்தது எண்ணெய் நிறுவனங்களின் நலனை மட்டும் பாராமல் இப்போது உண்மையிலேயே மக்கள் பயனடையும் வகையில் கலால் வரியைக் குறைக்க வேண்டும்.

வேளாண் கிடங்குகள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து மற்றும் நேரடி விற்பனையை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் நெடுங்காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். பனிரெண்டு ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு இதில் எந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை பொதுவெளியில் வெளியிட வேண்டும். மேலும் விவசாய உற்பத்தி, உணவுச் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவதே நீண்டகாலத் தீர்வாக அமைய முடியும்.

இன்று நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ‘விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது பொருட்களின் விலைகளை மட்டும் குறைப்பதல்ல; மக்களின் வாங்கும் திறனையும் பாதுகாப்பதாகும்.’ எனவே இதற்கான தீர்வுகளை நோக்கி ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து செயலாற்ற வேண்டும். மக்களை சூழப் போகும் உணவுப் பஞ்சத்தில் இருந்து விரைந்து காக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »