தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிப்போம் – மே 17 அறிக்கை

தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிக்கிறோம்! மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதித்திட்டம்! இந்தி பேசும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை நிரந்தர அடிமையாக்கும்! – மே பதினேழு இயக்கம்

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை முன்மொழிந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்னிந்திய மாநிலங்களை அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். அதிக மக்கள்தொகை கொண்ட இந்தி பேசும் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரித்து, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முன்மொழியும் பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த 2002ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 84வது நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதா, முந்தைய நடைமுறையை பின்பற்றி, 1971 மக்கள்தொகை அடிப்படையில், தொகுதிகளை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மாற்றியமைத்தது. அந்த மசோதாவின்படி அடுத்த தொகுதி மறுசீரமைப்பு 2026 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றது. அதனடிப்படையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை கொரானாவை காரணம் காட்டி தவிர்த்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முன்வைத்து 131 வது சட்டத்திருத்த மசோதாவாக நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு திருத்த மசோதாவை இன்று (ஏப்ரல் 16, 2026) சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்கிறது.

இது பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டமாகும். ஒன்றிய அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முன்னணியில் வகிக்கிறது. இதனால் நாட்டின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு அதிக வரிவருவாய் அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, பொருளாதாரம் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேவேளை, இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள்தொகை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு நாட்டை பின்னுக்கு இழுக்கின்றன.

ஆனால், இந்தி பேசாத மாநிலங்களிடமிருந்து பெறப்படும் நிதியை இந்தி பேசும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பொருளாதாரரீதியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நாடாளுமன்ற இடங்கள் 543 என்பதிலிருந்து 850 இடங்கள் வரை கூட்டப்படும். அதற்கேற்ற வகையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிக இருக்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இதனை புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படும் போதே மே பதினேழு இயக்கம் எச்சரித்தது.

நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கும் போது, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அதற்கேற்ப நாடாளுமன்ற தொகுதிகள் வழங்கப்படும். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் தற்போதைய 39 தொகுதிகள் 49 தொகுதிகளாக மாற்றப்படலாம். அதேவேளை தற்போது 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சுமார் 143 முதல் 152 இடங்கள் வரை கிடைக்கும். அதாவது நாடாளுமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் பலம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயரும். தமிழிநாட்டின் பலமோ குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.

இது தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே பாதிப்பை உண்டுபண்ணுகிறது. இதன் மூலம், இந்தி பேசும் மாநிலங்களின் நாடாளுமன்ற பலம் 38.1%-லிருந்து 43.1% ஆக அதிகரிக்கிறது. ஆனால் தென்னிந்தியாவின் நாடாளுமன்ற பலம் 24.3%-லிருந்து 20.7% ஆக குறையும். இப்படியாக தென்னிந்தியாவின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் மாற்றப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களின் தயவு இல்லாமலே எந்த ஒரு கட்சியும் இந்திய ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றலாம். அப்படியான சூழலில் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை பேச அனுப்பப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு எடுபாடாமல் போய்விடும். இந்தி பேசும் மக்களின் சட்டமே தமிழ்நாட்டின் சட்டமாக மாற்றப்படும்.

இவ்வளவு மோசமான ஒரு நடைமுறையை ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை முன்வைத்தே செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற அரசியல் அதிகாரத்தை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் நிரந்தர அடிமையாக மாற்றிவிட முயற்சிக்கிறது பாஜக. ஆனால், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக இதுகுறித்த எவ்வித கவலையுமின்றி இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமை நிரந்தரமாக பறிபோகும் சூழலிலும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிக்கு துணைபோகும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழின விரோத பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்துள்ள அதிமுக, நாதக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்.

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயக விரோதமானது. இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் உரிய அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். மொழிவழி மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் சம விகிதத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமல்லாது, சமூக-பொருளாதார காரணிகளை உள்ளடக்கிய ஒரு மாற்று வழிமுறையே இதற்கு தீர்வை அளிக்கும். அப்படியான ஒரு வழிமுறைதான் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் நிதி ஆணையத்திற்கும் செயல்படுத்தப்பட வேண்டுமென கருதுகிறோம்.

தற்போதைய வடிவிலான தொகுதி மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ள இயலாதது. மக்கள் மன்றத்தில் நீண்டகாலத்திற்கு விவாதத்திற்கு உட்படுத்தி ஒரு தீர்வை எட்டும் வரை, 1971 மக்கள்தொகை அடிப்படையிலான முந்தைய நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தற்போதைய நடைமுறையின் போதாமை குறித்த எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லாதது. நிர்வாக வசதி என்ற பெயரில் நாடாளுமன்ற இடங்கள் கூட்டப்படுவதால் நிர்வாகத்திற்காகவே பெரும் நிதி செலவிடப்படும் நிலையை உண்டாக்கி விடும். ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு நிதி அளிக்கவே இயலாத சூழலில் இந்த முன்னெடுப்பு தமிழ்நாடு போன்ற மாநிலங்களையே பெருமளவில் பாதிக்கும். எனவே ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திரும்பப் பெறுவதோடு, மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை தற்போது இடங்களில் 50% என உயர்த்திட சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்

9884864010

16/04/2026

https://www.facebook.com/share/p/1RV4jw7P7q

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »