மக்களை அரசியல்படுத்திய மே 17 இயக்கத்தின் தமிழ் காப்பு நடைபயணம்

தமிழ் நாடு நாள் விழா மற்றும் தமிழ் மொழி காப்பு நடைபயணம் நிறைவு நாளை முன்னிட்டு ‘நவம்பர் 1, 2026 அன்று திருவாரூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சிறப்புரை:

“நாம் மக்களிடம் சென்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; அவர்களுடன் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார் புரட்சியாளர் மா சே துங். அவ்வாறே தஞ்சையில் மக்களை சந்திக்கவும் அவர்களை அரசியல்படுத்தவும் தமிழ் காக்கும் நடை பயணத்தை ஒருங்கிணைத்தது மே பதினேழு இயக்கம். காவிரி மண்ணில் மன்னார்குடி முதல் திருவாரூர் வரை 100 கிமி பயணத்தை மேற்கொண்டது.

காவிரி படுகை பகுதி மே17 இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்கும் இப்பயணம் தமிழ்மொழி காப்புப் பயணமாக ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனும் முழக்கத்துடன் சிறப்பாக நடைப்பெற்றது. அக்டோபர் 30, 2026 அன்று காலை மன்னார்குடியில் தொடங்கி கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூர் என  நடைபயணம் நிறைவடைந்தது. இறுதியாக திருவாரூரில் நவம்பர் 01, 2026 அன்று ‘தமிழ்நாடு நாள் விழா,  தமிழ்காப்பு நடைபயண நிறைவு’ பொதுக்கூட்டம் நடை பெற்றது. மொழிப்போர் ஈகி சிவா திலீபன் நினைவைச் சுமந்து, அவர் கனவை நடைமுறையாக்கும் முயற்சியை மே பதினேழு இயக்கத் தோழர்கள் முன்னெடுத்துச் சென்றனர்.

30 அக்டோபர் 2026 அன்று மன்னார்குடியில் தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தோழர்கள் ‘தமிழ் காப்பு’ பரப்புரையை மேற்கொள்ளத் தொடங்கினர். ‘அன்னைத்தமிழை அரவணைப்போம், அன்னிய திணிப்புகளை ஒதுக்குவோம்’ எனும் முழக்கத்தோடு மக்களிடையே துண்டறிக்கைகள் வழங்கினர். ஏழை எளிய மக்களின் ஆதரவோடு நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.

இறுதி நாளான நவம்பர் 01ம் தேதி அன்று, திருவாரூரில் நடைபயண நிறைவுநாள் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது. அன்றைய இறுதி நிகழ்வான பொதுக்கூட்ட நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“சிந்துகின்ற செங்குருதி செந்தமிழ் நாட்டுக்கென்றால் அச்செந்தமிழே சிவப்பாகட்டும் என்று சொன்னார் பாவேந்தர் பாரதிதாசன்.

இப்படி ஒரு மொழியை இந்த உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் எந்தக் கண்டத்திலும் எந்த நாட்டிலும் எவனும் கண்டுபிடித்துவிட முடியாது என்கின்ற அளவிலே செம்மொழியாய் உயர்ந்து நிற்கிறது எம்தமிழ் மொழி, எம் தாய்மொழி.

அன்பானவர்களே! தமிழ் மொழிக்காய் நடந்திருக்கிறோம். மக்களைச் சந்திக்க மன்னார்குடியில் தொடங்கி, இன்றைக்கு மூன்றாவது நாளாக திருவாரூரில் தமிழ்காப்பு நடைபயணத்தினுடைய நிறைவு நிகழ்வை இன்றைக்கு நடத்துகிறோம்.

இந்த நாள் ஒரு அருமையான நாள்.

இது தமிழ்நாடு உருவான நாள்.

இது தமிழ்நாடு நாள்.’நவம்பர் ஒன்று’ தமிழர்களுக்கு என்று ஒரு ஆட்சி நிலப்பரப்பு கிடைத்த நாள். ஆங்கிலேயருடைய காலனியாதிக்க காலகட்டத்திலே மெட்ராஸ் மாகாணம் பல்வேறு மொழி, இனங்களை, கன்னடர்களை, தெலுங்கர்களை, மலையாளிகளை இணைத்து மெட்ராஸ் மாகாணம் என்று நம்மை ஒரு நிலப்பரப்பாக, அடையாளம் இல்லாமல் இருந்த  நிலையிலே கன்னடம் பிரிந்தது, ஆந்திரா பிரிந்தது, கேரளம் பிரிந்தது. தமிழ்நாடு என்று தமிழனுக்கென்று ஒரு ஆட்சிப் பரப்பு நமக்குக் கிடைத்த நாள் நவம்பர் ஒன்றாம் தேதி.

ஆகவே தமிழ்நாடு உருவான நாளாக இந்த நாளை ஒட்டுமொத்த தமிழினமும் கொண்டாட வேண்டும். கன்னடர்கள் கொண்டாடுகிறார்கள். இதே நாளிலே கர்நாடகத்தின் எல்லா வாகனங்களிலும், எல்லா வணிகக் கடைகளிலும், கார்பரேட் நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கன்னடர்களினுடைய கொடி பறக்கிறது.

ஆனால் தமிழனுக்கென்று தமிழ்நாட்டுக்கென்று ஒரு கொடி கிடையாது. அந்தக் கொடியை நம்மால் ஏற்ற முடியாது. நமக்கென ஒரு கொடியை அறிவிக்க முடியாது.

ஒரு கிரிக்கெட் கம்பெனிகாரன் கொடி வைத்திருக்கிறான், ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளாக வாழுகின்ற இந்த நிலத்திலே நமக்கென்று ஒரு கொடி கிடையாது. கட்சிகளுக்குக் கொடி உண்டு. கம்பெனிகளுக்குக் கொடி உண்டு. சாதிகளுக்குக் கொடி உண்டு. விளையாட்டு நிறுவனங்களுக்குக் கொடி உண்டு.

ஆனால் தமிழினத்துக்கு கொடி கிடையாது என்றால் எவ்வளவு பெரிய அவமானம். யோசித்துப் பார்ப்போம்! சிந்தித்துப் பார்ப்போம்!

அன்பானவர்களே!

கட்சி அரசியல் மட்டும்தான் அரசியல் அல்ல, தமிழ்நாட்டின் அரசியலை முடிவு செய்தது தேர்தலில் போட்டியிடாத தந்தை பெரியார்தான். அவர் தான் தமிழ்நாட்டினுடைய தலையெழுத்தை முடிவு செய்தார். அவர் தேர்தலில் போட்டியிட்டாரா? சட்டமன்ற உறுப்பினராக மாறினாரா அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாரா? அமைச்சராக அணிவகுத்துச் சென்றாரா? இல்லையே! முதலமைச்சரானாரா? ஒருக்காலும் இல்லையே! ஆனால் தமிழனுடைய தலைவிதியை மாற்றி எழுதினார்.

இந்த நிலத்திற்கு, இந்த மொழிக்கு, இந்த இனத்திற்கான உரிமை என்ன என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் சொல்லிச் சென்றிருக்கிறார். தனது இறுதி நாள்வரை தமிழருடைய உரிமை குறித்து தந்தை பெரியார் சொல்லிச் சென்றிருக்கிறார்.

நாம் எதற்கு இன்றைக்கு தமிழ்க்காப்பு பேரணியை நடத்துகிறோம். ஏன் நடத்துகிறோம்? தமிழ்நாட்டிலே தமிழை காக்க வேண்டும் என்ற ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்! வேறு எந்த மண்ணிலாவது அவனது தாய்மொழியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கூட்டம் நடத்துகிறானா? இயக்கம் நடத்துவானா? அதற்கான பேரணி நடத்துவானா? நாம் நடத்த வேண்டிய நிலையிலே இருக்கிறோம்.

எங்கள் அருமை தோழர், மே பதினேழு இயக்கத்தினுடைய மூத்த தோழர், என்னோடு சிறையிலே இருந்தவர், தமிழினத்திற்காக போராடியவர், எங்களது பொறுப்பாளர் சிவா திலீபன் அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பு இந்தி அழிப்பு போராட்டத்தின் போது சென்னை ரயில்வே நிலையத்திலே, அங்கே தமிழைப் பின்னுக்குத் தள்ளி இந்தியை முன்னுக்கு தள்ளுகின்ற அந்தச் சதியை எதிர்த்து மே பதினேழு இயக்கம் நடத்திய இந்தி அழிப்பு போராட்டத்தில் பங்கெடுத்த சிவா திலீபன், என் தோளோடு தோள் நின்று இந்தி எழுத்துக்களை அழித்த ஒரு மாவீரன்.

அங்கே விரைந்து வந்த தொடர்வண்டியின் முன்னால் பாய்ந்து தன் உயிரைக் கொடுத்தார். என்ன சொல்லி உயிரைக் கொடுத்தார்? “இந்தி வீழ்க, தமிழ் வாழ்க” என்று சொல்லி உயிர் கொடுத்தார். இந்தக் காலத்திலே யார் மொழிக்காக, பொது நலனுக்காக யார் உயிர் கொடுக்க வருவார்கள்? சிவா திலீபன் வந்தார்.

அவர் கொடுத்த உத்வேகம், அவர் காட்டிய வழியில், அவரது முழக்கத்தை, லட்சியத்தை நெஞ்சிலே ஏந்தி மே பதினேழு இயக்கம் தமிழ்க்காப்பு நடைபயணத்தை இன்றைக்கு மூன்றாவது நாளாக நடத்தி இருக்கின்றோம். கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தூரம் தமிழ் மொழியினுடைய முக்கியத்துவம், ஏன் தமிழைப் பயன்படுத்த வேண்டும், கல்வியில் ஏன் தமிழ் வேண்டும், வழிபாட்டிலே ஏன் தமிழ் வேண்டும், வேலையிலே ஏன் தமிழ் வேண்டும், வணிகத்திலே ஏன் தமிழ் வேண்டும், கடைகளின் பெயர் ஏன் தமிழில் இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வேண்டும், ஏன் தூய தமிழை நாம் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் பரப்புரை செய்து இன்றைய இறுதி நாளாக இங்கே வந்திருக்கின்றோம்.

ஊரே பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்திலே தீபாவளி வருகிறது. தீபாவளிக்காக நாங்கள் துணிமணி எடுக்க வேண்டும், இனிப்புகள் வாங்க வேண்டும், உற்றார் உறவினரை அழைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் தயாராகும் காலத்திலே, மொழியை காக்க வேண்டும் என்று எங்கள் மே பதினேழு தோழன் வீதிக்கு வந்திருக்கிறார்.

சிலர் “மொழிக்கு என்ன பிரச்சனை வந்துவிட்டது?” என்று கேட்கிறார்கள்.

எந்த மொழி அதிகாரத்தில் இல்லையோ, எந்த மொழி ஆட்சி மொழியாக இல்லையோ, எந்த மொழி கல்வி மொழியாக இல்லையோ, எந்த மொழி நம் மழலைகளின் பெயரிலே இல்லையோ அந்த மொழி அழிந்து போகும்.

இன்று நாம் நம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. தமிழை எழுதப் படிக்கச் சொல்லுவதில், நம் குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுப்பதில் நமக்கு ஆர்வமில்லை. ஆங்கிலம் படித்தால் வேலை வாய்ப்பு இருக்கிறது என்பதிலே மறுப்பில்லை. ஆனால் தமிழ் படித்தால் வேலை கிடைக்காமல் போய்விடுமா என்ன?

தமிழ் படித்தால் மான உணர்வு வரும். சுயமரியாதை உணர்வு வரும். இனப்பற்று வரும். மனிதப் பற்று வரும். இயற்கை பற்று வரும்.

இந்த உலகத்தை நேசிக்கக்கூடிய அந்த பேரன்பு தமிழில் இருந்துதான் கிடைக்கும். தமிழ்தான் கற்றுக் கொடுக்கும். தமிழ் அனைத்தையும் கற்றுக்கொடுக்கும். அப்பேர்ப்பட்ட மொழியில் இல்லாத சொற்கள் இல்லை. இந்த மொழி சாதாரணமாக வளர்ந்து வரவில்லை.

ஒவ்வொரு துறையிலும் இந்த மொழி தனக்கான சொற்களை உருவாக்கி வைத்திருக்கிறது. நீங்கள் எந்த துறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பொறியியல்துறை, கட்டிடக்கலை, கணக்கியல் துறை, வானவியல், அறிவியல், மருத்துவம் என அத்தனை துறைகளிலும் அதற்கான சொற்கள் இருக்கின்றன. வேறு என்ன வேண்டும்?

நாம் இந்த மொழியை பாதுகாக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். சிந்திக்க வேண்டும். தமிழைப் பேசுவதில் நமக்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழர் என்று சொல்வதில் நமக்கொரு இறுமாப்பு இருக்கிறது. அது நமக்குத் தேவை.

இன்றைக்கு வங்கிக்கு சென்றால் அங்கே இந்தி மொழி பேசக் கூடியவர்தான் மேலாளராக இருக்கிறார், அவர் தான் நிர்வாகியாக இருக்கிறார். அவரிடத்தில் நம் விவசாயி சென்று கடன் கேட்டுவிட முடியுமா? வங்கி கணக்கை திறக்க முடியுமா? தனக்கு தேவையானதை கேட்க முடியுமா? கிடையாது.

திருவாரூர் இரயில் நிலையத்தில் எதற்கு இந்தி என்று நாம் கேட்கவேண்டும். உத்திரப்பிரதேசத்தில், அயோத்தியில், காசியில், போபாலில், டெல்லியில் தமிழை வைத்திருக்கிறாயா? இல்லை…

நாம் எதற்கு இந்தியை எதிர்க்கிறோம் என்றால் அவன் நமக்கு எஜமானன் என்று காட்டுவதற்காக அவன் மொழியை நம் ஊரில் எழுதி வைத்திருக்கிறான். தமிழனுக்கு எவனும் எஜமானன் இல்லை. தமிழனுக்கு டெல்லி எஜமானன் கிடையாது. இதை நாம் ஒரு காலத்திலும் மறந்து விடக்கூடாது.

உனது மொழியை எதற்கு என் மீது திணிக்கின்றாய்? நீ கொடுக்கக்கூடிய வரியைப் போலத்தான் நானும் கொடுக்கிறேன். ஆனால் உன் மொழிக்கு இருக்கக்கூடிய மரியாதை என் மொழிக்கு இல்லை என்றால், உன் மொழித்திணிப்பை அழிப்பதைத் தவிர எனக்கு வேறு வேலை இல்லை.

என் நிலத்தில் என் மொழிதான் இருக்க வேண்டும். இதை மொழிவெறி என்று சொல்கிறார்கள். எனது நாட்டில் எனது தாய்மொழி வேண்டும் என்று சொல்லுவது மொழிவெறி என்று சொன்னால், எனது நாட்டில் உனது மொழிதான் இருக்க வேண்டும் என்று நீ சொல்வதை என்னவென்று சொல்வது?

உன் ஊரில் உன் மொழியை வைத்துக்கொள். என் ஊரில் என் மொழிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அந்நிய மொழியை இங்கே அழகுபட வைத்தால், அந்த மொழி நம்மை அடிமைப்படுத்துகின்ற ஒரு மொழியாகத்தான் நாம்பார்க்க வேண்டும்.

அவன் ஏன் அவன் மாநிலத்தில் தமிழை வைக்கவில்லை என்றால் ‘நாங்கள் தமிழுக்கு கீழ்ப்படிந்தவர்கள் அல்ல’ என்று சொல்லித்தான் அவன் தமிழை வைக்கவில்லை. அப்படி இருக்கும் போது நாம் மட்டும் எதற்கு இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்?

இந்தி படிக்காததால் தான் தமிழன் இன்றைக்கு அமெரிக்காவிற்கு போகிறான், ஐரோப்பாவிற்கு போகிறான், பல நாடுகளில் வேலை செய்யப் போகிறான். இந்தியை மட்டும் படித்த காரணத்தினால் தான் இங்குப் பாணிபூரி விற்பதற்காக உழைப்பாளிகள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள்.

இந்திகாரனுக்கு அவன் ஊரிலேயே வேலை கிடைக்கவில்லை என்றால், நம் ஊரில் இந்தி படித்து ஒருவருக்கு என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது? இன்று இந்தி படித்தால் தான் நீ இந்தியன் என்று அவன் சொல்கிறான். நான் ஒன்று கேட்க விரும்புகின்றேன். இந்தியாவிற்கு தமிழ்நாடு எத்தனையோ கொடை கொடுத்திருக்கிறது, உயிர் கொடுத்திருக்கிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக போர் புரிந்திருக்கிறார்கள் தமிழர்கள். வரி கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவை கட்டி எழுப்புவதற்கு வேலை செய்திருக்கிறார்கள். கட்டுமானத்தை செய்திருக்கிறார்கள்.

எல்லாம் செய்த தமிழனுக்கு இந்தியா என்ன கொடுத்தது? நான் அதைக் கேட்கிறேன். பள்ளிக் கூடம் கொடுத்தானா? பல்கலைக்கழகத்தைக் கொடுத்தானா அல்லது ரயில்வே கட்டமைப்பை கொடுத்தானா? வங்கியில் நமக்கு கடன் கொடுத்தானா? என்ன கொடுத்தான்? வேலை கொடுத்தானா? அதிகாரத்தைக் கொடுத்தானா? ஆட்சி மொழியாக தமிழை ஆக்கினானா? எதுவும் கிடையாது.

காவிரியின் தண்ணீரை மறுத்தான். தமிழ்நாட்டு மீனவனுக்கு மீன் பிடிக்கிற உரிமையை மறுத்தான். தமிழர்களுடைய நிலத்திலிருந்து அவனது கனிம வளத்தை எடுப்பதற்கான அனைத்தையும் செய்து முடித்தான். இதே காவிரி சமவெளியில் ONGC பெட்ரோல் எடுக்கிறான், நெய்வேலியில் நிலக்கரி எடுக்கிறான், ஆனால் நமக்கு மின்சார பற்றாக்குறை இருக்கிறது.

ஆனால் நெய்வேலி நிலக்கரி அவனுக்குத் தேவை. காவிரியில் விவசாயத்திற்கு நீர் விடுவதற்கு, கர்நாடகத்தை அழுத்தம் கொடுப்பதற்கு டெல்லிக்காரனுக்கு வலிக்கிறது. ஆனால் காவிரி டெல்டாவில் ONGC எண்ணெய் வளத்தை உறிஞ்சுவதற்கு எந்தத் தடையும் கிடையாது.

இதை எதிர்த்துப் போராடினால் பத்து ஆண்டு சிறை. நமது நாட்டில் நாம் அடிமைப்பட்டுதானே கிடக்கின்றோம்.

இன்று  RSSகாரன் ஊர்வலம் நடத்துகிறான். இந்தத் தேசத்தை இந்துக்களின் தேசமாக மாற்றுவோம் என்று சொல்கிறான். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொல்லி தமிழன் போராடியபொழுது கர்நாடகத்தில் வசித்த தமிழனை RSSகாரன் அடித்தான். அவன் இன்று தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்துகிறான். இந்த அவமானத்தை விட வேற என்ன அவமானம் இருக்க முடியும்?

நமக்கு தண்ணீர் தேவை என்று இந்த RSSகாரன் ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டத்துக்கு வரவில்லை. ஒரு  போஸ்டர் போட்டு இருப்பானா? இல்லை. இத்தகைய RSS காரன் ஊர்வலம் நடத்தினால் ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் அவனைத் திருப்பி அடிக்க வேண்டும்.

சுயமரியாதை, மான உணர்வு உள்ளவன் அதைத்தான் செய்ய வேண்டும். நம்ஊரில் இந்த நரிக்கூட்டம் ஊர்வலம் நடத்துவதை நாம் வேடிக்கை பார்க்கலாமா?

RSSகாரன் தீபாவளிக்கு இந்துக்களின் கடையில் பொருள் வாங்க சொல்கிறான். “தமிழரின் கடையில் மட்டும் பொருள் வாங்குங்கள். மார்வாடி கடையிலே பொருளை வாங்காதீர்கள்” என்று நாம் சொல்கிறோம். காந்தி அடிகளை படுகொலை செய்தவன், காமராஜரை கொலை செய்வதற்காகச் சென்றவன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை காட்டிக் கொடுத்தவன் RSSகாரன்.

திருவாரூர் மக்களே!

மறந்து விடாதீர்கள்!!

இந்தத் துரோகக் கும்பலை விரட்டி அடிக்கவில்லையென்றால் திருவாரூரை மத ரீதியாக ஜாதி ரீதியாக கூறு போடுவான் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதுதான் கோயம்புத்தூருக்கு நடந்தது.

RSS காரன் தமிழ்நாட்டுக்காக என்ன செய்தது? தமிழர்கள் தமிழன் என்கின்ற உணர்வோடு இருக்கிற வரைக்கும் தான் தமிழ்நாட்டு உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

என்று மத ரீதியாக இவர் இந்து, இவர் கிறிஸ்துவர், இவர் இஸ்லாமியர், இவர்கள் ஒன்றாய் இருக்கக் கூடாது, இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் முன்னுரிமை பெறக் கூடாது என்ற ஒரு கருத்து இங்கே தமிழர்கள் மத்தியிலே பரப்பப்பட்டால் தமிழன் வீழ்ந்து போவான். தமிழ் தேசியம் தாழ்ந்து போகும். திராவிடம் அழிக்கப்படும்.

திராவிடம் என்ன சொல்லுகிறது?

நீ இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்தவனா என்பது பிரச்சனை இல்லை.

நீ இந்தச் சாதியா, அந்தச் சாதியா என்பது பிரச்சனை இல்லை.

தமிழை முன்னிலைப்படுத்து, தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்து என்று சொல்லுகிறது திராவிடம். அதைத்தான் தமிழ் தேசியம் சொல்லுகிறது. பெயர்தான் வேறு வேறு. இரண்டுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

தமிழ் தேசியத்தினுடைய முதல் படி திராவிடம். கல்வி, வழிபாடு என எந்த இடத்திலும் வடமொழி தேவையில்லை, சமஸ்கிருதம் தேவையில்லை என்று திராவிடம் சொல்கிறது. அடுத்தபடியாக தமிழை அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்தில் தமிழ், கோவிலில் தமிழ், பள்ளியில் தமிழ், வாழ்க்கையில் தமிழ், குழந்தைகளின் பெயர் தமிழ் என்ற அனைத்து இடத்திலும் தமிழை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு தமிழ் தேசிய அரசியலுக்கு முதல் படி திராவிடம். இதை மறந்து விடக் கூடாது.

வடநாட்டுக்காரன் தன் குழந்தைகளுக்கு தமிழ் மொழியிலே பெயர் வைக்கிறானா? முருகன் என்று பெயர் வைப்பானா? பாஜகவிற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? குறிஞ்சி நிலத்தின் தலைவன் முருகன். அந்தத் தலைவனை நாம் கொண்டாடுகின்றோம். கடவுள் என்று சொல்லவில்லை. மூத்தவர் என்று சொல்லுகிறோம். முன்னோர் என்று சொல்லுகிறோம்.

நமக்கு மூத்தோராக இருக்கக்கூடியவர்கள், நமது முன்னோராக இருக்கக்கூடியவர்கள், நமக்குக் குல தெய்வமாக இருக்கக்கூடியவர்கள். சனாதனத்திற்கு குல தெய்வம் கிடையாது. குல தெய்வம் இல்லாத மரபு தமிழ் மரபு கிடையாது. நாம் வேறு; அவர்கள் வேறு. சனாதனத்திற்கு எதிரானவர்கள் தமிழர்கள். நம் வரலாறைத் தெரியாமல் சங்கிகள் பின் சென்றால் அவன் உங்களை அடிமை நாயாக இழுத்துக் கொண்டு போவான். கலவரம் செய்ய அழைத்துச் செல்வான்.

கோவில், தெப்பக்குளம் போன்ற கட்டுமானம் தெரிந்தவன் தமிழன். நீரியியல் தெரிந்தவன். தஞ்சையில் நெற்களஞ்சியம் இருக்கிறது. அதன் மூலம் செல்வம் கிடைக்கிறது. அந்த செல்வத்தைப் பாதுகாக்க ஒரு காஜானா போல் கோவில் காட்டப்படுகிறது. கோவிலில் தங்க நகைகளும் பூட்டும் அதைப் பாதுகாக்கவே…ஆனால் அந்த கஜானாவின் சாவி பார்ப்பனர் கைக்கு சென்று விட்டது. அறநிலையத்துறை கையில் இருக்கும் கோவிலை பூஜை செய்வோரிடம் கொடுக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கூறுகின்றன. கோவில் சொத்துக்களையும் ஒப்படைக்க சொல்கிறான். ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் அவன் கொள்ளையடிக்க நினைக்கிறான். அதனால் தான் திராவிட இயக்கம் கோவிலை அரசிடம் ஒப்படைத்தது. இந்த அறநிலையத்துறையைத்தான் அவன் ஒழிக்க நினைக்கிறான். பக்தி எனும் பெயரில் பல்வேறு சாமிகளைக் காண்பித்து மக்களை முட்டாளாக மாற்றுகிறான்.

இன்று அசைவ உணவை அசுத்தம் என்று கூறுகிறான். தமிழ்நாட்டில் 97 % அசைவ உணவை உண்போர் தான். உணவிற்கும் பக்திக்கும் தொடர்பு கிடையாது. முருகனுக்கு எவ்வாறு படையல் போட வேண்டும் என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டிருக்கிறது. ஆட்டின் இரத்தத்தை சோற்றில் பிசைந்து வைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏனெனில் முருகன் குறிஞ்சி நிலத் தலைவன். வள்ளி குறத்தி வேட்டையாடும் சமூகத்தைச் சேர்ந்தவர். பின் முருகன் எவ்வாறு சைவமாக மாறினார்? யார் மாற்றினார்கள்? அசைவம் உண்ட முருகனை வழிபடும் போது அசைவம் சாப்பிடக் கூடாது என்று கூறியது யார்?

உழைக்கும் மக்கள், விவசாயம் செய்யும் மக்களுக்கு புரத சத்து அசைவத்தில் இருந்து தானே கிடைக்கும்! நம் உணவு விடயம் வரைக்கும் வந்த பாஜக, நாளை நம் உடை விடயத்திலும் குறுக்கிடும். நீ சட்டை அணியக் கூடாது, கோவனம் தான் கட்ட வேண்டும் என்று சொல்வான். இன்று வெள்ளைக்காரன் மாட்டுக்கறி உண்கிறான். மாட்டுக்கறியில் தான் சோளின் (choline) என்ற சத்து இருக்கிறது. அந்த சோளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதனால் மாட்டிறைச்சி உண்டவன் நோபல் பரிசு வாங்குகிறான். ஆனால் சாஸ்திரத்தை படித்ததாகக் கூறும் சங்கி நோபல் பரிசு வாங்கினானா?  இல்லை.

இன்று நாம் பொருட்கள் வாங்கச் செல்லும் கடைகளை நாம் சாதி, மதமாகப் பிரிப்பதில்லை. ஆனால் அவன் மார்வாடி கடைகளையும் இந்துக் கடைகளாகக் கூறுகிறான். நாம் “மார்வாடி கடை வேண்டாம், தமிழர் கடையில் வாங்குவோம்” என்று கூறுகின்றோம். ஏனெனில் எந்த தமிழர் கடையிலும் மார்வாடி பொருள் வாங்குவதில்லை. மார்வாடி  சம்பாதிப்பதில் பத்து பேசா தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் செலவு செய்திருப்பானா? இல்லை. ஆனால் சங்கிகளுக்குத் தருகிறான்.

 தமிழ்தான் நம்மை இணைக்கிறது. தமிழ்தான் நம்மை வளர்க்கிறது. தலைநிமிர்ந்து நிற்க வைக்கிறது. தமிழனுக்கு சுய சிந்தனையையும் சுயமரியாத உணர்வையும் ஊட்டியவர் தந்தை பெரியார். உலக அளவிலே தமிழன் வீரத்திற்குப் புகழ் பெற்றவர் என்று சொன்னவர் மேதகு பிரபாகரன். அவரைவிட உயர்ந்த தலைவன் எங்கிருக்கிறான்? அவரைவிட ஒப்பற்ற வீரன் எங்கிருக்கின்றான்? அவர் நேர்மையின் சிகரம், அப்பழுக்கற்றவர். தமிழனத்தை நேசித்தவர். தன் 12 வயது பாலகன் பாலச்சந்திரனை சிங்களவர் கொலை செய்வார் என்று தெரிந்தே அனுப்பினார். தனது குடும்பத்தை பலி கொடுத்தார். இதை வேறு யார் செய்வார்? இந்த இனத்தின் விடுதலைக்காக போராடியவன், இந்த நிலத்தின் தலைவன் பிரபாகரன். எந்த இடத்திலும் ஒரு வினாடி கூட தலை குனியாது தலை நிமிர்ந்து நின்ற ஒரு மாபெரும் தலைவன் பிரபாகரன்.

அவரை யார் கொன்றார்கள்? சிங்களவனோடு யார் சேர்ந்து இந்திய அரசு கொன்றது. காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து தான் அழித்தார்கள். RSSகாரன் என்றாவது மேதகு பிரபாகரனுக்கு வீர வணக்கம் வைத்திருக்கானா? இல்லை. தமிழ் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத சாவர்க்கர் படத்தைத் தூக்கிக் கொண்டு இன்று RSSகாரன் இங்கு ஊர்வலம் போகிறான். அவன் பின்னால் ஒரு முட்டாள் கூட்டம் செல்கிறது. இதைத் தட்டி கேட்க யாருமில்லை என்று நினைத்து விடாதீர்கள்….

மே பதினேழு இயக்கம் இருக்கிறது. நாங்கள் ஓட்டு கேட்டு வரவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பதினேழு ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் மக்கள் பணி ஆற்றி வருகிறது. தமிழுக்காக உயிர் கொடுத்த தோழர் சிவா திலீபன் வழியில் வந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். ஒரு அறிவார்ந்த இயக்கமாக செயல்படுபவர்கள். ஒழுக்கத்தின் அடையாளமாகத் திகழ்பவர்கள். நாங்கள் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிப்போமே தவிர இந்திய தேசிய கட்சிகளுக்கு ஒருபோதும் துணை போவதில்லை. கூட்டு வைக்கப் போவதில்லை.

நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம்… தமிழினத்திற்காக உழைக்கிறோம்…. எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். அடக்குமுறையை மீறி நிற்கின்றோம். வழக்குகள் எங்களை தடுத்ததில்லை. இங்கே கருத்தியலும் கொள்கையும் தான் எங்கள் தலைமை.

இந்த இனத்தின் விடுதலையை அடைவதுதான் எங்கள் இலக்கு. பாசிசத்தை வீழ்த்த நாம் படை திரள்வது அவசியம். நமது மண்ணில் எதிரி ஊர்வலம் போகிறான், இனிமேலும் நாம் கைகட்டி நிற்க போகிறோமா? ஈழத்தில் நம் இனம் அழிக்கப்பட்டபோது நம்மால் தடுக்க இயலவில்லை. அதே போல் தமிழ்நாட்டில் தமிழினம் அழியும் முன் நாம் படை திரள்வது அவசியம். இந்த இனத்தின் விடுதலை முழக்கமாக ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் முழக்கம் இருக்கும்.

இந்த மூன்று நாள் பயணத்தில் மக்கள் எங்களை வாரி அணைத்துக் கொண்டார்கள். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எனவே தோழர் சிவா திலீபன் எங்களுக்கு விட்டுச் சென்ற பணியை நாங்கள் நிறைவேற்றிக் கொடுப்போம் என்று கூறி விடை பெறுகிறேன்…

நன்றி! வணக்கம்!! “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »